இறுதி அல்லாட்டமும் ஓய்ந்துவிட்டது, அவன் தற்போது தனிமையில் கிடக்கிறான் – உடைந்து போனவனாயும் புறக்கணிக்கப்பட்டவனாகவும் . கிடந்தவன் அப்படியே உறக்கத்துக்குள் மூழ்கிவிட்டான். விழித்தெழுந்து பார்த்தபோது அவனது தினசரி இருப்பினுடைய பழக்கவழக்கங்கள், இடங்கள் அவனுக்காகக் காத்திருந்தன. முந்தின நாள் இரவு நடைபெற்றது குறித்து அதிகம் யோசிக்கக்கூடாதென்று தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டான். அந்த உறுதியால் உற்சாகம் கொண்டு வேலைக்குச் செல்வதற்காக பதற்றமேயின்றி உடைகளை அணிந்தான். ஏற்கெனவே செய்த வேலையையே திரும்பச் செய்யும் அலுப்பு காரணமான அசௌகரிய உணர்வுடனேயே, அலுவலகத்தில் பணிகளை சிறப்பாகவே மேற்கொண்டான். அங்கிருந்த மற்றவர்கள் அவனைப் பார்த்தவுடன் கண்களைத் திருப்பிக்கொள்வதை அவன் பார்க்காமல் இல்லை; அவன் இறந்துவிட்டானென்று அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். அந்த இரவில்தான் துர்கனவுகள் தொடங்கின. அந்தக் கனவுகள் எந்த ஞாபகச்சுவடையும் அவனிடம் விட்டுச் செல்லவில்லை – திரும்ப வருமோ என்ற அச்சத்தைத் தவிர. காலத்தில், அந்த அச்சம் நீடித்தது. அது அவனுக்கும் அவன் எழுதவிருக்கும் பக்கத்துக்கும் நடுவே, அவனுக்கும் அவன் வாசிக்க முயன்ற புத்தகத்துக்கும் நடுவே. எறும்புகளைப் போல பக்கங்களில் ஊறும். முகங்கள், பரிச்சயமான முகங்கள், படிப்படியாக மங்கி, குலைந்து, வஸ்துக்களும் மனிதர்களும் மெதுவாக அவனைக் கைவிட்டனர்.
வினோதமாகத் தெரிந்தாலும் அவனால் சத்தியத்தை சந்தேகிக்கவே முடிந்ததில்லை. அது அவனிடம் திடீரென்று மோதி உதித்தது. தனது கனவுகளின் வடிவங்கள், சத்தங்கள் மற்றும் வண்ணங்களை தன்னால் ஞாபகத்தில் கொள்ள முடியாது என்பதை அவன் உணர்ந்தான். அங்கே வடிவங்கள், வண்ணங்கள் அல்லது சத்தங்கள் கிடையாது. கனவுகளின் கனவுகளும் கூட. அவைதான் அவனது மெய்மை. காட்சிக்கும் அமைதிக்கும் அப்பாலான எதார்த்தம்; என்பதனாலேயே நினைவுக்கும் அப்பாலான எதார்த்தம். இறந்த நேரத்திலிருந்தே சுழற்றியடித்த பைத்தியக்காரக் காட்சிகளினால் அவன் அலைக்கழிக்கப்பட்டிருந்த நிலையைவிட இந்த திடீர் அறிதல் கூடுதல் அங்கலாய்ப்பை அளித்தது. அவன் கேட்ட குரல்கள் எதிரொலிகளாக இருந்தன; அவன் பார்த்த முகங்கள் முகமூடிகளாக இருந்தன; அவனது கையின் விரல்கள் நிழல்களாய் இருந்தன – தெளிவாக உணரமுடியாததாகவும், திடமின்றியும். உண்மைதான். இருப்பினும், அவனுக்குப் பிரியமானதாக, அத்துடன் பரிச்சயமானதாக.
ஆனாலும் இந்தப் பொருட்கள் அனைத்தையும் விட்டுச்செல்வது தனது கடமை என்பதை அவன் உணந்தான். தற்போது அவன் இந்தப் புதிய உலகத்துக்குப் பாத்தியதையுடையவன். இறந்தகாலம், நிகழ் மற்றும் எதிர்காலத்திலிருந்து நீக்கப்பட்டவன். சிறிதுசிறிதாக இந்தப் புதிய உலகம் அவனைச் சூழ்ந்தது.அவன் பல வேதனைகளால் பீடிக்கப்பட்டான், விரக்தி மற்றும் தனிமையின் பிராந்தியங்களினூடாக அலைந்திருக்கிறான் – பயங்கர யாத்திரைகள் அவை. அவனது முந்தைய கண்ணோட்டங்களை, நினைவுகளை, நம்பிக்கைகளைக் கடக்கவைத்தவை. அனைத்து பயங்கரமும் தத்தமது புதுமையில் பேரெழிலில் உறைந்துள்ளது. அருளுக்கு அவன் உரிமைப்பட்டவன் – அவன் அதைச் சம்பாதித்திருந்தான்; மரணமடைந்த கணத்திலிருந்து ஒவ்வொரு நொடியும், அவன் சொர்க்கத்திலேயே இருந்து வந்தான்.
Comments