Skip to main content

மலை ஏறும் கப்பல்


வெர்னர் ஹெர்சாக்கின் ‘அகிரே: தி ராத் ஆப் காட்’- ஐத் தொடர்ந்து அவருடைய ‘பிட்ஸ்கரோல்டா’ திரைப்படத்தைப் பார்க்குமாறு ஆலோசனை சொன்னார் நண்பர் விஜயராகவன். சரிதான். மனிதனின் எத்தனம், அவனது அடைவதற்கான பைத்தியக்காரத்தனமான வேட்கை, அதன் வியர்த்தத்தத்தை வேறு வேறு காலகட்டங்களிலிருந்து காட்டப்படும் இரண்டு பிரதிமைகள் என்று இரண்டு திரைப்படங்களையும் சொல்வேன். அகிரே: தி ராத் ஆப் காட்-ல் நாடுபிடிக்கும் வேட்கை கொண்ட தளபதி அகிரேவின் தோல்வியை மூர்க்கத்தனமாகச் சொல்லும் ஹெர்சாக், ‘பிட்ஸ்கரோல்டா’வின் நாயகனுடைய கனவையும் தோல்வியையும் பரிவோடு அணுகுகிறார். இரண்டிலும் நாயகன் க்ளாஸ் கின்ஸ்கி. இரண்டு திரைப்படங்களுமே அமேசான் நதியில் வனம் சூழ்ந்த பகுதியில் நடப்பது. அருவிகளும் பூர்வகுடி இந்தியர்களும் வானைத் தொடும் பசிய மரங்களும் குரங்குகளும் இந்த திரைப்படத்திலும் உண்டு. 

நதியின் ஓட்டத்துக்கு எதிராக, இதுவரை அறியப்படாத வனத்துக்கு கப்பலில் சென்று ரப்பர் தோட்டங்களிலிருந்து ரப்பரை எடுத்து பணம் சம்பாதித்து தான் வசிக்கும் இக்விடாஸ் நகரத்தில் ஒபேரா இசை நாடக அரங்கு ஒன்றை உருவாக்குவதுதான் நாயகன் பிட்ஸ்கரோல்டா-வின் லட்சியம். டிரான்ஸ்-ஆண்டியன் ரயில்வே பாதைத் திட்டத்தில் ஏற்கெனவே பெரும்பணத்தை இழந்து பின்னரும் அடுத்த பிரமாண்ட கனவொன்றைக் காண்பவன் அவன். ஒன்ஸ் அபான் தி டைம் இன் தி வெஸ்டின் கதாநாயகி க்ளாடியா கார்டினல் தான் பிட்ஸ்கரோல்டாவின் காதலி. பிரியத்துக்குரியவனின் பைத்தியக்காரத்தனமான சாகச முயற்சிகளுக்கு மனம் சளைக்காமல் பணம் கொடுத்து ஓடாத கப்பலைப் பழுதுபார்த்து தனது பெயர் தாங்கிய கப்பலென்ற பெருமையுடன் நாயகனை சாகசப் பயணத்துக்கு அனுப்பிவைக்கிறாள். 

பயணத்தில் படிப்படியாக உடன் வந்தவர்கள் இறங்கிச் செல்ல, ஒரு மலையின் அடியில் இரண்டு நதிகள் சந்திக்கும் பகுதியில் கப்பல் நிறுத்தப்படுகிறது. கப்பல் சமையல் காரர், பொறியாளர், நாயகன் மட்டுமே எஞ்சியிருக்க பூர்வகுடி இந்தியர்களோடு சேர்ந்து கப்பலை மலையிலேற்றும் பெரும் திட்டமொன்றை நாயகன் சொல்ல, பூர்வகுடி இந்தியர்களும் அந்தத் திட்டத்துக்கு குழந்தைத்தனமாகச் சம்மதிக்கின்றனர். 

கப்பலைப் பல்வேறு சிரமங்களுக்கப்பால் மலைமீது ஏற்றி அடுத்தபக்கம் உள்ள நதியில் இறக்குகின்றனர். பூர்வகுடியினரை நாயகனின் குழந்தைத்தனமும் சாகசமும் ஈர்க்கிறது. கப்பல் உகாலி நதியின் ஓட்டத்தில் இறக்கப்பட்ட நிலையில், இரவு நடந்த குடிவிருந்தின் காரணமாக போதை ஏற்பட, கப்பல் அந்த இடத்திலிருந்து கழற்றிவிடப்படுகிறது. பெரும் சுழிப்புகளையும் அபாயங்களையும் தாண்டி, ரப்பரே இல்லாமல் இக்விடாஸ் நகரத்துக்கு வந்து சேர்கிறது.

மலை ஏறியதாலும் பெரும் சுழிப்பில் சிக்கிக்கொண்டதாலும் பழுதுற்ற கப்பலை விற்று, விற்ற கப்பலிலேயே கடைசியாக தான் விரும்பிய ஒபேரா இசை நாடகத்தை நடத்துகிறான் நாயகன்.

திரைப்படத்தின் கதை நடக்கும் காலம் 20-ம் நூற்றாண்டின் துவக்கம். லத்தீன் அமெரிக்க நகரமான இக்விடாசில் கதை தொடங்குவதால் ஒரு மார்க்வெசின் நாவலை படமாகப் பார்ப்பது போல உள்ளது. நாயகன் இசைக்கும் ஒபேரா இசைத்தட்டுகளை விரும்பிக் கேட்கும் பார்வையாளர்கள் நகரத்தில் உள்ள ஏழைச் சிறுவர்களும் அவனது காதலியும் தான். ஒபேரா இசைகேட்கும் ரசிகர்களில் ஒரு பன்றியும் உண்டு. அந்தப் பன்றிக்கு ஒரு நாற்காலியை வாங்கித் தருவதாகவும் உறுதிகொடுக்கிறான் நாயகன். கவித்துவமும் நகைச்சுவையும் கொண்ட மார்க்வெசின் ஒரு நாவலைப் படிப்பது போன்றுதான் இந்த திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் உள்ளது. சலிப்பான அன்றாட எதார்த்தம், அதை வெல்ல முயலும் சாகசம், அதனால் ஏற்படும் பைத்தியக்காரத்தனம் என நிகழ்வுகள் நம்முன்னர் விரிகின்றன. கப்பலின் மீது எஞ்சின் புகை எழும்ப, ஓபேரா பாடல் வனத்தில் இசைக்க கப்பல் மலை ஏறும் காட்சியில் வெர்னர் ஹெர்சாக் திரைப்பட வடிவத்தை கவிஞனாக எழுதிப் பார்த்திருக்கிறார்; முரட்டுத்தனமாக.

Comments