பழைய கார்கள்
குறிப்பாகப் பயன்படுத்திய
ஒன்றை வாங்கி
பல ஆண்டுகள் ஓட்டும்போது
அவற்றுடனான காதல் உறவு தவிர்க்க முடியாதது:
அந்தக் கார்களின் சின்னச்சின்ன பிறழ்ச்சிகளையும்
ஏற்பதற்குக் கற்றுக்கொள்கிறீர்கள்:
ஒழுகும் நீர் குழாய்
வேலை செய்யாமல் போகும் பிளக்குகள்
துருப்பிடித்த நீராவிக் கட்டுப்படுத்தி
அசமந்த கார்ப்பரேட்டர்
எண்ணெய் ஒழுகும் எஞ்சின்
ஓடாத கடிகாரம்
உறைந்த ஸ்பீடோமீட்டர் மற்றும்
இதர சில்லறைக் குறைபாடுகள்.
அந்த காதல் உறவை உயிர்ப்புடன் வைத்திருக்க
அனைத்து உபாயங்களையும் கற்றுகொள்வீர்கள்:
ஹெட்லைட்டுகளின் தலையில் உள்ளங்கையால் தட்டி
எரியச் செய்வதற்கு
எரிவாயுப் பெடலை எத்தனை முறை இயக்க வேண்டுமென்பதையும்
ஸ்டார்ட்டரை அழுத்துவதற்கு முன்னர்
எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமென்பதையும்
மேலுறைகளில் உள்ள துளைகளையும்
துணிவழியாக எட்டிப்பார்க்கும் ஸ்பிரிங்குகளையும்
கவனிக்கத் தவறுவதற்குப் பழகுவீர்கள்
வரும் போகும்
காவலர்கள் சோதனைகளுக்கும்
உங்கள் கார் பழகிவிட்டது
பல்வேறு பழுதுகளுக்காக
அபராதங்களுக்கும் உட்பட்டுவிட்டது
திரும்பும் போது சைகை விளக்கு எரியாதது
ப்ரேக் விளக்கு இல்லாதது
பின்புற விளக்கு உடைந்திருப்பது
பிரேக் பழுது
மிகுபுகை வெளியீடு இன்னபிறவென்று
எத்தனையோ கோளாறுகள் இருந்தும்
பாதுகாப்பான உணர்வை அது கொடுப்பது
உங்களுக்குத் தெரியும்
இதுவரை ஒரு விபத்து கூட நடந்ததில்லை
பழைய கார் உங்களை ஓர் இடத்திலிருந்து
இன்னொரு இடத்துக்குக் கூட்டிச் செல்கிறது
விசுவாசத்துடன்
- ஒரு ஏழை மனிதன் நிகழ்த்தும் அற்புதம்.
கடைசி பிரேக்டவுன் நடந்தபோது
வால்வுகள் பழுதானபோது
பிஸ்டன்கள் சுழற்றித் தண்டு கைவிட்டபோது
நீங்கள் அதை பழைய இரும்புக்கு விற்றீர்கள்.
காரைத் தூக்கும்
டிரக்கின் பின்பகுதியில் தூக்கப்பட்டு
தொங்கியபடி
ஆன்மா அற்றதுபோல
அதை எடுத்துச் சென்றபோது
பார்க்க வேண்டியிருந்தது.
மொட்டையான பின்பக்க டயர்கள்
விரிசலுற்ற பின்புற ஜன்னல் மற்றும்
திருகிய எண் பிளேட்
நீங்கள் கடைசியாகப் பார்த்தவை.
நீங்கள் மிகவும் நேசித்த உடன் வாழ்ந்த
ஒரு பெண் மரணமுற்றதைப் போன்ற
வதை
அத்துடன் இப்போது
அவளது இசை
அவளது மாயம்
அவளது அற்புதமான
நம்பகத்தன்மையை
திரும்ப நீங்கள் உணரவே போவதில்லை.
Comments