Skip to main content

இருளை அணை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


கலக்கமே கடவுள்

பைத்தியம்தான் தெய்வம்


நிரந்தரமாக இருக்கும் அமைதி என்பது

நிரந்தரமாக குடியிருக்கும் மரணம்.


துயர் கொல்லும்

அல்லது

துயரால் வாழ்வை நிலைநிறுத்த முடியும்


ஆனால் அமைதி எப்போதும் அச்சுறுத்துவது

அமைதி என்பது பயங்கர வஸ்துவாகத் தெரிகிறது

நடப்பது

பேசுவது

சிரிப்பது

அமைதி போன்று காணப்படுவது.


ஓரநடைபாதைகளை மறக்காதீர்கள்

வேசிகளை

துரோகத்தை

ஆப்பிளின் புழுவை

மதுவிடுதிகள், சிறைகள்

காதலர்களின் தற்கொலைகளை.


இங்கே அமெரிக்காவில்

நாங்கள் ஒரு ஜனாதிபதியையும் அவருடைய சகோதரனையும்

படுகொலை செய்தோம்

இன்னொரு அதிபர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.


அரசியலை நம்புபவர்கள்

கடவுளை நம்பும் நபர்களைப் போன்றவர்கள்:

அவர்கள் ஒடிந்த உறிஞ்சுகுழாய்களைக் கொண்டு

காற்றை உறிஞ்சுகின்றனர். 


அங்கே கடவுள் இல்லை

அங்கே அரசியல் இல்லை

அங்கே அமைதி இல்லை

அங்கே நேசம் இல்லை

அங்கே கட்டுப்பாடு இல்லை

அங்கே திட்டம் இல்லை


கடவுளிடமிருந்து ஒதுங்கியிரு

தொந்தரவுற்று இரு


அப்பாலே இரு. 

Comments