ஒரு கவிஞனின் முதல் தொகுப்பை அவகாசம் எடுத்துப் படிக்கத் தொடங்குவதற்கும், படபடப்பு இன்றி அவன் புழங்கும் பிரபஞ்சத்தை அவதானிப்பதற்கும், பொதுமைப்படுத்தி விடமுடியாத என்வகையிலான ஒரு முறைமையே எனக்குக் கைகொடுக்கிறது.
அதை நான் இன்னொருவருக்குப் பரிந்துரைக்க மாட்டேன். எனினும், வே. நி. சூர்யாவைப் பற்றிப் பேசும்போது அந்த முறைமை குறித்து முதல்முறையாகப் பேசிப் பார்க்கலாம் என்ற தைரியத்தை அடைகிறேன்.
குழந்தைகளிடமும் விலங்குகளிடமும் என்னைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளும் முறைக்கு ஒப்பானது அது. எனக்குத் தெரிந்த, அனுபவமான உலகத்தின், முகங்களின் சாயல் கொஞ்சம்போல இருக்கும் குழந்தைகளின் முகங்களிடம் சீக்கிரம் ஈர்க்கப்படுகிறேன். என் முகத்தின் சாயலையும் அதில் பிரதிபலித்துப் பார்க்கிறேன் என்பதைக் கூடுதலாக உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. அந்தப் பிரதிபலிப்பின் வழியாக முதல் ஈடுபாடும் முதல் உறவும் எனக்கு அந்தக் கவிஞனிடத்தில், அவனது கவிதைகளினிடத்தில் ஏற்படுகிறது.
அந்தப் பிரதிபலிப்பின் கைப்பிடித்து எனக்குப் பரிச்சயமில்லாத அனுபவம், சாயல்கள், உயிர்கள் உலவும் அவனுடைய பிரபஞ்சம் அறிமுகமாவதற்கு நடுக்கத்தோடு, ஆனால் என்னை அனுமதிக்கிறேன். அப்போது சவாலும் சாகசமும் கொண்ட அந்த உறவு திடம்கொண்டு, எழுந்து நடைபோடத் தொடங்கி விடுகிறது.
முற்றிலும் மனிதச்சாயலைக் கொண்டு, பெரியவர்களின் முகங்களைப் போல முழுக்கப் பூர்த்தியடைந்த, இனி மாறுவதற்குச் சாத்தியமேயற்ற குழந்தைகளின் முகங்களில், அவை மிக லட்சணமாக இருந்தாலும் எனக்கு ஈடுபாடு இல்லை. பேரிளம் பருவத்துக்குள் நுழையும் அழகியின் பூர்த்தி அடைந்த முகத்தை இரண்டு வயதிலேயே நிறைவடிவாகக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் போல – அந்தக் குழந்தைகள் என்னை ஈர்ப்பதில்லை.
குழந்தைகள் குரங்குகளைப் போல, வாத்துக் குஞ்சுகளைப் போல இருக்க வேண்டும். துடிப்பும் தாறுமாறான சாத்தியங்களும் ஆற்றலும் தான் அதன் அழகு. அந்தக் குழந்தைகள் இந்த உலகத்தில் ஏற்கெனவே வடிவம் பெற்றுவிட்டவற்றைக் கூடுமானவரை, கண்ணுக்கு கண் சந்திக்காமலேயே, அவர்களது உலகில் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும். மனிதர்களாக ஆகி இருக்கப் போகிறவர்கள், கொஞ்சம் காலமாகவாவது வடிவமெடுக்காமல் இருப்பது சுவாரசியம்தானே. குழந்தைகளுக்குப் பெயர் போடாமல் சிறிதுகாலம் வைத்திருப்பது போலத்தான். அவர்கள் மரணம் வரை சுமக்கும் பெயரின் சுமை, அவர்களுக்கு இல்லாமல் இருக்கட்டுமே.
