Skip to main content

நேசிக்கத் தகுந்த ரத்தக்காட்டேரி


‘நேசத்தின் இன்மைதான் இருப்பதிலேயே மோசமான வலி' என்று தனது கதாபாத்திரமான டிராகுலாவைப் பேசவைப்பதன் மூலம் ரத்தக்காட்டேரியின் தனிமையும் உறவுக்கான தவிப்பும் நிறைந்த பாழ் உலகத்துக்குள் 'நாஸ்பெராடூ தி வேம்பயர்' திரைப்படம் வழியாக வெர்னர் ஹெர்சாக்கால் அழைத்துச் செல்லப்படும்போது தீமையின் ஒட்டுமொத்தப் படிமமாக இருக்கும் கவுன்ட் ட்ராகுலா மீது பரிவுகொள்ளத் தொடங்குகிறோம். 

பிரான்சிஸ் போர்ட் கப்போலாவின் டிராகுலாவை விட, ஹெர்சாக்கின் டிராகுலா தனிமையில் அரற்றிக் கொண்டிருக்கும் கவிஞனின் உருவகமாக இருக்கிறது. 

“காலம் என்பது ஒரு பள்ளத்தாக்கு. ஓராயிரம் இரவுகளைப் போன்ற ஆழம்...நூற்றாண்டுகள் வந்து போகின்றன...வயோதிகம் அடைய முடியாமல் இருப்பது பயங்கரமானது...மரணம் இதை ஒப்பிடும்போது மோசமல்ல...ஒவ்வொரு நாளும் ஒரே வியர்த்தத்தை அனுபவித்தபடி நூற்றாண்டுகளாக வாழ்வதை கற்பனை செய்ய முடியுமா உன்னால்..” என்று தன்னைத் தேடிவரும் ஜோனாத்தனிடம் சொல்லிப் பெருமூச்சு விடும்போது டிராகுலாவின் அச்சத்தையூட்டும் பறவை முகம் வவ்வால் பற்களைத் தாண்டி அதன் மீது பிரியம் ஏற்படுவதைத் தவிரக்க முடியவில்லை.

சலிப்பை, நிராசையை, காண்பிக்க முடியாத நேசத்தின் அழுத்தும் கனத்தை டிராகுலா பெருமூச்சுகளாக, முனகல்களாக வெளிவிடுகிறது. 

ஹெர்சாக் இயக்கி நான் சமீபத்தில் பார்த்த மூன்று திரைப்படங்களிலும் மனித உடல் வெளியிடும் சத்தங்களை ஒயிலாக்கமோ, நேர்த்தியோ செய்யாமல் விலங்கு மற்றும் எந்திரம் வெளியிடும் சத்தத்தைப் போலக் கேட்கச் செய்கிறார். மனித எந்திரம் வேட்கையின் போது, ஏமாற்றத்தின் போது, களிப்பின் போது வெளியிடும் மூச்சுகள் வனத்தில் கேட்கும் சத்தங்களை எனக்கு நினைவூட்டுகின்றன. 

'நாஸ்பெராடூ தி வேம்பயர்' திரைப்படத்தில் டிராகுலா வெளியிடும் முனகல், சலிப்பொலி, இரைதல் எல்லாம் டிராகுலாவின் தனிமையை, துயரை, அலுப்பைத் தெரிவிப்பதாக உள்ளன. 

பெருந்தொற்று காலத்தில் 'நாஸ்பெராடூ தி வேம்பயர்' கூடுதல் அர்த்தங்களைத் தருவது. நடுவில் நதி ஓடும் விஸ்மர் நகரத்தில் உயர்குடியினர் வசிக்கும் மாளிகை வீடுகள் இருக்கும் பகுதிக்குள் ப்ளேக் பெருந்தொற்றை கருப்பு சவப்பெட்டிகளில் கொண்டுவரும் பாய்மரக் கப்பல் நீல அதிகாலையில் அமைதியாக நுழையும் காட்சி பயங்கரமும் வசீகர அழகும் கொண்டது.

டிராகுலா வசிக்கும் வனத்திலுள்ள மாளிகைக்கு ஜோனாத்தன் மலை வழியாகவும் நதியோரத்தின் பாறையிடுக்கு வழியாகவும் செல்லும்போது  அவரது மற்ற திரைப்படங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. 

மனிதன் சௌகரியமான இடத்திலிருந்து அன்பான மனிதர்களிடமிருந்து அபாயகரமான மரணத்துக்கு நெருக்கமான இடங்களை நோக்கி பயனற்ற ஆனால் சாகசமிகுந்த பயணத்தை மேற்கொண்டபடி இருக்கிறான். சமதளத்தில் நகரத்தில் வெறும் கதைகள் வழியாகவே அறியப்பட்ட ரத்தக்காட்டேரியை நேரில் சந்தித்து அதை நகரத்துக்குள் அவிழ்த்துவிட்டு தனது காதல் மனைவியையே பலிகொடுக்கும் ஜோனாத்தனின் முயற்சி நமக்கு எதைச் சொல்கிறது. இன்னொரு ரத்தக்காட்டேரியாக ஆவதைத் தவிர ஜோனாத்தனுக்கு என்ன கிடைத்தது?

ப்ளேக் தொற்றி மரணம் களிகொண்டு ஆடும் விஸ்மர் நகரம் கற்பனையிலோ, இறந்தகாலத்திலோ மட்டுமே உள்ளவைதாமா? 

நம் தனிமையோடும் நாம் உணரும் நேசம் இன்மையோடும் இனம் காணக்கூடிய அந்த டிராகுலா வெறும் புராணிக உருவம் மட்டும்தானா?

Comments