Skip to main content

உனது இதயம் நலமா? - சார்லஸ் புக்கோவ்ஸ்கி



எனது மோசமான சந்தர்ப்பங்களில்

பூங்கா பெஞ்சுகளில்

சிறைகளில்

அல்லது

விலைப்பெண்களுடன் வாழும்போது

எப்போதும் குறிப்பிட்ட திருப்தியுடன்

இருந்திருக்கிறேன்

அதை நான் மகிழ்ச்சி என்று சொல்லமாட்டேன்

என்னதான் நடந்தாலும்

தரித்திருக்கும் அகச் சமநிலை போன்ற

அது

தொழிற்சாலைகளில், பெண்களுடன்

உறவுகள் சீர்குலையும்போது

உதவியிருக்கிறது. 


மோதல்களில் முந்தினநாள் மிகு குடியால்

ஏற்பட்ட தலைவலிகளில்

புழக்கடைச் சந்துகளில் நடக்கும் சண்டைகளில்

மருத்துவமனைகளில்.


மலிவான அறையில் கண்திறக்கும்போது

தெரியாத நகரத்தில் எழுந்து

ஜன்னல் திரையை விலக்கிப் பார்க்கும்போது

இருந்த வினோதமான திருப்தி அது


பழைய ஒப்பனை மேஜையை நோக்கி

தரையிலிருந்து எழுந்து

விரிசலுற்ற கண்ணாடியில்

என்னை, அசிங்கமாக,

சிரித்தபடி பார்ப்பது 


நெருப்பில் நடக்கும்போது 

எவ்வளவு சீராய் கடக்கிறீர்கள்

என்பதுதான் எல்லாவற்றிலும் முக்கியமானது. 

Comments