Skip to main content

தலித் அனுபவங்களை யார் கோட்பாடு செய்வது?

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் போர்ஹெஸ் எழுதிய ‘இனவரைவியலாளர்’ கதையில் அமெரிக்க ஆய்வாளன் ப்ரெட் முர்டாக், சிவப்பிந்தியர்களின் பூர்வீக மருத்துவமுறைகளை ஆராய்வதற்காக அவர்களுடனேயே சேர்ந்து வாழத் தொடங்குகிறான். அவர்களுடனேயே தங்கி அவர்களது மொழியிலேயே கனவுகண்டு, அவர்களின் ரகசிய சித்தாந்தத்தையும் முர்டாக் அறிகிறான். பின்னர், தனது இருப்பிடத்துக்கு வரும் அவன் நேரடியாகத் தனது ஆய்வு வழிகாட்டியான பேராசிரியரைச் சந்திக்கிறான். அவர் அவனது கண்டுபிடிப்பு பற்றிக் கேட்கிறார். அவனோ சொல்ல மறுக்கிறான். தான் அவர்களுக்கு எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை என்று கூறும் அவன், அந்த ரகசியத்தை ஆங்கிலத்திலும் சொல்ல முடியும் என்றாலும் வெளியிட மறுக்கிறான். அந்த ரகசியத்தைவிட அதற்கான பாதைகள்தான் முக்கியமானவை என்று கூறும் அவன், தான் அறிந்த அந்த வாழ்க்கையிலிருந்து பார்க்கும்போது நமது அறிவியல் தீவிரமற்றதாக, முக்கியத்துவமற்றதாகத் தெரிகிறது என்கிறான். 

புதுமைப்பித்தனின் ‘உபதேசம்’ கதையும் இந்தப் பின்னணியில் ஞாபகத்துக்கு வர வேண்டியது. கண்ணாடி விழுங்கி குடலில் ஒருபகுதி அழுகிய நிலையில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்படும் ஹடயோகி ஒருவர் மருத்துவர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கித் தப்பிக்கிறார்.  ஆங்கில மருத்துவ அறிவின் அஸ்திவாரமே அந்தக் கதையில் வரும் டாக்டர் விஸ்வநாத்தால் விமர்சிக்கப்படுகிறது.

ஒரு தனிமனிதரின் அனுபவத்தை, ஒரு சமூகக் குழு அடையும் அனுபவத்தை இன்னொருவருக்கு இன்னொரு சமூகக் குழுவினருக்கு முழுமையாக மொழிபெயர்க்கவோ, அந்த அனுபவத்தை ஒரு கோட்பாடாகப் பொதுமைப்படுத்தவோ முடியுமா என்பதைக் கேள்வி கேட்பதிலிருந்து ‘விரிசல் கண்ணாடி’ நூல் தொடங்குகிறது. அனுபவம், வாழ்ந்து பெற்ற அனுபவம், அனுபவத்திலிருந்து கோட்பாட்டை உருவாக்கும் அறம் குறித்து விவாதிக்கும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது போர்ஹேஸின் சிறுகதை ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அரசியல் அறிவியலாளர் கோபால் குருவும், தத்துவவியலாளர் சுந்தர் சருக்கையும் மேற்கொண்ட விவாதங்களே இந்த நூலில் உள்ள எட்டுக் கட்டுரைகள். 

புறவயமான பார்வை என்ற ஒன்று சாத்தியம் என்று மேற்கத்திய அறிவியல்வாதம் நம்மை நம்ப வைத்துள்ளது. புறவயமான அனுபவம், அகவயமான அனுபவம் என்று அனுபவத்தைத் துல்லியமாக வகைமைப்படுத்துவது சாத்தியமானதுதானா என்ற புள்ளியிலிருந்து நமது இதுவரையிலான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறது இந்த நூல். மேற்கத்திய சமூக அனுபவங்களிலிருந்து பெற்ற கோட்பாடுகளை இந்தியாவில் இருக்கும் சமூகங்களை ஆராய்வதற்குப் பரிசீலனை இல்லாமல் சமூக அறிவியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் முறையை ‘விரிசல் கண்ணாடி’ வழியாக அதன் ஆசிரியர்கள் விசாரிக்கிறார்கள். 

