Skip to main content

நீல. பத்மநாபனின் நினைவுவழி நகுலன்


தமிழின் தனிப்பெரும் இலக்கிய ஆளுமையான நகுலனை, தனது கல்லூரி ஆசிரியராகச் சந்தித்துக் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் இலக்கியவாதியாகவும் நண்பனாகவும் உடன் பயணித்தவர் எழுத்தாளர் நீல.பத்மநாபன். அவர் நீள்கவிதை வடிவத்தில் எழுதியிருக்கும் ‘நகுலம்’, நகுலனின் தனிப்பட்ட ஆளுமை, குணநலன்கள், சுகதுக்கங்கள், பேணிய நட்புகள், முக்கியமான திருப்பங்கள் என அறுபது ஆண்டுகால வாழ்க்கையை சிறுதுளிகளாகத் தொடரும் ஆவணம் இது. நீல.பத்மநாபன், கவிதை என்ற வடிவத்தில் இதைக் கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்களுக்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதத் தேர்ந்துகொண்ட நகுலன் என்ற இலக்கிய ஆளுமைதான் இந்தப் படைப்பை சுவாரஸ்யமாக்குகிறது. மற்றபடி நீல.பத்மநாபன் இதை ஒரு கட்டுரையாகவே நீட்டி எழுதியிருக்கலாம்; பாதகம் ஒன்றும் இல்லை.

பொதுவான சமூக அர்த்தத்தில் மரணம் என்பதற்கு அர்த்தம் முடிவான ஒன்றுதான். ஆனால், இருப்பு அளவுக்கு இன்மையின் அனுபவமும் அவசியமானது, ருசியானது என்பதைத் தனது பிரத்யேக மொழி வழியாக நிகழ்த்தி, வாழ்வு அளவுக்கு சாவும் சாவின் பரிமாணங்களும் பலவிதம் என்பதைக் காட்டியவர் நகுலன். அப்படியான நகுலன் மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போது நீல.பத்மநாபன் அவரைக் கடைசியாகச் சந்திப்பதிலிருந்து ‘நகுலம்’ நீள்கவிதை ஆரம்பிக்கிறது. கல்லூரியில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்த பேராசிரியர் நகுலன், பாடம் எடுக்கும் விதமும் மாணவர்களிடம் பழகிய விதமும் நமக்கு நீல.பத்மநாபன் வழியாக அறிமுகமாகிறது. பாடத்திட்டத்தை மீறி இலக்கியத்தின் கூறுகளை, நெளிவுசுளிவுகளைப் பரவசத்துடன் உரைக்கும் பேராசிரியராக நகுலனைப் பார்க்கிறோம்.

மாணவனாக இருந்த நீல.பத்மநாபனின் சிறுகதை ஒன்றைப் படித்து அதுகுறித்து உரையாடுவதன் வழியாக, அவர்களுடைய இலக்கிய நட்பு தொடங்குகிறது. சைக்கிளைத் துணைபோல வைத்திருந்தாலும் ஏறி ஓட்டாமல், உருட்டிக்கொண்டே ஊர் முழுக்கத் திரியும் பழக்கத்தை வைத்திருந்தவராக, ஆனால் சைக்கிளுடனேயே காணப்பட்டவராக நமக்கு நகுலன் அறிமுகமாகிறார். சைக்கிள் இல்லாமல் காணப்படும் நகுலனை, குதிரை இல்லாத வீரன் என்று வர்ணிக்கிறார்.

‘நகுலம்’ முழுவதும் நகுலனின் பேச்சுத் தொனி எப்படியிருக்கும் என்பதை சில உரையாடல்கள் வழியாகத் தெரியப்படுத்துகிறார் ஆசிரியர். நகுலன் என்ற விசித்திரமான பெயரை அவர் தேர்ந்த காரணம், நகுலன் வார்த்தைகளின் வாசகர்களுக்குத் தெரியவருகிறது. திருமணம் செய்யாத தனிமையான வாழ்க்கையை நகுலன் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அறிகிறோம். கவிஞர் ஷண்முக சுப்பையாவுடன் அவரது மரணம் வரை இருந்த நட்பின் பண்பைச் சின்னச் சின்னக் கோட்டுச் சித்திரங்களில் பார்க்கிறோம். இலக்கிய விவகாரங்கள், தனது புத்தகங்களைப் பிரசுரிப்பதற்காகக் கடைசி வரை நகுலன் பட்ட சிரமங்கள், அதுதொடர்பிலான பயணங்கள், இலக்கிய நண்பர்களைப் பார்க்க நாகர்கோவிலுக்குப் போகும் பயணங்கள் இதில் பதிவாகியுள்ளன. ஆங்கில எழுத்தாளர் பார்த்தசாரதி, பேராசிரியர் ஜேசுதாசன், கிருஷ்ணன் நம்பி, அய்யப்ப பணிக்கர் என அவர் காலத்திய ஆளுமைகள் முகங்களாக வந்துபோகிறார்கள். கார் ஓட்டும் சுந்தர ராமசாமி நமக்கு அறிமுகமாகிறார்.

அந்தக் காலகட்டத்தின் இலக்கியப் போக்கைப் பிரதிபலிக்குமாறு நகுலன் ஆசிரியராக இருந்து தொகுத்த தமிழின் முக்கியமான தொகைநூலான ‘குருக்ஷேத்திர’த்தின் பின்னணியைத் தெரிந்துகொள்ள முடிகிறது. நகுலன் தனது படைப்புகளில் தொடர்ந்து ஜெபித்தபடி இருந்த ‘மரணம்’ என்ற விஷயத்தைத் தனிப்பட்ட பேச்சில் ஒதுக்கி இருக்கிறார் என்று நீல.பத்மநாபன் சொல்வதின் வழியாகத் தெரிந்துகொள்கிறோம். தன்னைவிட இரண்டு வயது குறைவானவரும் ஆத்மநண்பருமான ஷண்முக சுப்பையாவின் மறைவு நகுலனை நிரம்பவும் பாதித்துள்ளது.

‘நகுலம்’ நீள்கவிதையோடு, நகுலனின் நேரடித் தாக்கமும் நட்பும் பெற்ற மலையாளக் கவிஞர் பி.ரவிக்குமார், நகுலனுடனான தனது உறவு குறித்து எழுதியுள்ள கட்டுரை மலையாள இலக்கிய உலகுடன் கொண்டிருந்த செழுமையான உறவைக் காண்பிப்பதாக உள்ளது. ‘பாரம்பரியமும் நிஜநிலைமையும் காலகட்டத்தின் அனைத்து சங்கல்பங்களோடு போராடும் தன்மையுள்ளது நகுலனின் சிருஷ்டிகள்’ என்கிறார். கவிஞர் ஷண்முக சுப்பையா குறித்து நகுலனும் நீல.பத்மநாபனும் நிகழ்த்திய உரையாடலும், நீல.பத்மநாபன் படைப்புகள் குறித்து நகுலன் அவருடன் நடத்திய உரையாடலும் இந்த நூலில் உள்ளன. ஷண்முக சுப்பையா என்ற ஆளுமையும் அவரது படைப்புகளும் தெரியாத ஒரு தலைமுறை வாசகர்களுக்கு இந்த நூல் நல்ல அறிமுகமாக இருக்கும். நகுலனுக்கு நூற்றாண்டு நடக்கும் வேளையில் வந்துள்ள இந்த நூல் அவசியமானது.

Comments