Skip to main content

இன்னொரு குவளை காபி - பாப் டிலன்


உனது மூச்சு தித்திப்பாக உள்ளது

வானத்தில் இருக்கும் இரண்டு ஆபரணங்களைப் போல

உனது கண்கள்

உனது முதுகு நிமிர்ந்தது, உனது கேசம் மிருதுவானது

நீ சாய்ந்திருக்கும் தலையணையில்

நான் பிரியத்தை உணரவில்லை

நன்றியையோ காதலையோ கூட

உனது விசுவாசம் என் மீது அல்ல 

மேலேயுள்ள நட்சத்திரங்களிடம்


செல்ல இருக்கும் பயணத்துக்காக

இன்னொரு குவளை காபி அருந்துவோம்

கீழே இருக்கும் பள்ளத்தாக்குக்குச் செல்வதற்கு

முன்பாக 

இன்னொரு குவளை காபி அருந்துவோம்


உனது தந்தை, அவரோ விலக்கப்பட்டவர்

தொழில் அடிப்படையில் அவரோ அலைந்து திரிபவர்

பொறுக்கியெடுத்து தேர்ந்தெடுப்பதை 

அவர் உனக்குக் கற்றுத்தருவார்

எப்படி கத்தியை எறியவேண்டுமென்பதையும்


எந்த அந்நியனும் நுழையாமல்

தனது ராஜாங்கத்தை அவர் மேலாண்மை செய்கிறார்

இன்னொரு தட்டு உணவுக்காக அவர் இரையும்போது

அவர் குரல் நடுங்குகிறது


செல்ல இருக்கும் பயணத்துக்காக

இன்னொரு குவளை காபி அருந்துவோம்

கீழே இருக்கும் பள்ளத்தாக்குக்குச் செல்வதற்கு

முன்பாக 

இன்னொரு குவளை காபி அருந்துவோம்


உனது சகோதரி நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்கிறாள்

உனது அம்மாவையும் உன்னையும் போல

அவள் வாசிக்கவோ எழுதவோ கற்றுக்கொள்ளவேயில்லை

அவளது அலமாரியில் புத்தகங்களே இல்லை

அவளது சந்தோஷத்துக்கோ எல்லைகளே இல்லை

அவளது குரலோ புல்வெளியிலிருக்கும் வான்பாடி போன்றது

ஆனால் அவளது இதயமோ சமுத்திரம் போல

அத்தனை மர்மமும் இருட்டும் கொண்டது


செல்ல இருக்கும் பயணத்துக்காக

இன்னொரு குவளை காபி அருந்துவோம் 

கீழே இருக்கும் பள்ளத்தாக்குக்குச் செல்வதற்கு

முன்பாக 

இன்னொரு குவளை காபி அருந்துவோம். 


பாப் டிலனின் ஒன் மோர் கப் ஆப் காபி பாடலைக் கேட்க

Comments