Skip to main content

இறந்த விலங்குகளின் ஆன்மாக்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி



இறைச்சி வெட்டும் கூடத்திலிருந்து திரும்பும் வழியில்

மூலையில்

ஒரு மதுக்கூடம் இருந்ததால்

அங்கே அமர்ந்து

ஜன்னல் வழியாக சூரியன் இறங்குவதை

பார்த்துக் கொண்டிருந்தேன்

உயரமாய் உலர்ந்துபோன

காட்டுச் செடிகள்

ஜன்னலை மறைத்து நிற்கின்றன.


இறைச்சிக்கூடத்தில் வேலை முடிந்தபிறகு

ஷவரில் குளிக்கும் பையன்களுடன்

நான் குளிப்பதில்லை

அதனால் வியர்வை மற்றும் ரத்தத்தின் வீச்சம்

என்னிடம் இருந்தது

வியர்வையின் வீச்சம் கொஞ்ச நேரத்தில் 

குறையும்

ஆனால் ரத்தத்தின் நெடியோ 

துளைக்கத் தொடங்கி

ஆதிக்கத்தை நிறுவும்.


என்னுடன் பயணிக்கும்

இறந்துபோன அந்த விலங்குகளின் 

ஆன்மாக்களோடு சேர்ந்து நான்

பேருந்தில் ஏறும் அளவுக்கு

இலேசாக உணரும்வரை 

சிகரெட்களைப் புகைத்து

பீரைக் குடித்தேன்


பேருந்தில் ஏறியவுடன் 

தலைகள் மெதுவாக என்னை நோக்கித் திரும்பும்

பெண்கள் எழுந்து என்னிடத்தை நீங்கி

செல்வார்கள்.

பேருந்திலிருந்து இறங்கியவுடன்

ஒரு வீட்டுத்தொகுதி

ஒரு மாடியைக் கடந்தால் போதும்

என் அறை வந்துவிடும்

அங்கே எனது வானொலியை ஒலிக்கவிட்டு

ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கலாம்

அத்துடன் அங்கே எவரும்

என்னைப் பொருட்படுத்த மாட்டார்கள். 

Comments