சமூக அறிவியல் ஆய்வாளர்கள் கோட்பாட்டு அறிவை மேலானதாகவும், அவர்களது ஆய்வுப்பொருளாக இருக்கும் மக்களின் அனுபவ அறிவைக் கீழானதாகவும் நினைக்கும் நிலை இருப்பதாகக் கூறி தனது விவாதத்தை கோபால் குரு தொடங்கி வைக்கிறார். தலித்துகள் தங்கள் அனுபவத்திலிருந்து எழுதும் தன்வரலாறுகள், தலித் மக்கள் படைக்கும் இலக்கியங்கள் மீது தலித் அல்லாத சாதியைச் சேர்ந்த கோட்பாட்டு ஆய்வாளர்கள் கொண்டிருக்கும் கீழான பார்வையை கோபால் குரு விமர்சிக்கிறார். சமூக அறிவியல் ஆய்வுப் பரப்புக்குள் தலித்துகள், பூர்வகுடிகளைச் சேர்ந்தவர்கள் வரும்போது இங்கு ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் கோட்பாட்டு ரீதியான ஆதிக்கச் சுவர்கள், ஆங்கில மொழி வெளியீடு சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் அனுஷ்டானங்கள் வழியாக எப்படி அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதையும் கோபால் குரு ஆராய்கிறார். சமூக அறிவியலில் சமத்துவவாதம் செயல்படுகிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறார். இந்தக் கேள்வியின் மூலம் ஆய்வு, கோட்பாடு செய்தல் ஆகியவை வெறும் அறிவு, திறன் சார்ந்தவை மட்டுமல்ல; அறம் சார்ந்த செயல்பாடும் ஆகிறது என்பதை இந்த நூல் முன்னிலைப்படுத்துகிறது. தமிழ் சமூகம், தமிழ் அரசியல், தமிழ் சினிமா சார்ந்து ஆய்வு செய்த எம். எஸ். எஸ். பாண்டியன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதும்போது, ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் ஆய்வுச் சட்டகங்களுக்குள் எப்படித் தங்கள் ஆய்வுகளைப் பொருத்த வேண்டியிருக்கிறது என்பது குறித்து டி. தருமராஜ் எழுதிய கட்டுரையை இந்தப் பின்னணியில் பொருத்திப் பார்ப்பது அவசியமானது. ஆய்வின் வெளியீட்டு மொழி, பயன்படுத்தும் முறையியல்கள் குறித்து பாண்டியனுக்கு கேள்விகளே இல்லை என்ற விமர்சனத்தை டி. தருமராஜ் முன்வைத்திருந்தார். 

இந்தியாவில் காலங்காலமாக தலித் மக்களை ஆதிக்கம் செலுத்தியவர்களே அவர்களை ஆராயும்போது, தலித் மக்களின் அனுபவங்கள் திரிபுக்குள்ளாவதையும், அவர்களின் ஆய்வுக்குள் அந்த மக்கள் அருங்காட்சியகப் பொருட்களாவதையும் முதன்முறையாக ஆழமாகக் கேள்விக்குள்ளாக்கும் இந்த நூலை ‘தெற்கிலிருந்து வந்திருக்கும் உண்மையான கோட்பாடு’ என்கிறார் ஆய்வாளர் ஷெல்டன் போலாக். 

தன்வரலாறுகள், இலக்கியங்கள் படைப்பதுடன் கோட்பாடு செய்வதற்கான வெளிக்குள் தலித்துகள் நுழைவது அவசியம் என்பதை வலியுறுத்துவதோடு தலித்துகள், பூர்வகுடிகள், பிற்படுத்தப்பட்டோரின் சமூகத் தேவையாகவும், தார்மீக அவசியமாகவும் கோட்பாட்டக்கப் பணி உள்ளது என்பதை கோபால் குரு நிறுவுகிறார். அவரது பார்வைகளை மேலும் செழுமைப்படுத்தவும் மட்டுறுத்துவதாகவும் அமைகிறது சுந்தர் சருக்கையின் எதிர்வாதம். அனுபவம், வாழ்ந்து பெற்ற அனுபவம் இரண்டுக்குமான வித்தியாசத்திலிருந்து சுந்தர் சருக்கை பேசத் தொடங்குகிறார். வாழ்ந்து பெற்ற அனுபவத்தில் அனுபவத்திலிருந்து வெளியேறுவதற்கான சுதந்திரம் இல்லை என்பதை முன்வைக்கிறார். ‘கோட்பாடு உணரப்படக்கூடியதாகவும் அது வலியை, துயரத்தை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு வருகிறார்.  

