Skip to main content

நீ எல்டொராடோவைத் தேடிக் கொண்டிருந்தாய் என்றால்


உலகின் தலைசிறந்த சினிமாக் கலைஞர்களில் ஒருவரான வெர்னர் ஹெர்சாக்கின் ‘அகிரே: தி ராத் ஆப் காட்’ திரைப்படத்தைப் பற்றி நண்பர் விஜய ராகவன் சில ஆண்டுகளுக்கு முன்னர் பரிந்துரைத்தும், ஆண்டஸ் மலைத்தொடரில் ஸ்பானியப் படையினர் எறும்புகளைப் போல இறங்கிவரும் காட்சியிலேயே அலுப்புற்று பார்க்காமல் விட்டுவிட்டிருந்தேன். ஊரடங்கு காலத்தில் வெர்னர் ஹெர்சாக்கின் ‘இன் டூ தி இன்பெர்னோ’ ஆவணப்படம் ஏற்படுத்திய நீடித்த தாக்கத்தின் அடிப்படையில் மீண்டும்  ‘அகிரே: தி ராத் ஆப் காட்’ திரைப்படத்தை மீண்டும் பார்ப்பதற்குத் தலைப்பட்டேன்.

உலகமெங்கும் இருக்கும் எரிமலைப் பிரதேசங்களுக்குச் சென்று, இயற்கையின் அழிவு மூர்க்கத்தை அருகிலிருந்து காட்டும் ஆவணப்படம் ‘இன் டூ தி இன்பெர்னோ’.ராட்சதத் தன்மை கொண்ட இயற்கையின் தாடைகளுக்கு ஒரு டினோசர் கூட சவைத்துத் துப்பும் குட்டிச் சுவிங்கம் தான். ஒரு பெரிய மலைப்பாம்பு போல சுழித்து ஓடும் எரிமலைக் குழம்பின் அனலுக்கும் தனலுக்கும் முன்னால் மனித எத்தனம் இன்றும் தோற்று நிற்கிறது.  அதே இயற்கையின் முன்பு நாடுகளை வெல்லப் புறப்பட்டவர்கள் துரும்பாக அழிவதைக் காட்டும் கதைப்படம்   ‘அகிரே: தி ராத் ஆப் காட்’.

ஸ்பெயின் நாட்டிலிருந்து மெக்சிகோ மற்றும் பெரு பிரேதசங்களை வெற்றிகொள்வதற்காக அனுப்பப்பட்ட பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தளபதி லோப் ட அகிரேவின் நினைவுக்குறிப்புகளாக விரியும் கதை இது.

ஆபத்துகளும் மர்மமும் சூழ்ந்த அமேசான் காடுகள் இருபுறமும் நெடிதுயர்ந்து, பசுமையே பயங்கரமாகத் தெரிய,  நுரைத்துக் கொந்தளிக்கும் காட்டாற்றில் தெப்பங்கள் வழியாகப் பயணித்து, தங்கமும் வளங்களும் இருப்பதாகச் சொல்லப்படும் புராணிக நகரமான எல்டொராடோவை தளபதி லோப் ட அகிரேவும் அவனது படையினரும் செவ்விந்திய அடிமைகளும் தேடி மாளும் கதை தான் அது.

துவக்கமே ஆண்டஸ் மலையின் பாதையில் போர் வீரர்கள் தீனிக்கான விலங்குகள், அடிமைகள், மன்னர், இளவரசி, ராணியோடு இறங்கும் காட்சி நிதானமாக நமது கண்களுக்கு முன்னர் நிகழ்கிறது. எறும்புகளைப் போல மலையின் முன்னர் மனிதர்கள் உதிர்வது போன்ற காட்சி நெருக்கமாகக் காண்பிக்கப்படுகிறது. ஆவணப்படக் காட்சியமைப்பை உள்வாங்கிய இத்திரைப்படத்தில் இயற்கையின் பிரமாண்டத்துக்கு முன்னர் மனிதர்கள் குள்ளர்களாகின்றனர். அதிகாரம், குரோதம், பசி, வேட்கை எல்லாமே விலங்கு மூர்க்கத்துடன் ஒயிலாக்கம் இல்லாமலேயே நடிகர்களை நம் முன்னர் நிகழச் செய்துள்ளார். சினிமா சென்ற நூற்றாண்டில் அடைந்த நேர்த்தியை பிரக்ஞைபூர்வமாக கழற்றிவைத்து உருவாக்கப்பட்ட படமென்று தெரிகிறது. ஆற்றில் சுழிக்கும் போக்கில் தெப்பம் ஆடுவது போல நடிகர்களை நடுக்கம், பாதுகாப்பின்மையின் நுனியில் வைத்து இயக்கியுள்ளார் வெர்னர் ஹெர்சாக். 

