ஒரு வெள்ளை முயல் மரணமடைகிறது
பின்னர் சிகப்பு முயலாக ஆகிவிடுகிறது.
மரணமடைந்த பிறகும் அதற்கு உதிரம் வழிந்துகொண்டிருக்கிறது.
சீக்கிரமே அந்த சிகப்பு முயல் கருப்பு முயல் ஆகிவிடுகிறது.
அது இறந்தபின்னரும் அழுகிக் கொண்டிருக்கிறது.
அது இறந்துவிட்டதால் பெரியதாகவோ சின்னதாகவோ
அதன் விருப்பத்துக்கேற்ப ஆகமுடியும்.
அது பெரியதாக இருக்கும்போது, மேகத்தைப் போன்றிருக்கும்
அது சிறியதாக இருக்கும்போது ஓர் எறும்பை ஒத்திருக்கும்
உங்கள் செவியில் எறும்புமுயலைச் செலுத்தித்தள்ள முயல்கிறீர்கள்
எறும்புமுயல் பார்வையில் இருக்கும் ஒவ்வொன்றையும் சாப்பிடுகிறது
உங்கள் காதுக்குள் இருக்கும் பரந்த புல் வெளியைச் சாப்பிட்டு
ஒரு புயல் மேகத்தை விடப் பெரிதாக இரண்டு முயல்குட்டிகளை பெற்றெடுக்கிறது
உங்கள் காதுகள் இரைகின்றன. ஒவ்வொரு சத்தமும் இரைகின்றன
உங்களது காது இறந்துபோகிறது. ஒரு முயல் செத்துக் கொண்டிருக்கிறது
சில சமயங்களில் இறந்த முயல், உதிரம்படிந்த மாதவிடாய்காலப் பட்டையாக
மறுபிறப்பெடுக்கிறது
அவ்வப்போது செத்த முயலை உங்கள் உள்ளாடையிலிருந்து இழுத்து உருவுகிறீர்கள்
ஒவ்வொரு மாதமும் ஒரு இறந்த முயலை வெளியில் உருவிச் சுவரில்
தொங்கவிடுகிறீர்கள்
சுவரில் ஒரு அழுகையைத் தொங்கவிட்டீர்கள்
அது முயலின் காதுகளைப் போல வீச்சமடிக்கின்றன
Comments