வரைபடத்திலேயே இல்லாமல் போன தேசத்தில்
பல வருடங்களுக்கு
முன்பு இறந்த
யாரோ ஒருவரிடம்
புட்டத்தில்
அறைந்து
அழ அழக் கையளித்தனர்
நான் பிறந்தேன்
நேரம் என்னவென்று
தெரியவில்லை.
இதமான பருவம்
தொலைந்துவிட்டது
காற்று தூக்கிச்
செல்வதற்காக
ஒரு மரத்தின்
இலையைப் போல
நான் சுழன்று
பூமியில் விழுந்தேன்
சத்தமேயின்றி.
வரமா? சாபமா?
யார் உரைப்பது?
நான் இனியும்
வருந்தப்போவதில்லை.
ஒவ்வொருவரின்
இடர்பாடுகளுக்கும்
செவிகொடுக்கும்
ஒரு குருடியைப்
பற்றி
மக்கள் பேசிக்கொள்வதை
கேட்டிருப்பதால்.
அவள் பெயர்
நீதி.
அவள் எங்கே
இருக்கிறாளென்று
எனக்குத் தெரியாது.
சில தினங்கள்
இந்த உலகம் என்னை நன்றாக நடத்துகிறது
சில தினங்கள்
மோசமாக.
அவளிடம் நான்
காரணம் கேட்கவேண்டும்.
நான் ஒருபோதும்
அவளைப் பழிகூற மாட்டேன்
அந்தக் குருடி
பாவம்,
தன்னால் இயன்றதைச்
செய்பவள் அவள்.
Comments