Skip to main content

சுடுகாட்டை நிர்வகிப்பவருக்கு சடலம்தான் உத்சவம்

 


பீகாரில் உள்ள சாஸா கிராமத்தில் கங்கை நதி ஓடும் மகாதேவ் படித்துறைக்கருகில் சடலங்கள் மிதக்கும் காட்சி ஒளிப்படங்களாகவும் வீடியோக்களாகவும் இணையத்தை நிறைக்கத் துவங்கியுள்ளன. உத்திரப் பிரதேசத்திலுள்ள கிராமத்திலிருந்து, இறுதிச்சடங்கு செய்வதற்கான வசதியின்றி, கரோனா பெருந்தொற்றால் இறந்துபோனவர்களை வேறுவழியின்றி உறவினர்கள், கங்கையில் மிதக்க விட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மனிதர்களின் உயிர்களுக்கு அடிப்படை மரியாதை கூட சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் கிடைக்காத ஒரு மாநிலத்திலிருந்து, இப்படிக் கேட்க நாதியற்ற சடலங்கள் ஆற்றில் மிதந்து வரும் காட்சி முதலில் கொடூரமானதாக இருந்தாலும், பின்னர் அதுவும் நமது அன்றாட எதார்த்தமாகிவிடும் நாட்களில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

நரேந்திர மோடி, முதல் முறை பிரதமரானபோது, குறியீடாகவே, இந்துக்களின் ஆதார நினைவுகளில் ஒன்றாகவும் தொல்மனப்படிமமாகவும் இன்றும் திகழும் வாராணசி தொகுதியைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். அத்துடன் காசியில் உள்ள தஸ்அஸ்வமேத் படித்துறையில் ஆரத்தி தீபத்தைக் காட்டி நெடுங்காலமாய் விலக்கப்பட்டு, அறைந்து பூட்டப்பட்டிருந்த அந்தகார இருட்டுக்குள் நெளிந்துகொண்டிருந்த, புண்பட்ட ஓர் பண்பாட்டின் பழைய அபிலாஷைகளுக்கு வெளிச்சமும் கொடுத்தார். அப்போது ஏற்றப்பட்ட தீபத்தின் ஒளியில், தீப எண்ணெயின் தற்காலிக நறுமணத்தின் மயக்கத்தில், காசி என்பதும் வாராணசி என்பதும் அணையவே அணையாத மயானம் என்ற உண்மையை இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மறந்தேவிட்டனர். சுடுகாட்டை நிர்வகிக்கும் நபர் யார் ? 

கங்கையில் மிதக்கும் சடலங்கள் அதையே ஞாபகப்படுத்துகின்றன. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இறந்துபோன ஐம்பது சடலங்களை வைத்துதான், மதவன்முறைகளுக்கும் மோதலுக்கும் வரலாற்று ரீதியாகப் பெயர்போன இடத்தில், நவீன இந்தியாவின் முதல் பெரிய இனக்கலவரமும் இனப்படுகொலைகளும் மிகத் துல்லியமாக நடத்தப்பட்டன. இது துவக்கம். 

குஜராத்தில் எரியத் தொடங்கிய தீ, காஷ்மீரைப் பிரித்துக் கூறுபோட்டது. அது வேறெங்கோ நடப்பது என்று ஊடகங்களும் மக்களும் வாளாவிருந்தனர். குஜராத்தில் எரியத் தொடங்கிய தீ, டில்லியில் சென்ற ஆண்டு கோலி மாரோ என்ற கோஷத்துடன், முஸ்லிம்கள் குடியிருப்பை எரித்தது. தேசத்தின் தலைநகரில் நடந்தாலும் செய்திகள் பரவாமல் ஊடகங்கள் அழுத்தி வாசித்தனர். குஜராத்தில் எரியத் தொடங்கிய தீ, வடமாநிலங்களெங்கும் புலம்பெயர் தொழிலாளர்களை உணவு கூட அளிக்காமல் பாதுகாப்பாக வீடுதிரும்பவும் அனுமதிக்காமல் நாதியற்று எரித்தது. ஒரு பெருந்தொற்று காலத்தில் இந்த ஏழைகள் இந்த தியாகத்தைக் கூட அனுபவிக்காமல் இருந்தால் எப்படியென்று, இந்திய நடுத்தர வர்க்கத்தினர் பால்கனிகளில் தட்டுகளைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்தபோது அவர்களுக்கு அந்தத் தீ கண்ணில்படவேயில்லை. குஜராத்தில் தொடங்கிய தீ, ஒவ்வொரு மாநிலத்தையும் எரிக்க இப்போது காத்துக்கொண்டிருக்கிறது.  

