Skip to main content

ஆத்மநிர்பார்


இந்திய வரைபடத்தின் இடுப்புக்குக் கீழே வசிக்கும் பெரும்பாலான இந்தியர்களைப் போலவே எனக்கும் ‘ஆத்மநிர்பார்’ என்ற வார்த்தை அறிமுகமானபோது சரியாகவே உச்சரிக்கத் தெரியவில்லை. ஒரு வார்த்தையைச் சரியாக உச்சரிக்கத் தெரியும்போது அதன் அர்த்தமும் புரியத் தொடங்கிவிடும்போலும். நரேந்திர மோடி அதை அறிமுகம் செய்யும் போது அதன் அர்த்தத்தை உணர்ந்த ஆழத்திலிருந்து சரியாக உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். எனக்கு அந்த வார்த்தை டப் டப்பென்று வெறும் காற்று போலவே ஒலித்தது. நண்பர்களிடம் அந்த வார்த்தையைச் சொல்ல முயன்றேன். ஆத்ம என்று சொல்லும்போதே குழம்பிவிடும். எங்கே இறங்கி எங்கே ஏறவேண்டும் அந்த வார்த்தையில் என்று எனக்குத் தெரியாமலேயே இருந்தது. சுயச்சார்பு, தன்னிறைவு என்பது அந்த வார்த்தையின் அர்த்தமென்று தெரிந்தது. நரேந்திர மோடி அந்த வார்த்தையை அறிமுகப்படுத்திய போது, ஒவ்வொரு இந்தியனிடமும் அது இல்லை என்றும் அது தொலைதூரம் பயணித்து, சாதனை செய்து, மிக அபூர்வமாகக் கிடைக்கும் வஸ்து அல்லது பண்பு என்ற தோற்றத்தையே ‘ஆத்மநிர்பார்’ எனக்குக் கொடுத்தது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் சில மணிநேரங்கள் இடைவெளியில் அறிவிக்கப்பட்ட தேசிய அளவிலான ஊரடங்கில் மும்பை உள்ளிட்ட வடமாநிலத் தலைநகரங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையும் இல்லாமல், வீடுகளுக்கும் செல்ல முடியாமல் போனபோது, ‘ஆத்மநிர்பார்’ என்ற வார்த்தையின் அர்த்தம் எனது மரமண்டைக்குச் சிறிது புரியத் தொடங்கியது. எனது நாக்கிலும் அந்த வார்த்தைக் கொஞ்சூண்டு படியத் தொடங்கியது. அடுத்து டில்லியில் எல்லைகளில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை எட்டிக்கூடப் பார்க்காமல் மோடி தனது தனிமைவாசம் கொண்ட வீட்டில் மயில்களைக் கோதிக்கொண்டிருந்த புகைப்படங்களை வெளியிட்ட போது, எனக்கு ஆத்மநிர்பார் என்றால் என்ன அர்த்தம் என்று புகைமூட்டமாகப் புரியத் தொடங்கியது. கோவிட் பெருந்தொற்றின் முதல் அலையில் உங்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மோடி, தன் இதயத்திலிருந்து நாட்டு மக்களிடம் பேசியபோது, ஓ இது சுயசேவை அல்லவா என்பது தெரியத் தொடங்கியது. அப்போதும் ‘ஆத்மநிர்பார்’ என்ற வார்த்தையை எனக்கு உச்சரிக்கவே தெரியவில்லை. ஆத்மநிர்ஹ்ஹ் என்று தடுமாறிக் கொண்டுதான் இருந்தேன். சமீபத்தில் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் துவக்கத்தில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதக்கத் தொடங்கியபோது, சுடுகாடுகளில் மருத்துவமனைகளில் இடமின்றி எல்லாரும் தவிக்கத் தொடங்கியபோதுதான் நான் ‘ஆத்மநிர்பார்’-ஐ எந்தச் சிரமமும் இன்றி உச்சரிக்கத் தொடங்கிவிட்டேன். ஆத்ம நிர்பார் என்று மோடி போலவே சுத்தமாக நான் சொல்வதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மோடி இதை ஏன் அதிசயமான, நம்மிடம் இல்லாத வஸ்து போல அதை ஆக்கினார்? .

 ஆதிகாலத்திலிருந்து பிறப்பு முதல் இறப்புவரை இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ‘ஆத்மநிர்பார்’ வாழ்க்கையைத் தானே வாழ்ந்துவருகிறார்கள். பெரியார் இருந்திருந்தால் நாமெல்லாம் அப்பவேயிருந்து ‘ஆத்மநிர்பார்’ பசங்கதானே என்று கிண்டலும் செய்திருப்பார். தன்னோடு தன் சுயத்தில் தனியாக தன் கையே தனக்குதவி என்று நம் எல்லாரையும் ஆக்கியிருக்கும் இந்தப் பெருந்தொற்று நம் மேல் சுமத்தியிருக்கும் மாபெரும் அவலத்தை முன் உணர்ந்து ‘ஆத்மநிர்பார்’ என்று சொல்லிய நரேந்திர மோடியை, நாம் அரசியல் வித்தியாசங்களைத் தாண்டி ஆராதிக்கத்தான் வேண்டும். 

ஆத்மநிர்பார் என்ற வார்த்தை எனக்கு உச்சரிக்கக் கடினமாக இருந்தது என்றாலும் அது என்ன சொல்கிறது என்பதை எனக்குப் புரிவதற்கு எல்லாவற்றையும் புரிந்துகொள்வது போலவே தாமதமானாலும் ‘ஆத்மநிர்பார்’-ஐ தினம்தோறும், கணம்தோறும் வாழ்க்கை முறையாகவே பாவிக்கும் பெரும்பாலான இந்தியர்களில், தமிழர்களில் ஒருவன் நான் என்பதை இந்தத் தருணத்தில் மோடிக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடமாடும் சுயசேவை அங்காடி நான் என்றால் உங்களுக்குப் புரியாது. அய்யா மோடி, நான் ஒரு நடமாடும் ஆத்மநிர்பார் அங்காடி அய்யா. கங்கையில் மிதந்த பிணங்கள் எல்லாம் நடமாடிக் கொண்டிருந்த ஆத்மநிர்பார்கள்தான் அய்யா. எங்கள் இன்பம், துன்பம் எல்லாம் ஆத்மநிர்பாரிலிருந்து வந்ததுதான் அய்யா.

கடமையைச் செய்து பலனை எதிர்பாராதே என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச்சென்ற கிருஷ்ணனின் காலத்திலிருந்து, ஆத்மநிர்பாராக நாங்கள் வாழ்ந்துவந்தாலும், ஜனநாயக இந்தியாவில் யாரும் அதை ஒரு கொள்கையாக, திட்டமாக, தர்பாராக இதுவரைக்கும் தைரியத்தோடு அறிவிக்கவில்லை.     

ஆத்மநிர்பார், ஆர்ப்பாட்ட தர்பார்….ஆத்மநிர்பார்….ஆர்ப்பாட்ட தர்பார்.  

Comments

நாளிதழிக் வரவேண்டிய தகையங்கம் ஷங்கர்... சிறப்பு