உலகம்
இங்கே
தன் மகத்துவத்தில்
ஏற்கெனவே
இருந்து கொண்டிருந்தது.
யாருமே உனக்காகக் காத்திருக்காத
இடம் எதுவோ
அங்கே
பின்மதிய ரயிலில்
நீ பயணித்து வந்திருக்கிறாய்.
அதன் சலிப்பு காரணமாக
யாருமே நினைவில் வைத்துக்கொண்டிருக்காத
ஒரு நகரத்தில்தான்
தங்குவதற்கான இடத்தைத் தேடும்போது
ஒரேமாதிரித் தோன்றும் வீதிகளின்
வலைப்பின்னலில்
நீ
உன் வழியைத் தொலைத்தாய்.
உன்னைப் போலவே
அப்போதுதான்
நின்றுபோன
தேவாலயக் கடிகாரத்தின் கீழே
முதல்முறையெனத் தோன்ற
உனது காலடி ஓசைகளை
நீ கேட்டாய்.
பிற்பகலின் மஞ்சள் ஒளியில் சுடரும்
இரண்டு காலி வீதிகளுக்கு நடுவே
உனது நடையை
தொடர்வதற்கு முன்னால்
திகைத்து நோக்க
பகட்டில்லாத
அகாதத்தின்
இரண்டு நீளும் வழிகள்.
Comments