உனது வாழ்க்கை உன்னுடையது
சவசவப்பான ஒப்புக்கொடுத்தலோடு அதைப் பிணைத்துவிடவேண்டாம்
விழிப்புடன் இரு.
தப்பி வெளியேறுவதற்கான
பாதைகள் இருக்கவே செய்கின்றன.
எங்கோ வெளிச்சம் இருக்கிறது.
அது அதிகமில்லாமல் இருக்கலாம்
ஆனால் இருட்டை விரட்டும் வெளிச்சம் அது.
விழிப்புடன் இரு.
கடவுளர்கள் உனக்கு வாய்ப்புகளை அளிப்பார்கள்.
அவற்றைத் தெரிந்துகொள்.
அவற்றை எடுத்துக்கொள்.
உன்னால் மரணத்தை வெல்ல முடியாது
ஆனால் வாழ்வில் இருக்கும் சவத்தன்மையை
சில சமயங்களில் வெல்லமுடியும்.
அதை எவ்வளவு சீக்கிரம் கற்கிறாயோ
அத்தனை கூடுதல் வெளிச்சம் அங்கே இருக்கும்.
உனது வாழ்க்கை உன்னுடையது.
அது இருக்கும்போதே அதைத் தெரிந்துகொள்.
நீ அற்புதமானவன்
கடவுளர்கள் உனக்குள்
குஷி ஏற்படுத்துவதற்காகக் காத்திருக்கிறார்கள்.
Comments