Skip to main content

என்னைத் தொடரும் கீரிப்பூனைகள்

ஓவியம் வி. சூர்யா


கூர்முகம், ஆர்வம் மினுமினுக்கும் கண்கள்,நிமிர்ந்து உடலை வளைத்து துறுதுறுவென்று பார்க்கும் ஆளைப் போன்ற தோற்றம் கொண்ட மீர்கேட் என்ற கீரிப்பூனை, சமீபத்தில் லலித் கலா அகாதமியில் நடந்த க்ரூப் ஷோவில் ஓவியர் வி. சூர்யா வரைந்த ஓவியத்தின் வழியாக அறிமுகமானது. கீரிப்பிள்ளைக் குடும்பத்தைச் சேர்ந்த அணிலின் உடல் நீளத்தைக் கொண்ட இந்த மீர்கேட்கள் ஆப்பிரிக்காவின் தென்முனையில் வசிப்பவை. நடக்கும்போதும் ஓடும்போதும் அணில் போல ஊர்ந்து செல்லும் இந்த மீர்கேட்கள் குழு குழுவாக வாழக்கூடியவை. தூரத்தில் சத்தம் ஏதாவது வந்தாலோ, வேட்டையாட வரும் விலங்குகளைக் கண்காணிப்பதற்கோ முன்கால்களை உயர்த்தி நட்டமாக நின்று பார்ப்பவை. உடல் முழுக்க ரோமத்துடன் அகமும் புறமும் மென்மையான நடத்தை கொண்டவை.  

மீர்கேட்கள் என்று சொல்லப்படும் கீரிப்பூனைகளின் இயல்பையும் அதன் முகத்தில் இருக்கும் ஆர்வத் துறுதுறுப்பையும் பார்த்தவுடன் இது என்னுடைய விலங்கு என்று தோன்றிவிட்டது. எனது கவிதைக்குள் வரவேண்டியதென்று அகத்தில் சேகரித்துக் கொண்டேன். எனது அடுத்த கவிதைத் தொகுதியின் அட்டையில் இந்த மீர்கேட் 90 சதவீதம் இடம்பெறக் கூடும்.  

மிகத் தாமதமாகவும் தற்செயலாகவும் நான் நேற்று பார்த்த ‘லைஃப் ஆப் பை’ படத்தில் சிறுவன் பை பட்டேல் தற்காலிகமாகத் தங்கிச் செல்லும் மிதக்கும் தீவின் காட்சி அற்புதங்களில் ஒன்றாக மீர்கேட்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெற்றதைப் பார்த்தபோது அந்தக் கீரிப்பூனைகளை நான் தொடர்வது போலவே அவையும் என்னை ரகசியமாகத் தொடர்கின்றன என்று தெரிந்தது. இப்படி எனக்கு அவ்வப்போது ஒரு உயிர் புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருந்தால் போதும். நானும் எனது கவிதையும்  தொடரந்து ஜீவித்திருப்போம். இரவில் மொத்த தீவும் அதில் இருக்கும் பொய்கையும் ஊன் உண்ணியாக மாறும்போது அந்த கீரிப்பூனைகள், சிறுவன் பை பட்டேலின் பக்கத்தில் அவனை ஊறுபடுத்தாமல் அருகிலேயே படுத்து மரக்கிளைகளில் தூங்குகின்றன. 


‘லைப் ஆப் பை’ திரைப்படத்தில் வரும் அத்தனை உயிர்களும் எனக்கு நாயகன் சொல்லும் இரண்டு கதைகளுக்கு அப்பால் மூன்றாவது கதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தது. சிறுவன் பையை உயிர்ப்பாக வைத்திருந்து தானும் உயிர்ப்பாக இருந்த புலி ரிச்சர்ட் பார்க்கர் மெக்சிகோவின் கடற்கரையில் ஒதுங்கியதும், சிறுவன் பை-யைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் கடற்கரை மூலையில் இருக்கும் வனத்துக்குள் புகுந்து சென்றுவிடுகிறது. நன்றி சொல்லக்கூட சந்தர்ப்பம் தராத அந்தப் புலியின் மீதான வருத்தம் சிறுவன் பைக்கு பெரியவனான பின்னரும் இருக்கிறது.


எது தொடர்ந்து என்னை அச்சுறுத்துகிறதோ எது தொடர்ந்து என்னை அழிக்கும்  சவாலைத் தொடர்ந்து தருகிறதோ அதுவே என்னை உயிர்ப்பாக வைத்திருக்கிறது; அதுவே எனது எல்லைகளையும் தசைகளையும் விஸ்தரித்து வலுப்படுத்துகிறது. ரிச்சர்ட் பார்க்கர் என்ற பெயர் கொண்ட அந்தப் புலியின் முகத்தில் மூர்க்கமும் பேதைமையும் சேர்ந்தே இருக்கிறது.     

ரிச்சர்ட் பார்க்கர் என்ற அந்தப் புலி, சிறுவன் பையைத் திரும்பப் பார்த்திருந்தால் அதனால் காட்டுக்குள் மறைந்திருக்க முடியாது. 

புலி மறைந்துபோன அந்த கடற்கரை வனமூலையை எனக்குத் தெரியும். நான் அந்தமானில் ராதா நகர் பீச்சில் அந்த வனத்தின் மூலையை ஒத்த ஒரு மூலையை நான் பார்த்திருக்கிறேன். 

அந்தமான் தீவுக்கு மறுபடியும் போனால் ரிச்சர்ட் பார்க்கரை நான் மீண்டும் சந்திப்பேன். 

லைப் ஆப் பை திரைப்படத்தில், கூட்டம் கூட்டமாக நிலத்தில் ஊர்ந்தும் நிமிர்ந்தும் அலையும் மீர்கேட்களும், திரும்பிப் பார்த்து விடைகூறாமல் வனத்துக்குள் நுழைந்து மறைந்த ரிச்சர்ட் பார்க்கர் என்ற பெயர் கொண்ட அந்தப் புலியும் என் உடலில் இருப்பார்கள்.  

Comments