Skip to main content

குலத்தந்தை ப்ளாக்கி

நாங்கள் வசிக்கும் வேளச்சேரி ரவி தெருவில் வாகனங்களின் சந்தடி குறைவு.  ஆசுவாசமாக இருக்கலாம் என்பதால் எப்போதும் ஐந்தாறு நாய்கள் எங்கள் தெருவை எங்களைப் போன்றே தங்கள் இடமாகவும் முகவரியாகவும் வைத்திருக்கின்றன. அவற்றில் எங்கள் பாப்பா பெயர் வைத்திருக்கும் ப்ளாக்கி என்ற ஆண் நாய்தான் மூத்தது. இரண்டு பெண் நாய்கள், மூன்று ஆண் நாய்கள் கொண்ட அந்தக் கூட்டத்தின் குலத்தந்தை என்று ப்ளாக்கியைச் சொல்வேன். வயது எனக்குத் தெரிந்து ஒன்பது வயதுக்கு மேல் இருக்கும். நான் கவனித்துவரும் இந்த நான்கு ஆண்டுகளில் தலையில், வாலில், உடலில் படுகாயங்கள் படாத இடமே இல்லை ப்ளாக்கிக்கு. இந்தக் காயத்தில் இறந்துவிடும் என்று நினைப்பேன். சில நாட்கள் தெருவிலேயே காணப்படாமல் போய், அந்த நினைப்பை ப்ளாக்கி உறுதிப்படுத்தவும் செய்யும். சில நாட்களில் புதிய காயங்களோடு வரும். ஒரு தடவை தலையில் கபாலம் தெரிய, பட்ட காயத்தைப் பார்த்து நானும் பாப்பாவும் ப்ளூ கிராசுக்கு தொலைபேசி செய்தோம். ப்ளூ கிராஸ் வேனில் சிகிச்சைக்காகக் கூட்டிச் செல்ல வந்தவர்கள், ப்ளாக்கி எங்கே என்று கேட்டு என்னை அழைத்தார்கள். நான் அது வழக்கமாக இருக்கும் இடத்துக்குக் கூட்டிச் சென்று அதற்கு விருப்பமான பாலை அளித்து, படிப்படியாக வேன் இருக்கும் இடத்துக்கு தாஜா செய்து அழைத்து வந்தேன். வேனில் இருந்து இறங்கிய இரண்டு பேரைப் பார்த்ததும் குதிரையாக மாறி பறந்தோடி விட்டது. ஒரு அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு அவர்கள் வேறுவழியில்லாமல் என்னிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அந்தக் காயமும் ப்ளாக்கியை ஒன்றுமே செய்யவில்லை. 

ப்ளாக்கி எப்போதாவது என் அருகில் வந்து முணுமுணுப்பது போல இரையும். பெரும்பாலான நேரங்களில் நான் கடக்கும்போது கம்பீரமாக என்னை ஒரு பார்வை மட்டுமே பார்க்கும். மிகச் சில சமயங்களில் கடைவரை வந்து பிஸ்கெட் வாங்கித்தருவதற்குக் கேட்கும். 

போன மாதம் ப்ளாக்கியை ரவி தெருவில் பார்க்கவே முடியவில்லை. ப்ளாக்கி மறைந்துவிட்டது; நாய்கள் பெரும்பாலும் அவை காணப்படும் இடங்களில் மரணமடைவதில்லை என்று மகளிடம் சொன்னேன். அவள் அப்படி இருக்கவே இருக்காது என்றாள். நான் படித்த விஷயத்தை மெய்ப்பிப்பதில் குறியாக இருந்தேன். 

சென்ற வாரம்தான் ப்ரவுனியை காலை நடைக்கு அழைத்துச் சென்றபோது, ராஜா தெருவில் ப்ளாக்கியையும் ரவி தெருவில் இருந்த இன்னொரு பெண் நாயையும் சேர்ந்து பார்த்தேன். எங்கள் தெருவில் புதிய நாய்கள் சேர்ந்திருப்பதும் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. எந்த சர்ச்சையும் இல்லாமல் இன்னொரு ஏகாந்தமான தெருவுக்கு குலத்தந்தை ப்ளாக்கி ஒரு துணையோடு குடிபெயர்ந்துவிட்டதை அடுத்தடுத்த நாட்களில் ருசுப்படுத்திக் கொண்டேன். 

ரவி தெருவில் இருந்தபோது காட்டிய இணக்கத்தை ப்ளாக்கி இப்போது என்னிடம் காட்டுவது இல்லை; அதனிடம், என்மேல் பகைமையும் இல்லை. ரவி தெருவில் இருக்கும் எனது உறவினர்களே எனக்கு இல்லையென்று ஆகியபிறகு, நீ மட்டும் எதற்கு என்று, குலத்தந்தை ப்ளாக்கி முடிவு செய்துவிட்டது போல இருக்கிறது அந்த விலகல். 

Comments

நாயார்கள் pack animals தானே... சிலசமயம் நாமும் அந்த packல் சேர்த்துக்கொள்ளப் படுவதும், பிறகு விலக்கப்படுவதும் நிகழ்கிறது... இந்த காலத்தில் இவர்களுக்கு நிறையவே இடம்பெயர்தல் இருப்பதைக் காண்கிறேன்.

அல்லது அவர்களை உற்று நோக்குமளவுக்கு நமக்கு மற்ற அபத்தங்களுக்கான் schedule மாறியிருக்கிறதோ என்னவோ