Skip to main content

ப்ரவுனி கல் கண்


காலை எழுந்து ப்ரவுனியை நடைக்குக் கூட்டிச் செல்லும்போதே அந்த நாளின் பண்புகள் படிப்படியாக உருப்பெற்றுத் தன்னைக் காட்டத் தொடங்கிவிடும். ஒரு நாளை வேகமாக பழைய நாளாக்குவதில் காலையில் விழித்தவுடன் தலைக்குள் சத்தமாகக் கேட்கத் தொடங்கும் குரல்களுக்குப் பங்குண்டு. அந்தக் குரல்கள் கொடுக்கும் அசதியில் அயர்ந்து போய் வெளியே விழிப்புணர்வு குன்றி நான் நடப்பேன். தொடர்ந்து ஒரே இடத்தில் நடை பழகினாலும் முகர்ந்து முகர்ந்து தெருவையும் நாளையும் புதிதாக்கியபடி ப்ரவுனி எனக்கு முன்னால் செல்லும். உள்ளே சத்தம்போடும் குரல்களைப் பொருட்படுத்தாமல் வெளியே கவனத்தைச் சில நாட்களில் குவித்துவிடுவதும் அமையும். அப்போது குனிந்து ஒரு சிறுகல்லை அதை நினைவில் கொள்வதற்காக எடுத்துக் கொள்வேன். அந்தக் கல்தான் என் உடலின் அப்போதைய கண். அந்தச் சிறு கல்லை நான் கைக்குள் உணரும்போது எனது கண்கள் குவிந்து பார்க்கவும் எல்லாவற்றையும் கேட்கவும் தொடங்கும். அப்போது ஆங்காங்கே படுத்திருக்கும் தெருநாய்களின் சின்னச் சின்ன அசைவுகளும் என்னுள் பிரதிபலிக்க அவற்றையும் தொந்தரவு செய்யாமல் எனது பிராணியும் ஊறுபடாமல் நடைப்பயிற்சி செய்யும் மனிதர்களையும் என் பிராணி சங்கடப்படுத்தாமல் நான் உடல் முழுக்கக் கண்களோடு தெருவில் செல்ல முடியும். இதற்கு நேர்மாறாகத் தொடங்கும் நாட்களும் உண்டு. என் தலைக்குள் ஓயாமல் என்னைத் தாமசம் நோக்கித் தள்ளும் குரல்களுக்குள் விழுந்து மூழ்கி வெளியே எல்லாம் புகைமூட்டமாய் தொனிக்க, ப்ரவுனி என்னைச் சுமை போல இழுத்துச் செல்லும். அப்போது வெளியே இருந்து தாமசங்கள் கூடி ஆர்ப்பரிப்பது போல் தெருநாய்கள் எங்களை வந்து மோதும். ப்ரவுனி அத்துமீறி, மனிதர்கள் எங்களைக் கடிந்துசெல்லும் நிகழ்ச்சிகளும் அப்போது நேரும். அப்போதெல்லாம் சிறிய கல்லை அல்ல, பெரிய கல்லை எடுத்து வெளியில் எறிய வேண்டியிருக்கும். எறியும்போது வெளியில் மட்டும் அல்ல உள்ளேயும் நாளின் முதல் இம்சை உணரப்படும்.

கண் இல்லாத போது, கல் தேவையாக உள்ளது. கண்ணே கல்லாக ஆகும்போது, அது எனது உள்ளங்கைக்குள் பிரயோகிக்கப்படாமல் இருக்கும்போது, கல்லாக இல்லாமல் கண்ணாக எல்லா சத்தங்களுக்கும் விழித்தபடி அந்தச் சிறிய கல் உள்ளது. சபரியின் பாசுபதாஸ்திரம் அதுதான் போல.

Comments