பயணத்தின் பாதையில் கருத்து வேறுபாடு, மோதல், செவ்விந்தியர்களிடமிருந்து தாக்குதல், மரணங்கள் எல்லாம் நடக்கிறது. ஒருகட்டத்தில் இந்தப் பயணம் வெற்றிபெறாத என்ற நிலையில் மறுபடியும் திரும்பிவிடலாம் என மூத்த தளபதி ஊர்சுவா சொல்ல, தளபதி லோப் ட அகிரே அதற்கு அடிபணிய மறுத்து கலகம் செய்கிறான். அடிபணிய மறுத்தால் தான் எல்டொராடாவை அடைய முடியும் என்று வீரர்களை நம்பச்செய்து ஊர்சுவாவைச் சுடச் செய்கிறான். இலக்கை அடைய முண்டும் வேட்கை படிப்படியாக பைத்தியக்கோலம் கொள்கிறது.   

வரலாற்றில் அடையப்படாத பொன்னகரகமாகத் திகழும் எல்டொராடாவை நோக்கி அத்தனை இழப்புகளையும் தாண்டி தளபதி லோப் ட அகிரேவின் பயணம் தொடர்கிறது. குதிரைகள், அடிமைகள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என எல்லாரும் இறந்துபோக, அமேசான் காட்டிலிருந்து வந்த அம்புகளுக்கு கடைசியில் தளபதி லோப் ட அகிரேவின் மகளும் பலியாகிறாள். 

கடைசியில் உணவின்றி, மீதமிருந்த வீரர்கள் அனைவரும் சடலங்களாக தெப்பத்தில் கிடக்க அமேசான் காட்டின் குரங்குகள் அவனது தெப்பம் முழுவதையும் குட்டிக் குட்டியாக புழுக்களைப் போல  நெளிந்து நிறைக்கிறது. தளபதி லோப் ட அகிரே, பைத்தியத்தின் உச்சியில், “நான் கடவுளின் சீற்றம். எனது தனது மகளைத் திருமணம் செய்வேன். இதுவரையில் இல்லாத தூய்மையில் ஒரு பேரரசை உருவாக்குவேன். நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டம் முழுவதையும் ஆள்வோம். நான் கடவுளின் சீற்றம்...என்னுடன் வேறு யார் இருக்கிறார்கள்?” என்று ஒரு குரங்கைக் கையில் பிடித்துச் சொல்கிறான். 

குரங்கு எந்தப் பதிலும் சொல்லாமல் போக அது தூக்கி எறியப்படுகிறது. 

இயற்கையின் பிரமாண்டத்துக்கு முன்னர் பேருருவம் கொள்ள நினைத்த மனிதன் என்ன ஆகிறான் என்பதைத் தான் அந்தக் குட்டியூண்டு குரங்குகள் சொல்கின்றன எனக்கு. அவை எல்லாம் மனிதன் கொண்ட தன்னிலையின் குட்டிப் பிரதிநிதிகளாக மீண்டும் சிதறி தனது வனத்துக்குள் சென்று கலந்துவிடுகின்றன. 

எல்டொராடோ, கபாடபுரத்தைப் போல கதைகள் வாயிலாக வரலாற்றில் இருந்த பொன்னகரம் என்று இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பின்னரே அறிந்துகொண்டேன். இந்த உள்ளடக்கத்தை வைத்து எட்கர் ஆலன் போ எழுதிய கவிதை ஒன்று இதற்குப் பின்னர் எனக்குக் கிடைத்தது. ஆமாம், மனிதனை நெடிதாகத் தோற்கடிப்பது அவனது வலிமைதான்.


உற்சாகி ஆராதனைக்குரியவன்

அவன் தீரமுள்ள வேந்தன்

பட்டப்பகலிலும் சாயங்காலத்திலும்

அவன் நெடுந்தொலைவு பயணித்திருந்தான்

எல்டொராடோவைத் தேடி

ஒரு பாடலைப் பாடியபடி.


ஆனால் அவனோ முதுமையை அடைந்தான்

தைரியமானவன் இந்த வேந்தன்

அவனின் இதயத்தில் ஒரு நிழல் விழுந்த போது

நிலத்தின் ஒரு புள்ளியில் கூட

அது எல்டொராடோவைப் போல் இல்லை. 


அந்த நிழல் அவனது வலிமை போன்று

நெடிதாக அவனைத் தோற்கடித்த வேளையில்

யாத்ரீகனின் நிழலொன்றை அவன் சந்தித்தான்

'நிழல்' என்று உரைத்தான் அவன்

அது எங்கே இருக்க முடியும்-

எல்டொராடோவின் இந்த நிலத்தில். 


மலைகளின் மீது

நிலவில்

நிழல் பள்ளத்தாக்குக்குக் கீழே

சவாரி செய், தைரியமாகச் சவாரி செய்

அந்த நிழல் பதிலளித்தது

நீ எல்டொராடோவைத் தேடிக் கொண்டிருந்தாய் என்றால்.

- எட்கர் ஆலன் போ

Comments