அந்த டாக்ஸி அந்த ஆஸ்பத்திரி முன் நின்றது.
அது ஒரு மாதிரியான ஆஸ்பத்திரி; உயிருடன் இறந்தவர்கள் இங்கு வருகிறார்கள். டாக்ஸியிலிருந்து மூவர் இறங்கினர்; ஒருவருக்கு வயது 75 ; ஒருவருக்கு 55 ; ஒருவருக்கு 50 . அவர்கள் முகச்சாயலிலிருந்து அவர்கள் தந்தையும் புதல்வரும் என்பது வெளிப்படை.
டாக்டர் அறைக்குள் பெரியவர் இரண்டாவது பையனை நிறுத்திவிட்டு மூத்தவனுடன் உட்சென்றார். அவனும் ஒன்றும் சொல்லவில்லை; அவன் முகத்தில் ஒரு பாவமும் இல்லை; அவன் முகம் கருங்கல் மாதிரி இருந்தது; இப்படியும் ஒரு முகமா? ஒரு அரைமணி நேரத்திற்குப் பிறகு, ஆஸ்பத்திரி வேலைக்காரன் அவனையும் உள்ளே போகச் சொன்னான்.
அவன் சென்றான்.
டாக்டர் : (அவனிடம் பெரியவரைச் சுட்டிக்காட்டி) இவர் யார்?
அவன் : தெரியாது.
டாக்டர் : (மூத்த சகோதரனைக் காட்டி) அவர் யார்?
அவன் : தெரியாது.
டாக்டர் : உனக்கு அப்பா எங்கே இருக்கிறார் தெரியாதா?
அவன் : டாக்டர், எனக்கு அப்பா கிடையாது.
டாக்டர் : அண்ணா?
அவன் : அண்ணாவும் கிடையாது.
டாக்டர் : இவர்கள் யார்?
அவன் : எனக்கு இவர்கள் யாருமில்லை. (பெரியவரும் மூத்த பையனும் டாக்டரைப் பார்க்கிறார்கள்)
டாக்டர் : உன் மனைவி?
அவன் : எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. தேவையும் இல்லை.
(டாக்டர் பெரியவர் முகத்தைப் பார்க்கிறார்)
அவர் : அவன் சொல்வது சரிதான்.
டாக்டர் : அம்மா?
டாக்டர் : (மீண்டும்) உன்னைத்தான் கேட்கிறேன். உனக்கு அம்மாவைத் தெரியுமா? உனக்கு அம்மா உண்டா?
அவன் பேசாமலிருக்கிறான். டாக்டரும் பேசாமலிருக்கிறார். பிறகு பெரியவரிடம் : அட்மிட் செய்துவிடுகிறேன். நீங்கள் போகலாம்.
அவர்கள் போகிறார்கள். இவன் அவர்களுடன் போகவில்லை. ஆஸ்பத்திரி சேவகன் அவனை அழைத்துச் சென்றான். அவன் அவனைத் தொடர்ந்தான். டாக்டர் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நெற்றியைச் சுளித்துக் கொண்டு ஒரு ஸிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, உதட்டைப் பிதுக்கினார். அவ்வளவுதான்.
டாக்ஸியில் மூத்தவன் : அப்பா, பைத்தியங்கள் எல்லாம் சீக்கிரம் சாகமாட்டார்கள். அவன் குணமடைவனான் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
அவர் : நீ பேசாமலிரு.
அவர்கள் காரைவிட்டு இறங்கினார்கள். பெரியவர் தன் மனைவி வாசலில் தங்களைப் பதட்டத்துடன் எதிர்பார்த்து நிற்பதைப் பார்த்தார்.
(சதங்கை இதழில் 1975-ல் வெளியான சிறுகதை)
Comments