ஊரடங்கு நாட்களில் சிகை திருத்தும் கலைஞர் ரவியை வரவழைத்தார் நகர மேயர். முடிவெட்டி, தாடியையும் சீர்செய்துமுடித்தார் ரவி. தானும் இதயத்திலிருந்து பேசலாம் என்று நினைத்துக்கொண்டு, சார் உங்களது முடியில் நரை ஏறிவருகிறதென்று வேடிக்கையாக கூறினார் ரவி.
எவ்வளவு தெனாவெட்டு என்று கருதிய மேயர், ரவியை ஆறு மாதங்களுக்கு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது வீட்டுக்கு வந்த உதவியாளனிடம் எனது தலையில் நரை இருக்கிறதா என்று கேட்டார்.
அப்படி ஒன்றும் அதிகம் இல்லை என்று நாசுக்காகப் பதிலளித்தார் உதவியாளர்.
உதவியாளர் மீதும் எரிச்சல் வர, அவரையும் இரண்டு மாதங்களுக்குச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இரண்டு மாதங்கள் கழித்து, வேலைக்கு வந்த உதவியாளனிடம் அதே கேள்வியைக் கேட்டார் மேயர். உதவியாளர் சுதாரித்துக் கொண்டு, தலை முழுக்க கருப்பாக இருக்கிறது அய்யா என்றார். என்ன பொய்? என்று கண்டித்த மேயர் பின்புறத்தில் பத்து சவுக்கடிகள் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்.
அப்போதுதான் அங்கே வந்து சேர்ந்தார் முல்லா நஸ்ரூதின். “முல்லா, எனது தலைமுடியின் நிறம் என்ன சொல்?” என்று கேட்டார்.
முல்லா நஸ்ரூதினோ நமது உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் போல தலை வழுக்கையானவர். சாமர்த்தியசாலியும் கூட.
“சார். எனக்கு நிறக்குருடு. அதனால் உங்கள் கேள்விக்கு என்னால் துல்லியமாகப் பதில் அளிக்கவே முடியாது. அத்துடன் என்னைப் போன்ற வழுக்கைத் தலையனுக்கு, முடி என்பது என்ன வண்ணத்தில் இருந்தாலும் அது ஆசிர்வாதமே.”
Comments