நான் எனது பிஎம்டபிள்யுவில் ஏறி
எனது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோல்ட் கார்டைப் பெற
வங்கிக்குச் சென்றேன்
சேவையில் இருந்த பெண்ணிடம்
எனது தேவையைக் கூறினேன்
“நீங்கள் திரு. சினாஸ்கியா" என்று கேட்டாள்.
“ஆமாம். ஏதாவது அடையாள அட்டை தேவையா?”
“வேண்டாம், உங்களைத் தெரியும்.”
அட்டையை எடுத்து பணப்பையில் வைத்துக் கொண்டு
கார் நிறுத்துமிடத்துக்கு வந்து
பிஎம்டபிள்யுவில் ஏறி (முழு ரொக்கம் கொடுத்து வாங்கியது)
நல்ல ஒயின் ஒரு பெட்டி வாங்குவதற்காக
மதுக்கடைக்குச் செல்வதற்கு முடிவு செய்தேன்.
போகும் வழியில், இந்த முழு விஷயங்களையும்
கவிதையாக எழுத முடிவுசெய்தேன்.
பிஎம்டபிள்யு கார்
வங்கி
வங்கி அட்டை பற்றியெல்லாம்
எழுதி
விமர்சகர்கள் எழுத்தாளர்கள் வாசகர்களை
எரிச்சல்படுத்த எண்ணினேன்
உறையவைக்கும் குளிரில் பூங்கா பெஞ்சுகளில் உறங்குவது
மலிவான வைனைக் குடித்து
சத்துக்குறைவால்
நான் செத்துக் கொண்டிருப்பது பற்றி
எழுதப்பட்ட பழைய கவிதைகளைத்தான்
அவர்கள் அதிகம் விரும்பினர்.
அந்த ஓரத்து விளிம்பில்
தரிக்கும் மனிதன் மட்டுமே
படைப்பு மேதையாக இருக்கமுடியும்
என்று நினைப்பவர்களுக்கு
ஆனாலும்
அதை முயற்சித்துப் பார்ப்பதற்கு
தைரியமே இல்லாத
அவர்களுக்கு
இந்தக் கவிதை.
Comments