கோட்பாடு, அனுபவம் இவை குறித்த ஆழமாக எழுப்பிக்கொண்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் பிறகு ‘அனுபவம், வெளி, நீதி’ என்ற கட்டுரையில் தீண்டாமைக்கு உட்பட்ட ஒருவரின் அனுபவமும் கோட்பாடும், தீண்டாமைக்கு உட்படாத ஒருவரின் அனுபவமும் கோட்பாடும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பது, அம்பேத்கர், காந்தியின் வாழ்க்கை, அரசியல் நிலைப்பாடுகளிலிலிருந்து விவாதிக்கப்படுகிறது. இந்த நூலின் ஆதாரமானதும் தீவிரமானதும் எல்லோரும் சரளமாக வாசித்துப் பிரதிபலிக்கக்கூடியதுமான கட்டுரை இது. இந்தியாவில் காலங்காலமாக ஒடுக்குபவரின் இடமும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்விடமும் வெளியும் இந்தக் கட்டுரையில் விசாரிக்கப்படுகின்றன. கிராமத்துக்கு வெளியே சேரிகள் எப்படி இருட்குழிகளாக இருந்துவருகின்றன என்பதை விவரிப்பதிலிருந்து ‘வெளி’யானது ஒடுக்குபவருக்கும் ஒடுக்கப்படுபவருக்கும் எவ்வாறு இருக்கிறது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த இரண்டு வெளிகளிலிருந்து வரும் காந்தியும் அம்பேத்கரும் இயல்பாகவே வேறு வேறு நிலைப்பாடுகளைத்தான் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை கோபால் குரு நிறுவுகிறார். காந்தியைப் பொறுத்தமட்டில் சுதந்திரம் என்பதில் சுயராஜ்யமே தார்மீகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இறையாண்மைக்கான அடிப்படை ஆகிறது; அம்பேத்கரைப் பொறுத்தமட்டில் சுயமரியாதை, சமூக நீதி போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன என்கிறார். காந்தியின் அனுபவம் என்பது மற்றவர்களைச் சார்ந்தது என்றும், அம்பேத்கரின் கோட்பாட்டுக்கான அனுபவம் அவருடையதாகவே இருந்தது என்றும் சொல்கிறார். 

இந்த நூலின் கடைசி இரண்டு கட்டுரைகள், தீண்டாமை குறித்து மிகப் புதியதொரு பார்வையை அளிப்பவை. சமூகவியல் ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் அரசியல்ரீதியாகவுமே இதுவரை பேசப்பட்டுவந்த நிலையில் இந்தக் கட்டுரைகள் மேற்கத்திய, இந்தியத் தத்துவ மரபுகளிலிலிருந்து ‘தீண்டாமை’ என்னும் நிகழ்வின் மீது கவனம் செலுத்துகின்றன. சுத்தம் - அசுத்தம் என்ற அடிப்படையிலேயே பார்க்கப்பட்டுவந்த தீண்டாமைப் பிரச்சினையின் இதுவரை அறியப்படாத அம்சங்கள் மீது ‘தீண்டாமையின் தோற்றப்பாட்டியல்’ கவனம் குவிக்கிறது. தொல்லியல் ரீதியான பார்வையானது தீண்டாமைப் பிரச்சினையை அணுகுவதற்கு அவசியம் என்றும், சமூகவியலோ மானுடவியல் அணுகுமுறையோ இதற்கு உதவாது என்றும் சொல்கிறார் கோபால் குரு. மரபற்று அழிந்துபோன ஒரு தொல் உயிரின் உருவத்தைக் கற்பனை செய்வதுபோல தீண்டாமையின் தோற்ற நிகழ்வைப் புரிந்துகொள்வதற்குக் கற்பனையைப் பயன்படுத்துகிறேன் என்று அம்பேத்கர் கூறியது (‘தீண்டப்படாதார் யார்?’ நூலுக்கான முன்னுரையில்) இங்கே ஞாபகத்துக்கு வருகிறது. 

‘தீப்பற்றிய பாதங்கள்’, ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ போன்ற நூல்களின் வழியாக சாதியம், தீண்டாமை குறித்துப் புதிய பார்வைகளையும் விவாதத்துக்கான சாத்தியங்களையும் உருவாக்குவதற்கு முயன்றுவரும் ஆய்வாளர் சீனிவாச ராமாநுஜத்தின் முக்கியமான பங்களிப்பு இந்த மொழிபெயர்ப்பு. 

தமிழ் அறிவுச்சூழலிலும் கோட்பாட்டுவாத பார்ப்பனர்களும் அவர்களது பார்ப்பனத்துவமும், அனுபவவாத எழுத்துகளையும் இலக்கியத்தையும் அதை எழுதுபவர்களையும் தங்களிலும் கீழாகப் பார்க்கும் பார்வை தொடரும் நிலையில் இந்த நூல் மிக முக்கியமான இடையீடு ஆகும். 

Comments