அழகின் சிரிப்பில் ‘கடல்’ பற்றிய பகுதியில் கடல் மணல், நண்டுகள் என ஓரத்தில் நடைபயிலத் தொடங்கி கடலின் ஆழத்து அமைதிக்குச் செல்கிறார். ஓரக்கரையில் கலகங்கள் விளைவிக்கும் அலைகள், தூரத்தில் ஆழக்கடலில் இல்லை என்று குறிப்பிடும் அவர் அதை ‘புரட்சிக்கப்பால் அமைதி’ என்ற தலைப்பில் குறிப்பிடுகிறார். ‘அருகுள்ள அலைகட் கப்பால்/ கடலிடை அமைதி அன்றோ’ என்று உரைக்கும்போது ‘அமைதி’, அமைதி தோன்றிவிடுகிறது. கடலிடை அமைதி என்ற வெளிப்பாடு படித்ததிலிருந்து மோதிக்கொண்டிருக்கிறது; எண்ணங்களுக்கிடையில் உள்ள இடைவெளி போல.
கடலைத் தாண்டி, தென்றலைத் தாண்டி, காட்டைத் தாண்டி குன்றமும் தாண்டி ஆற்றுக்கு வருகிறார் பாரதிதாசன். ஆறு முதலிலேயே நீர் தளும்பி ஓடும் ஆறல்ல. முதல் கவிதை ‘நீரற்ற ஆறு’. செல்லும் வழி இருட்டு என்று புதுமைப்பித்தன் வழி வந்த இந்த நவீன கவிஞனுக்கு, ஆற்றில் நீர் இல்லாத போதிருக்கும் வெறுமைதான் உடனே அடையாளம் காணக்கூடியதாகவும் இருக்கிறது. அடுத்து வரும் வழிப்போக்கும் எனக்கு நெருக்கமானது.
நீரற்ற ஆற்றுப்பாதை
இருபக்கம் மண்மே டிட்டும்,
இடைஆழ்ந்தும், நீள மான
ஒருபாதை கண்டேன், அந்தப்
பாதையின் உள்இ டத்தில்
உரித்தநற் றாழம் பூவின்
நறும்பொடி உதிர்த்த தைப்போல்
பெருமணல், அதன்மே லெல்லாம்
கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!
வழிப் போக்கு
மணல்சுடும்; வழிச்செல் வோர்கள்,
இறங்கியும் ஏறியும் போய்
அணகரை மேட்டின் அண்டை
அடர்மர நிழலில் நின்று
தணலேறும் தம்கால் ஆற்றிச்
சாலைகண் டூரைக் காண்பார்.
அணிநிலம் நடுவில் ஆற்றுப்
பாதை “வான்வில்” போல் தோன்றும்.
000
‘இருபக்கம் மண்மே டிட்டும்,
இடைஆழ்ந்தும், நீள மான
ஒருபாதை கண்டேன்’-ஐ படிக்கும்போது ஏக்கத்தின் நிலப்பரப்பாகி எனக்கு அனுபவப்படுகிறது. நான்தான் நீரற்ற ஆற்றுப்பாதையை என் மன நிலப்பரப்பாக்கி, அதனுடன் நெருக்கம் கொள்கிறேனே தவிர, பாரதிதாசனுக்கு அந்த உத்தேசம் இருக்கிறதாவென்று நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை. அது அடுத்து மழைவருவதற்கு முன்னாலான ஒரு காட்சி மட்டும்தான். அடுத்தடுத்த கவிதைகளில் மழைவந்து நிறைத்தும் விடுகிறது. சேய்களின் மகிழ்ச்சி கண்டு சிலம்படி குலுங்க ஆற்றுத் தாய் நிறைவயிற்றோடு வையம் தழைக்க நடக்க ஆரம்பித்துவிடுகிறாள். வையம் தழைக்கத் தொடங்கியதும் எனது வேலை பாரதிதாசனோடு முடிந்துவிடுகிறது.
ஆனால் நீரற்ற ஆற்றுப்பாதை, வழிப்போக்கு என்ற மேலே குறிப்பிட்ட இரண்டு கவிதைகளிலும் அன்றாட வாழ்க்கையின் புதுமை, பழமை என்று சொல்லமுடியாத நித்தியமான எதார்த்தத்தின் சித்திரம் ஒன்று உள்ளது.
வறட்சியும் உஷ்ணமும் சேர்ந்த மணல் பரப்பை எழுதும்போது, பாரதிதாசன் பாணியிலான எழுச்சியும் எழிலும் மிகுந்த சொற்கள் அவரிடமிருந்து பெரும்பாலும் பறிமுதல் செய்யப்பட்டு விடுகின்றன. தாழம்பூ மட்டும் நற்தாழம்பூ ஆகிவிடுகிறது; நிலம் அணிநிலமாகிறது.
சுடும் மணலில் நடந்துசென்று தணல் எரியும் கால் பாதங்களை மரத்தின் நிழலின் நின்று ஆற்றிச் செல்பவர்களின் எளிமை இந்தக் கவிதைகளில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகிறது. பிரமிளின் 'பாலை' கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன்மணல்
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
பாரதிதாசனுக்குச் சற்றுப் பின்னாலும், எனக்குச் சற்று முன்னாலும் வந்த கலாப்ரியாவின் கவிதையில் இந்த வறண்ட ஆற்றுப்பாதை குளமாக ஆகிறது. அதில் புதுக்கவிதை ஆதியிலிருந்து வரித்துகொண்ட வெறுமையும், துயரச் சாயலும் சேர்ந்துவிடுகிறது. அந்தக் குளம் வறண்டிருந்தாலும் சரி, நீர் நிரம்பினாலும் சரி அது அடைக்கலம் கொண்டிருக்கும் இடம் வலியும் ஆற்றாமையும் வெறுமையும் தான். நாளை இந்தக் குளத்தில் நீர் வந்தாலும் அது நம்பிக்கைக்குரிய செய்தி அல்ல;
அது யாருக்கு?
கலாப்ரியாவின் ‘பிரிவுகள்’ கவிதை தான் அது.
பிரிவுகள்
நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்துவிடும் -
இதன் ஊடே
ஊர்ந்து, நடந்து
ஓடி(ச்) செல்லும்
வண்டித் தடங்களை
இனி காணமுடியாது
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு - நாளை
இந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்.
மேலே பறக்கும்
கழுகின் நிழல் -
கீழே -
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது.
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்துவிடும்.
Comments