Skip to main content

தங்க பாக்கெட் கடிகாரம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


என் தாத்தா வினோத நெடியுடைய

சுவாசத்தைக் கொண்ட உயரமான ஜெர்மானியர்

அவரது சிறிய வீட்டின் முன்பாக

விரைத்து நிமிர்ந்து நின்றார்

அவரது மனைவியும் அவரை வெறுத்தார்

அவரது குழந்தைகளோ 

அவரைத் தனி என்று கருதினர்

நாங்கள் சந்தித்துக் கொண்டபோது

எனக்கு வயது ஆறு

அவர் தன்னுடைய எல்லா போர் பதக்கங்களையும்

எனக்கு அளித்தார்.

இரண்டாவது முறை நான் அவரைச் சந்தித்தபோது

அவருடைய தங்க பாக்கெட் கடிகாரத்தைத் தந்தார்.

அது மிகவும் கனமாக இருந்தது

வீட்டுக்கு அதை எடுத்துவந்து

இறுக்கத் திருக்கியதால்

ஓடுவதை நிறுத்திக்கொண்டது

என்னை மிகவும் சங்கடப்படுத்தியது.

நான் அவரைத் திரும்பப் பார்க்கவில்லை

அதோடு எனது பெற்றோர்கள் 

அவரைப் பற்றிப் பேசவேயில்லை

எனது பாட்டியும் 

வெகுகாலம் முன்பே அவள் அவரிடத்திலிருந்து

பிரிந்துவந்து விட்டாள்.

ஒருமுறை தாத்தா பற்றிக் கேட்டபோது

அவர் அதிகம் குடித்ததாகச் சொன்னார்கள்

ஆனால் எனக்கு அவரை மிகவும் பிடித்தது

அவர் வீட்டுக்கு முன்னால் விரைப்பாக நிமிர்ந்து நின்று

என்னிடம்

“ஹலோ ஹென்றி, நீயும் நானும் நம்மை பரஸ்பரம் அறிவோம்"

என்றார்.

Comments