Skip to main content

எனது தேவாலயத்தில் – சார்லஸ் சிமிக்


ஏதொவொரு சிறையின்

கொட்டடியில்

சித்திரவதைக்குள்ளான நீண்ட இரவில்

சிலுவையில் அறையப்பட்டு

ரத்தம் சிந்திய

நொறுக்கப்பட்டவர்களின் தேவன் நீ.

இந்த மனிதர்கள்

தங்கள் வேலையில் உணரும்

பெருமிதத்தை வியந்தபடி

குரூரத்தின் அந்தக் கருவிகளை

நீ தொட்டு சோதித்துப் பார்க்கிறாய்.

அவர்களின் மனைவியர் தாய்மார்கள்

அதிகாலை பிரார்த்தனைக்குச் செல்ல

எழுந்து விரைகிறார்கள்.

அவர்கள் உனது உடைந்த கை கால்களை

சிலுவையிலிருந்து தொலைந்துபோன முகத்தை

காண்பதற்குள்

நீயும் விரைந்து கிளம்பவேண்டியிருக்கிறது.

இருண்டதும் கம்பீரமானதுமான

குவிமாடத்துக்குக் கீழே

பயங்கரத்தை உண்டாக்கும் உனது இன்மையில்

இன்னும்

ஒன்றிரண்டு மெழுகுவர்த்திகள்

எரிந்துகொண்டிருக்கின்றன.

Comments