உருது எழுத்தாளனான சாதத் ஹசன் மண்டோ உலகளாவிய பண்பைத் தனது படைப்புகள் வழியாக அடைவதற்கு தேசப் பிரிவினையின் சுமையும் அதைத் தொடர்ந்த குருதியும் பைத்தியமும் தோய்ந்த பெரும் மானுடத் துயரும் அந்தக் கலைஞன் மீது இறங்கவேண்டியிருந்தது. தமிழ்ச் சிறுகதை கனவு கண்ட உலகுதழுவிய தன்மையைச் சாதிப்பதற்கு மொழி சாமர்த்தியமும் தொழில்நுட்பமும் வடிவ சாகசங்களும் மட்டும் போதாது என்பதன் நிரூபணம் ஷோபா சக்தி. உலகுதழுவிய தன்மையைச் சாதிப்பதற்கு, தமிழ் அடையாளத்தைக் கொண்ட இனமானது அரச பயங்கரவாதத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் யுத்தத்தையும் இனப்படுகொலையையும் கடக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் சமூகமும் தனி மனிதர்களும் பாதுகாப்பு, பலம் என்று கருதி சாதி, மொழி, இனம், மதம் தொடர்பில் வைத்திருக்கும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் உடைமைகளைக் கீழேபோட்டு ஓடிச்செல்வதைப் போல துறக்க வேண்டியிருக்கிறது. ஊர், மொழி, உறவினர்கள், நண்பர்கள், சுற்றம், வீடு திரும்பும் உத்தரவாதம் அனைத்தையும் இழந்து உலக வரைபடத்தில்கூட உடனடியாகப் பார்த்துவிட முடியாத குட்டித் தேசங்களின் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. வெறும் உயிரைத் தக்கவைக்கவும் நீடிக்கச் செய்வதற்காகவும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
யாழ்ப்பாணம் அருகே அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்து, இலங்கையிலிருந்து வெளியேறி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அகதியாய் அலைந்து, தற்போது பாரிசில் வசித்துவரும் ஒரு தமிழ் அடையாளம் கொண்ட சுயம்தான், உலகளாவிய அனுபவப் பரப்பில் நின்று இன்றைய ஈழத்தமிழ் அடையாளம் என்னவென்று விசாரிக்கும் கதைகளை எழுத முடியும். குடலைப் பிசையும் பயங்கரங்களையும் மனிதப் பிறழ்வுகளையும் அழுகை தொனிக்காமல் சிரித்துச் சிரித்துக் கேளிக்கையாகக் கட்டியங்காரனின் பாவனையுடன் வலிமை கொண்டு சொல்லவும் முடியும். அவைதான் ஷோபா சக்தியின் கதைகள். அரசின் பயங்கரவாதம் ஏற்படுத்திய துயரங்கள், தமிழ்ப் போராளிகளின் லட்சியவாதம் ஏற்படுத்திய அழிமானங்கள், நாடு கடந்தும் காக்கப்படும் தமிழர்களின் சாதித் தூய்மை, மொழித் தூய்மை, பாலியல்ரீதியான பண்பாட்டு இறுக்கங்கள் வரை கலைக்கப்பட்டுக் கூர்மையாக விமர்சனத்துக்குள்ளாகும் கதை உலகம் ஷோபா சக்தியுடையது. அவரது புதிய ‘மூமின்’ தொகுதிச் சிறுகதைகளும் அதற்கு சாட்சியம்.
‘பாக்ஸ்’ நாவலுக்குப் பிறகு ஷோபா சக்தியின் கதை உலகத்தில் மாய யதார்த்தம் சேர்ந்துள்ளது. மதம், கடவுள் தொடர்பில் சாதாரண மனிதனுக்குள்ள நம்பிக்கையும் பாதுகாப்பும் ஆறுதலும் ஷோபாவின் ஆழ்ந்த கிண்டலை இழக்காமலேயே ‘மூமின்’, ‘மிக உள்ளக விசாரணை’, ‘யாப்பாண சாமி’ போன்ற கதைகளில் அனுதாபத்துடன் பரிசீலனைக்குள்ளாகின்றன. இந்த உலகத்தின் எல்லையற்ற தன்மையும் அங்கிருக்கும் அனுபவங்களின் சாத்தியங்களும் அவை கொண்டிருக்கும் புதிர்களும் விந்தையோடும் கனிவோடும் பார்க்கப்படும் மாறுதல் அது. ‘யானை கதை’யில் தமிழ்ப் போராளிகள் குழுவில் அகிம்சை மீது ‘உண்மை’யிலேயே நம்பிக்கை கொண்ட, நம்மால் நம்ப முடியாத போராளிக் கதாபாத்திரமாக ஜேம்ஸ் இருக்கிறார். அவர் கடைசியில் கடலோரத்தில் யானைபோல வீங்கிச் சடலமாக மிதக்கிறார். இது ஒரு அற்புதம்தானே.
‘மூமின்’ சிறுகதைத் தொகுப்பின் கதைசொல்லி வைக்கம் முகமது பஷீரை ஞாபகப்படுத்துகிறான். பஷீரின் உலகம் அருளை நோக்கிக் கடப்பது; ஷோபா சக்தியின் உலகம் பொருளில் தொடங்கி பொருளில் முடிவது.
