Skip to main content

இணையற்ற அந்தச் சீமாட்டிக்கு இரங்கற்பா - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


இரவில் உறங்கும் சில நாய்கள்

நிச்சயம்

எலும்புகளைக் கனவு காணவே செய்யும்


நான்

உனது எலும்புகளை

சதையோடு

அந்தக் கரும்பச்சை உடையோடு

உயர் குதிகாலைக் கொண்ட

பளபளக்கும்

அந்தக் கருப்பு ஷூக்களோடு

நினைவுகூர்கிறேன்

நீ குடித்த போதெல்லாம்

வசைமாரி பொழிவாய்

எது உன்னை நெரித்துப் பிடித்திருக்கிறதோ

அதிலிருந்து வெடித்து வெளிவரவிரும்பியதைப் போல

உன் கேசம் கலைந்து விழும்.


அழுகிய இறந்தகாலத்தின்

அழுகிய நினைவுகள்

அழுகிய நிகழ்காலத்தில் என்னை விட்டு

மரணம் வழியாக நீ

ஒருவழியாக வெளியேறினாய்;


நீ இறந்துபோய்

28 ஆண்டுகள் ஆகிவிட்டன

மற்ற எல்லாவற்றையும் விட

மேலதிகமாக

உன்னைத்தான் நினைவுகூர்கிறேன்

வாழ்க்கை கொண்டிருக்கும் 

இந்த ஏற்பாட்டின் வியர்த்தத்தை

புரிந்துவைத்திருந்தவள்

நீ ஒருத்தி தான்;


மற்ற அனைவரும்

பொருட்படுத்தவே தகாத 

சிறு கூறுகள்பற்றி அதிருப்தியைக் கொண்டிருந்தனர்

அபத்தம் பற்றி அபத்தமான

புகார்களைச் சொல்லியபடி;


மிகக் கூடுதலாக தெரிவதுதான்

உன்னைக் கொன்றது ஜேன்.


இந்த நாய் கனவுகாணும்

உனது எலும்புகளுக்கு

இதோ இந்த மது. 

Comments