Skip to main content

பாரதிதாசனுடைய ‘குரங்கின் அச்சம்’

பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’-ஐ தற்செயலாக நேற்றிரவு வாசிக்கத் தொடங்கியபோது, கவிஞனின் சிரிப்பை ஆங்காங்கே பார்த்து அனுபவித்தேன். யாப்பிலக்கணத்தின் தளை, மரபான மனத்திலிருந்து விடுபடாத சுமை, கொண்ட கருத்தை ஊடகத்துக்குள் செலுத்தும் மிகுகவனம் எல்லாம் பாரதிதாசனிடம் இருக்கிறது. ஆனால், தானும் சேர்ந்த இயற்கையில் ஈடுபடும்போது தனது அனுபவத்தைப் புதிதாகப் பார்க்கும் வியப்பும் விந்தையும் சேர அதை மொழிக்காட்சியாக ஆக்கத் துடிக்கும் வெள்ளந்தித் தன்மை கொண்ட கவிஞன் கணிசமாக ‘அழகின் சிரிப்பு’-ல் தென்படுகிறான். 

‘இறகினில் உயிரை வைத்தாய்/ எழுந்தன புட்கள்!’ என்று கூறும்போது பறவைகள் ஒரு பசிய வயலிலிருந்து, நிலப்பரப்பிலிருந்து எழும் காட்சி உதயமாகிவிடுகிறது. இயற்கையை தாய்மையின் கருணையாக, இயற்கையை நெறிப்படுத்தப்பட வேண்டிய குழப்படியாக, இயற்கையின் ஒரு பகுதியை விஷமமாக, இயற்கையைத் தீங்காகப் பார்த்த நவீனப் பார்வை பாரதிதாசனிடம் இல்லை. ஆனால் பாலியல் ஒழுக்கம்  சார்ந்து பாரதிதாசனிடம் பழைய அதே தமிழ் ஆள்தான் இருக்கிறான். புறாவைப் பற்றி எழுதும்போது பெண் புறா, ஒரு ஆண் இணையையே பராமரிக்கும் என்று சிறப்பித்துக் கூறுகிறார். காட்டில் நடக்கும் உயிர்ச்சங்கிலியின் இயக்கத்தை விவரிக்கும்போது பாரபட்சமின்றி இருக்கிறார். அங்கே ‘மனிதாபிமானம்’ இல்லை. அழகோடு, மூர்க்கம், வேகம், கொலை, சிதைவு எல்லாம் சேர்ந்த லீலையாக  இயற்கையை பாரதிதாசன் பார்ப்பதாகத் தெரிகிறது.


ஆனைஒன் றிளம ரத்தை

முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்

பூனை ஒன் றணுகும்; அங்கே

புலி ஒன்று தோன்றும்; பாம்பின்

பானைவாய் திறக்கக் கண்டு

யாவுமே பறக்கும்; கன்றோ

மானைக்கா ணாது நிற்கும்!

அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.  


ஒரு தனி முழுக்கவிதையாக ‘குரங்கின் அச்சம்’ என்னை மிகவும் ஈர்த்தது. இந்த உள்ளடக்கத்தை  கிட்டத்தட்ட நினைவுபடுத்தும், ‘குரங்குகள்’ என்ற பெயரிலேயே ஒரு சிறுகதையை சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார்.  


குரங்கின் அச்சம்

கிளையினிற் பாம்பு தொங்க,

விழுதென்று, குரங்கு தொட்டு

“விளக்கினைத் தொட்ட பிள்ளை

வெடுக்கெனக் குதித்த தைப்போல்”

கிளைதோறும் குதித்துத் தாவிக்

கீழுள்ள விழுதை யெல்லாம்

ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி

உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.


பிரமிளின் ‘வண்ணத்துப் பூச்சியும் கடலும்’ கவிதையில் வரும் வண்ணத்துப் பூச்சி, மாணிக்கவாசகரின் கோத்தும்பியை ஞாபகப்படுத்தும் குரங்கு இது. வண்ணத்துப் பூச்சியும், கோத்தும்பியும் முக்தி, உண்மை, முழு உண்மை, விடுதலை, பூரண அழகு, முழுமை என்ற மலரைத் தேடி அநித்தியமான மலர்களை நீத்து நித்தியமான ஒன்றை நோக்கிச் செல்கின்றன. 

இந்தக் குரங்கை உச்சிக்குத் துரத்துவதோ அதன் அச்சம். அச்சம் தவிர வேறொன்றுமில்லை. அங்கேயும் அதற்கு நிம்மதியில்லை. குரங்கு, தன் அச்சத்தை உடம்பின் பிற்பகுதியிலேயே வைத்துள்ளது. ஆனால், உச்சிக்குப் போக அச்சம் ஓர் எரிபொருளாக இருக்கிறதென்பதால் அதை எதிர்மறையான உணர்ச்சியாக மட்டும் பார்த்து, புறந்தள்ளிவிட முடியுமா என்ன?

கீழ் கிளையிலிருந்து, ஒளிப்பாம்பென ஆடும் விழுதுகளைக் கண்டு உச்சிக்குப் போகும் இயக்கம், அசைவு தடையில்லாமல் இந்தக் கவிதையில் நிகழ்த்தப்படுகிறது. 

உச்சிக்குப் போய் பார்க்கப்படும் வாலை, என் மனம் என்று நான் கருதுகிறேன்.

சுந்தர ராமசாமியின் ‘குரங்குகள்’ சிறுகதையில் பாம்பும் உண்டு. ஆனால்  விஷமம், தீமை என்ற குணங்களைச் சுட்டும் உருவகங்களாகவே குரங்கும் பாம்பும் இந்தச் சிறுகதையில் அவை இடம்பெறுகின்றன. குரங்கோ, பாம்போ அவற்றின் இயற்கை உலகத்தில் இந்தச் சிறுகதையில் இல்லை. அவை குழப்படியாகவே ‘குரங்குகள்’ சிறுகதையில் இடம்பெறுகின்றன. குரங்குகள் கதையின் போக்கில் குரங்கும் பாம்பும் எதிரெதிர் இடத்தில் நிறுத்தவும் படுகின்றன. 

சுந்தர ராமசாமி சிறுகதையில் இறந்த பாம்பு, தாள் பொட்டலத்தில் பொதியப்பட்டு, குரங்குகளை அச்சுறுத்துகின்றன. 

பாரதிதாசனின் பாம்போ மரத்தின் கிளையில் ஆடிக்கொண்டிருக்கிறது உயிருடன்.   

Comments