குஜராத்தில் தொடங்கிய தீ, இப்போது டில்லியில், லக்னோவில் தொடங்கி மருத்துவமனைகளில் சுடுகாடுகளில் கூட இடம்கிடைக்காமல் மதம், சாதி, இனம், வர்க்கம் என்ற எந்த வித்தியாசமுமில்லாமல் எரித்துக் கொண்டிருக்கிறது. நோய்க்கும் நோயுடன் போராடுவதற்கும் மரணத்துக்குமான குறைந்தபட்ச கௌரவத்தைக்கூட பறித்த பிணம்தின்னும் அரசு இது. நான் வசிக்கும் வேளச்சேரி சுடுகாட்டு தகனமேடையின் இடத்தைத் தெரிவிக்கும் வானைநோக்கிய புகைக்குழாயில் புகை கடந்த பல நாட்களாக நிற்காமல் வந்துகொண்டிருக்கிறது.     

எல்லாவற்றையும் ஆர்ப்பாட்டமான குறியீடுகள் வாயிலாகவே, உள்ளடக்கம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் நிர்வகித்துவந்த மோடியை, குறியீடுகளே திரும்ப அடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த மாதம் கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள, ‘டிகா உத்சவ்’ என்று மோடி அறிவித்த சில நாட்களிலேயே, எதற்கான உற்சவம் இது என்பதை நாம் உணரத் துவங்கினோம். 

நீரில் பிம்பம் தொனிக்க மோடி ஆர்த்தி காட்டிய, நதியின் இன்னொரு மூலைப் படித்துறையில் பிணங்கள் மிதக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஒரு மாதமாக இந்தியா முழுக்க அல்லல்படும் காட்சிகளைப் பார்க்கும்போது, மோடி காட்டிய ஆர்த்தியின் அர்த்தம் வேறாகத் தொனிக்கத் தொடங்குகிறது.  

மோடி வெளியில் உள்ள நபரென்று திட்டி, நமது பொறுப்பைக் கைகழுவிவிட்டுப் போய்விட முடியாது. மரபில் இருந்த சகிப்புத்தன்மையையும் இழந்து நவீனம் கோரும் சமத்துவ உணர்வையும் பெறாமல் வரலாறு, தத்துவம், அரசியல், கலை, சிந்தனை, கல்வி என அனைத்தையும் வெறும் நுகர்வாக மாற்றிக் கொண்டு நிற்கும் நமது ரெண்டும்கெட்டான் வர்க்கத்தின் பிரதிநிதிதான் அவர்.

நமது வெறுப்பு, மற்றவர், மற்ற தரப்புகளை இல்லாமலாக்கும் நமது கொலை வன்மம், நமது அதீத சுயமோகம், அதன் போதையில் மூழ்கித் திளைத்திருக்கும் நமது சுயம், பிற வாழ்க்கைகள், அதன் வெளிப்பாடுகள் மீது எந்தக் கரிசனமுமற்ற நமது எதேச்சதிகாரம் அத்தனையும்தான் மோடி என்று வெளியில் திகழும் பெரும்பிம்பம். நம் ஒவ்வொருவர் கையிலிருக்கும் கொள்ளியைத் தான், அந்தப் பெரும்பிம்பம் ஆரவாரமாகத் தனது கையில் சேர்த்து வைத்துள்ளது. மற்றவர்கள் துயரம் மீதான நமது கரிசனையின்மைதான், இத்தனை கொடூரம் நிகழ்ந்த பிறகும் அதற்கு பொறுப்பேற்காத, வருத்தம் தெரிவிக்காத ஆட்சியாளர்களின் மௌடீகமாக மாறியுள்ளது.

சுடுகாட்டை நிர்வகிப்பவருக்கு எது உத்சவம்? 

சுடுகாட்டை நிர்வகிப்பவருக்கு சடலம்தான் உத்சவம்.

Comments