இந்தக் கோடையில் மட்டும் அல்ல; எந்தக் கோடைக்கும் மாபெரும் அணிகலனாகவும் வீண் ஆடம்பரமாகவும் என்னை உறுத்துவது இந்தச் சரக்கொன்றை மரங்கள் தான். உலர்ந்து மக்கும் வேம்பிலைகள், பன்னீர் பூக்களின் வாசனை வழியாக எனது புலன்கள்தான், முதலில் தெரிந்துகொண்டு சென்னைக்குள் கோடையை வரவேற்கிறது என்பது எனது எண்ணம். கடந்த பத்தாண்டுகளாகத் தான் சென்னை வெயிலை மஞ்சள் பொன்னாக்கித் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் சரக்கொன்றைப் பூக்களின் மலர்வையும் உதிர்வையும் கவனத்தோடு பார்க்கிறேன். புகைப்படக் கலைஞரும் ஒளிப்பதிவாளருமான அல்போன்ஸ் ராயை ஒரு நேர்காணலுக்காக சந்தித்தபோது, அவர் வீடு இருக்கும் தெருவுக்கே லேபர்னம் அவன்யு என்று பெயர் வைத்திருப்பதைக் குறிப்பிட்டார். சென்னையின் கோடைக் காலம் அதற்கேயுரிய வசீகரங்கள், மகிழ்ச்சிகள், உஷ்ணம் சார்ந்த அல்லல்கள், நினைவுகளைக் கொண்டதாக இருப்பினும் அவற்றுக்கு மத்தியில் வருடம்தோறும் என் காட்சிக்குள் அடர்ந்துவரும் இந்த சரக்கொன்றை பூக்கள் கொண்டிருக்கும், மொழியால் விண்டு விவரித்துவிட முடியாத அழகு என்னைக் கோபம் கொள்ளவே செய்கிறது; பெயருக்கு ஏற்ப சரம் சரமாய், மரமே மலர்களான நாங்கள் தான் என்று கூவியுரைத்து, தேரில் ஆடும் வண்ணத்தொம்பைகளாக, பிரமாண்ட ஜிமிக்கிகளாக அவை ஆட்டம் போடுகின்றன.
கோடை, விதவிதமாகக் கொள்ளும் ஒளிக்கோலங்களைத் தமது மஞ்சளில் சரித்து சரக்கொன்றைகள் நிற்கும்போது, ஆடம்பர அணங்கே ஆடம்பர அணங்கே, ஏன் இப்படி ஏன் இப்படி, இப்படி வந்து என்னிடம் நிற்கிறாய் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
காலை நடைக்குப் போகும்போது, இந்தச் சரக்கொன்றைகள் நிலத்தில் உதிர்ந்துவிழுந்த பிறகும், தெருவைப் பூக்கோலம் ஆக்கிவிடுகின்றன. சரக்கொன்றைப் பூவின் நடுவே இருக்கும் அவரைகளிலிருந்து, நூல் போல நீண்டு மோதிரம் போலச் சுருண்டிருக்கும் மஞ்சள் சூலகத்தண்டுகள், தார்சாலைகளைச் சுழித்துச் சுழித்து அபூர்வ ஓவியமாக மாற்றிவிடுகின்றன.
‘அழகின் சிரிப்பு’ என்று இயற்கையின் அழகை எழுதப் புகுந்த பாரதிதாசன் தான், அழகை அத்தியாவசியத்துக்கு அதிகமான உபரியாகவே ஒரு புள்ளியில் பார்த்துவிடுகிறார்.
எமது பிரதான இருப்பு நியாயமும், எமது ஆதாரத் தொழிலும் அழகின் பாற்பட்டதுதான் என்றாலும், அழகை நானும் உபரி என்றே கருதுகிறேன். அழகு பெரும்பாலும் பகட்டின் விளிம்பில் ஊறுபடுத்தும் கூர்மையைத் தீட்டியபடிதான் உள்ளது. சிலிர்க்கும் சேவலின் கொண்டை, மலர்த்தும் தங்கமீனின் வாலின் அடியில் உள்ள சிவப்பு, என் கண்ணுக்குத் தெரியாமல் இப்போது குரல் வழியாகவே தனது கூவல் வழியாக என்னைக் கிளர்த்திக் கொண்டிருக்கும் குயில். சூரிய ஒளியைப் பிரதிபலித்து சூரியனை மேலும் மகிமைப்படுத்தவா தலையில் பூத்திருக்கிறது பாரதிதாசன் வியக்கும் சேவல் கொண்டை; கோடை தோறும் என்னை மயக்கித் திகட்ட திகட்ட அடிக்கும் இந்த மஞ்சள் சரக்கொன்றை.
எதைச் சொல்ல எதை உணர்த்த எங்கெங்கோ மறைவிலும் யாரும் பார்க்காமல், யாரும் பார்க்க முடியாமல், அனைவரும் பார்க்கும் இடங்களில், அநாதரவான பருவங்களில், பேரிடர்க் காலங்களிலும் என்னை ஏன் அசரச் செய்து உதிர்ந்தும் போகின்றன இந்த அழகுகள்.
ஆமாம். கொள்ளாத பொருள்களோடும் சேர்த்து கூட்டிக் கொள்ளவே செய்கிறது இயற்கை. அதற்கு முன்னர், நாம் அஞ்சியும் நடுங்கியும் வியந்தும் துடித்தும் செத்தும்தான் நிற்க வேண்டும் ஒவ்வொரு கோடையிலும்; இந்தச் சரக்கொன்றை மலர்களுக்கு முன்னால் நான்.
அழகுச்சரக்கு
கொள்ளாத பொருள்களோடும், அழகினிற் சிறிது கூட்டிக்
கொள்ளவே செயும் இயற்கை, தான்கொண்ட கொள்கை மீறித்
தன்னரும் கை யிருப்பாம் அழகெனும் தலைச் சரக்கைக்
கிள்ளிவைத் திட்ட கிள்ளாய் கிட்டவா சும்மா வாநீ!
Comments