பரபரவென்று
மூக்கு நீட்டி
மூசுமூசென்று
என்னைப் போல்
உருவமற்ற காற்றுக்குள்
எதையோ ப்ரௌனி தேடுகிறதென்று
முதலில் நினைத்தேன்
நாங்கள் நின்றுகொண்டிருக்கும்
கம்பிச் சுவருக்கு அப்பால்
பூங்காவுக்குள் ப்ரௌனிக்கு முதுகுகாட்டி
தியானிக்கும்
பூனையை நோக்கித் தான்
ப்ரௌனி
ரோமமெல்லாம் சிலிர்த்துக் கொள்ள
காற்றில் விரைந்து கொண்டிருக்கிறது.
பூனையுடன்
அதற்கு
ஆதியிலிருந்து
தொந்தமா பந்தமா?
மீண்டும்
இந்த ஊரடங்கு நாட்களில்
நான், ப்ரௌனி இன்னும் சில நாய்கள்
சில பூனைகள்
எப்போதாவது சில மனிதர்கள்
மனுஷிகள்
மட்டுமே
தெருவில் உலவுகிறோம்
எல்லா வழிகளும் முடிந்து
விளிம்புக்கு வந்து நிற்பதைப் போலத்தான்
இந்த நாட்களில்
இப்படி வந்து நிற்கிறோம்
பூனையிடமிருந்து தற்சமயம் விடுபட்டுவிட்டது
ப்ரௌனி
கோடையில்
உதிர்ந்து கிடக்கும் கிளைகள், இலைகள், மலர்களை
மாறாத புதுமையுடன் முகர்கிறது
என் முகம் அவள் முகத்துக்குப் பிறகு
எல்லாக் கோணங்களிலும்
எப்போதும் எனக்குச் சலிக்காமல் புதிதாக இருப்பது
ப்ரௌனியின் முகம்தான்
நான் அதைப் பார்க்கும்போது
அதில் தெரிவது
முதலில்
என் அன்பின் முகம் அதற்கு
அந்த அன்பின் முகத்தைச் சுற்றிக் கோடுகள் உண்டு
அந்த அன்பின் முகத்தைக் கடந்து
பிறகும் சில நேரம் கூர்ந்து பார்ப்பேன்
சலித்துப் புகைச் சித்திரமாய்க் காட்டி
சில கணங்களில்
மறையும் ப்ரவுனியின் சூட்சும முகம்
அந்த முகத்துக்கு வெளிக்கோடுகள் கிடையாது
நான்
இப்போது
என்னை
அவளை
ப்ரௌனியை கண்ணாடியில் நிறுத்திப் பார்க்க வேண்டும்
நான் அதைப் பார்த்துத்தானே ஆகவேண்டும்.
Comments