முதல் கதையான ‘மிக உள்ளக விசாணை’யில் பெற்றோர், ஊர், இறந்த காலம் எல்லாமும் ஞாபகத்தில் இருக்கும், தன் பெயரை மட்டும் மறந்துபோய்விட்ட, ஒரு நீர் விலங்காக, மூடப்பட்ட கிணற்றில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் அதிசயக் கதாபாத்திரம் போன்றவர்தான் ஷோபா சக்தி. தமிழீழ வாழ்க்கையின் அத்தனை விவரங்களும் நினைவுகளும் அந்தத் தன்னிலைக்குள் அப்பிப் படர்ந்துள்ளது. ஆனால், அந்த உலகத்துக்குள் அவனால் பிரவேசிக்கவே முடியாது. அதனால் அவன் கதைகளின் வழியாகத் தனது பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொள்கிறான். ‘மிக உள்ளக விசாரணை’ கதையில் வருபவனுக்குக் கண்களில் உயிர் இருக்கிறது என்றால், அராபிய இரவுகளில் வரும் ஷெகர்சாத்தைப் போல கதைகள் வழியாக, சிரிப்பை முகமூடியாகக் கொண்ட விமர்சனம் வழியாக மரணத்தைக் கடந்துகொண்டிருக்கிறார் ஷோபா சக்தி என்று தோன்றுகிறது. 2009-க்குப் பிறகு ஈழத்தமிழர் வசித்த இடங்களெங்கும் புதைகுழிகளிலிருந்து மனிதச் சடலங்களே தோண்டப்பட்ட நிலையில் இந்தக் கதையில் உயிருள்ள ஒரு மனிதன் தோன்றுகிறான். அவன் கிணற்றுக்குள் புதைக்கப்பட்ட பிறகு எண்ணெய் விளக்கு போடாமல் வைரவன் கோயில் இருண்டு கிடக்கிறது. அந்த விளக்கின் தீபத்தை ஒரு நாள் ஏற்ற ஏற்பாடு செய்துவிட்டு, அந்த மனிதன், மீண்டும் உயிருடன் கிணற்றுக்குள் விசாரணை நீதிபதிகளால் புதைக்கப்படுகிறான். ஐரோப்பிய சூழ்நிலையில் சென்ற நூற்றாண்டில் காஃப்கா விசாரித்த அரசு என்னும் அமைப்பு, சில பிராந்திய, பண்பாட்டு அடையாள மாறுதல்களுடன் உலகின் எந்த எல்லையிலும் அப்படியே கூடுதல் பயங்கரங்களுடன் தொடர்கிறது என்பதைச் சொல்லும் சிறுகதை இது.
ஷோபா சக்தியின் உள்ளடக்கம் என்று இதுவரை அறியப்பட்ட பண்பிலிருந்து இறுக்கத்தையும் அக நடுக்கத்தையும் மர்மத்தையும் அனுபவமாக வைத்திருக்கும் சிறுகதை ‘காயா’. செயலுக்கான சுதந்திர விருப்பு, செயலுக்கு முன்பும் பின்பும் மனம் செய்யும் மாயம், உடலும் சமூகமும் மோதும் இடம் குறித்த விசாரணை ‘காயா’. யுத்தம், சிறைத் தண்டனை, ராணுவச் சித்திரவதை எல்லாவற்றுக்கும் இணையாக அந்தக் கொடுமைகளுக்கும் சற்று மேலாகத் துன்பத்தை ஒருவருக்குக் கொடுக்கக்கூடிய இடமாகக் குடும்பம் எப்படித் திகழ்கிறது என்பதை மர்மக்கதையின் தன்மையுடன் சொல்லும் சிறுகதை ‘ராணி மகால்’.
எழுத்தாளர் பிரபஞ்சன் ஏற்படுத்திய விழுமியத்தை மையமாகக் கொண்டு அவர் எழுதிய சிறந்த சிறுகதையான ‘பிரபஞ்ச நூல்’ இத்தொகுப்பில் உள்ளது. பிரபஞ்சனும் பிரபஞ்சனின் புத்தகமும் இந்தச் சிறுகதையில் கதாபாத்திரங்கள். பிரபஞ்சனைப் பற்றி எழுதப்பட்ட நடைச்சித்திரங்களில் அவருக்குச் செலுத்தப்பட்ட சிறந்த கதாஞ்சலி என்று இந்தச் சிறுகதையைச் சொல்லலாம். பிரபஞ்சனின் கதைகள் வழியாக அந்தக் கதையின் நாயகி, கடந்த தொலைவும் அனுபவமும் எவ்வளெவ்வளவு என்ற வியப்பைத் தவிர்க்க முடியவில்லை.
ஒரு பத்தியைக் கடக்கும்போதே கதைகேட்பதின் ஈர்ப்பில் வாசிப்பவனை மறக்கடிக்கச் செய்து, நுட்பமான விவரங்களோடு, கதை வழியாக உருவாக்கும் தனிப் பிரபஞ்சத்துக்குள், நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் ஷோபா சக்தியின் ஏமாற்றும் கலையானது இன்னும் சலிக்கவில்லை. அருவருப்பு உள்பட அத்தனை ரசங்களும் சேர்ந்த நாடகம் அங்கே நடக்கிறது. அங்கே தேசம், மரபு, பண்பாடு, மொழி, சாதி, வர்க்கம், வரலாறு என்று எந்தப் பெருமிதங்களும் சுமக்கப்படவோ புனிதப்படுத்தப்படவோ இல்லை. கேளிக்கை போன்று உண்டாக்கப்படும் அனுபவத்தில் தனது விமர்சன தொனியையும் இயல்பாகக் கடத்தத் தெரிந்த ஷோபா சக்திதான் தன் கதைகளைத் தனது கருத்துகளைச் சொல்வதற்கான துண்டுப்பிரசுரங்கள் என்கிறார். அவர் கதைகளைப் போன்றே இதையும் நாம் நம்பத்தான் வேண்டும்.
Comments