Skip to main content

வெள்ளை நாய் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி



ஹாலிவுட் பொலிவர்ட் சாலையில் நடைபயிற்சிக்கு

சென்றிருந்தேன்

பெரிய வெள்ளைநிற நாயொன்று என்னுடனேயே

நடந்துவந்ததைப் பார்த்தேன்

அதன் வேகம் என்னுடையதைக் கிட்டத்தட்ட ஒத்திருந்தது

நாங்கள் போக்குவரத்து சமிக்ஞைகளில் நின்றோம்

நாங்கள் சேர்ந்து பக்கவாட்டுத் தெருக்களைக் கடந்தோம்

அப்புறம்

நான் ஒரு பலசரக்குக் கடைக்குள் சென்றுவிட்டேன்

நான் வெளியே வந்தபோது அவன் போய்விட்டான்

அல்லது அவள் போய்விட்டாள்.

ரோமத்தில் மஞ்சள் தீற்றலைக் கொண்ட

அந்த அற்புதமான வெள்ளைநாய் அது.

அந்தப் பெரிய நீலக் கண்கள் போய்விட்டன.

அந்தச் சிரிக்கும் வாய் போய்விட்டது.

தொங்கும் அதன் நாக்கு போய்விட்டது.


வஸ்துக்கள் எளிதாகத் தொலைந்துவிடுகின்றன.

எப்போதும் உடன்வைத்துக் கொள்ள முடியாத வஸ்துக்கள்.


எனக்கு மனச்சோர்வு வந்தது.

எனக்கு மனச்சோர்வு வந்தது.

அந்த நாய் என்னை நேசிக்கவும் நம்பவும் செய்தது

அதை நான் என்னிடமிருந்து போகச் செய்துவிட்டேன். 

Comments