ப்ரவுனி பிறந்த இடம் சென்னைதான்
ரயிலைப் பார்த்திருக்கும் ப்ரவுனி
இதுவரை கடலைப் பார்த்ததில்லை
மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோ
போய்
கடலைப் பார்க்கவேயில்லை
என்ற கவலையும்
மூன்று வயதாகும் ப்ரவுனிக்கு இல்லை
எனது நண்பர் ஒருவர்
மனைவி ஊருக்குப் போயிருந்தால்
கடற்கரைக்கு எங்களோடு வருவார்
வீட்டில் மனைவி இருந்தால்
கடலைப் பார்ப்பதில்
அவருக்கு ஏனோ ஈடுபாடு இல்லை
ப்ரவுனி தாஜ்மகாலைப் பார்க்கவில்லை
ப்ரவுனி தியான்மென் சதுக்கத்துக்குப் போகவில்லை
ப்ரவுனி யாத்வஷேமுக்குப் போய் அஞ்சலி செலுத்தியதில்லை
ப்ரவுனி நயாகராவை அருகிருந்து ரசிக்கவில்லை
ப்ரவுனி என்னைப் போலக் கவிதை எழுதவில்லை
அதைப் பற்றியெல்லாம் ப்ரவுனிக்கு
புகாரும் ஏக்கமும் இல்லை
ப்ரவுனிக்கு நாங்கள் இருக்கும் தெருவைச் சுற்றி
இரண்டு தெருக்கள்
பயணிக்கவும்
ஒன்றுக்கு இருக்கவும்
கழிக்கவும் போதும்
ஆர்வ முகர்வுகளுக்கும்
சில கார்கள்
சில இரண்டு சக்கர வண்டிகள்
சில அமைதி மூலைகள் போதும்
கால்களை நாக்கால் தொட்டு உறவாட
சில முகம்கொண்ட மனிதர்களும்
போதும் போதும்
தனது உயிர்ப்பைத் தொடர்வதற்கு.
Comments