கரும்புகையின் பின்னல் சடையாய் இருந்தாள் என் அம்மா. பற்றியெரியும் நகரங்கள்மீது என்னை அவள் துணியால்
சுற்றிப் பிரசவித்தாள். ஒரு குழந்தை விளையாடுவதற்கேற்ப விசாலமாகவும் காற்றோட்டமான இடமாகவும்
இருந்தது வானம். எங்களைப் போன்று நாங்கள் பலரையும் பார்த்தோம். புகையால் செய்யப்பட்ட
ஆயுதங்களை தங்கள் மேலங்கிகளில் பொருத்த முயற்சித்தனர். சொர்க்கங்கள் அனைத்தும் நட்சத்திரங்களால் அல்ல- சுருங்கிய செவிட்டுக் காதுகளால் நிறைந்திருந்தது.
000
நான் ஜிப்சிகளால்
திருடப்பட்டேன். எனது பெற்றோர்கள் மீண்டும் என்னைத் திருடி மீட்டனர். ஜிப்சிகள் என்னை
மீண்டும் திருடிக்கொண்டு சென்றனர். இப்படியாக சில காலம் கழிந்தது. ஒரு சமயத்தில் நான்
கூண்டுவண்டியில் எனது புதிய அம்மாவின் கருத்த காம்பைச் சப்பிக்கொண்டிருந்தேன். இன்னொரு
சமயத்திலோ, எனது காலை உணவை நீண்ட சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்து வெள்ளி ஸ்பூனால்
அருந்திக்கொண்டிருந்தேன். வசந்தத்தின் முதல் நாள் அது. எனது தந்தைகளில் ஒருவர் குளியல்
தொட்டியில் பாடிக்கொண்டிருந்தார்; இன்னொரு தந்தையோ வெப்ப மண்டலப் பறவையின் வண்ணங்களைக்
கொண்ட ஒரு குருவியை நேரடியாகப் பார்த்து வரைந்துகொண்டிருந்தார்.
000
எலிப்பொறியில் உள்ள வசிய உணவின் இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு நாங்கள் பரம ஏழைகள். நிலவறையில் தன்னந்தனியாக நாங்கள் இருக்கும்போது, அவர்கள் மேல்தளத்தில் மெதுவாக தப்படி எடுத்துவைப்பதை, படுக்கையில் புரண்டு உருள்வதை என்னால் கேட்க முடியும். “இவை இருண்ட, தீங்கான நாட்கள்” என்று என் காதைக் கொரித்தபடி எலி சொல்லியது. வருடங்கள் கடந்தன. என் அம்மா பூனை ரோமத்தாலான கழுத்துப்பட்டியை அணிந்திருந்தாள். நிலவறைக்குள் ஒளியேற்றுவதற்காக, தீப்பற்றும் வரை, எனது அம்மா தனது பூனை ரோமத்தாலான கழுத்துப்பட்டியை உரசினாள்.
Comments