நான் குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது முதல் கவிதைத் தொகுதிகள் பற்றித்தான் பேசுகிறேன். வெளிப்படுவதற்கு, ஒன்றாகத் தோன்றிக் காட்டுவதற்கு, எதையாவது நிரூபித்துக் கொண்டே இருப்பதற்கு எல்லாரும் முயன்றுகொண்டிருக்கும் இந்த உலகத்தில், ஒன்றாகத் தோன்றி நிற்பதற்கு எதிராக, உருவமெடுப்பவைகளின் உலகுக்கு முன்னால், உருவமெடுக்கும் வெற்றிப் பாதை அழைத்துச் செல்லும் இலக்கின் விபரீதம் குறித்த ஆழ்ந்த புரிதலையும் அதனால் தயக்கத்தையும் கொண்ட அரிய கவிஞனாக வே. நி. சூர்யா எனக்குத் தென்படுகிறார்.
கரப்பானியம் தொகுப்பு குறித்த எனது முதல் மனப்பதிவு, அவர் ஒன்றாக எனக்குத் துலங்கவில்லை; ஆனால், சிறு வண்டு உடல் முழுக்க அதிர்ந்து இரையும் ஆற்றலைப் போல அவர் கவிதைகள் மகத்தாக அதிர்ந்துகொண்டிருந்தன.
வெற்றி, கலையிலும் கவிதையிலும் இன்று, இயல்பாகியுள்ள நிலையில் தோல்வியைத் தேர்வு செய்வது சாகசமானது. தோல்வி என்பதை லௌகீகத் தோல்வி என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளக் கூடாது என்று விளக்க வேண்டிய துரதிர்ஷ்டத்தில் நாம் திரும்பத் திரும்ப இருந்துகொண்டிருக்கிறோம்.
ஞானக்கூத்தனிடம், 2014-ம் ஆண்டு ஒரு நேர்காணலுக்காகப் பேசியபோது, சமகாலக் கவிதைகளில், சமயம் போய்விட்டது என்று குறைபட்டார்.
தனக்கும் உலகத்துக்கும், தனக்கும் தன்னையும் உள்ளடக்கிய இயற்கைக்கும், தனக்கும் தன்னைச் சுற்றிய வஸ்துகளுக்கும் உள்ள உறவு குறித்த ஆழ்ந்த நோக்கை, அவதானிப்பைத் தான் அவர் சமயத்தன்மை என்று விளக்கினார்.
விமர்சனங்களைப் பொறுத்தவரை, பிரதானமாகத் தெரியும் போக்கை முன்வைத்துதான் நாம் விமர்சிக்கவும் முடியும். ஞானக்கூத்தனும் அப்படியாக, ஒரு மனப்பதிவையே விமர்சனமாக வைத்தார்.
வஸ்துக்களும் குணங்களும் எதிர் நிலைக்குப் போய்விட்டதாக எண்ணப்பட்ட சூழலில், வே. நி. சூர்யாவுக்கு முந்தைய தலைமுறைக் கவிஞர்களாக நாங்கள் எங்கள் கவிதைகளில் அப்படியாகவே வெளிப்பட்டோம். புறத்தில் இருக்கும் வஸ்துக்களையே, குணங்களாகக் கருதி நாங்கள் மோதவும் உறவுகொள்ளவும் செய்தோம். வஸ்துக்களுக்கும் எங்களுக்குமான உறவை, இரண்டைச் சுற்றியும் அலாதியாகத் தென்படும் நிசப்தமான இருப்பை எங்கள் தலைமுறைக் கவிஞர்கள் பார்க்கவில்லை; பரிசீலிக்கவும் இல்லை. தத்துவ மறுப்பு, தத்துவத்தின் மீதான அவநம்பிக்கை அல்லது தத்துவக் குருட்டைக் கொண்டிருந்த ஒரு தலைமுறை நாங்கள் என்று சொல்லலாம். புதிய பொருட்களை கவிதைக்குள் இழுப்பதன் மூலம் புதிய உணர்வை, அதனால் புதிய உலகத்தின் கவிதைகளை புனைவுகளால் நிரப்பி எழுதமுடியும் என்று சந்தேகங்களேயில்லாமல் நம்பினோம்.
விமர்சனம், பரவசம், புகார்களைக் கொண்ட உரத்த சந்திப்புதான் எங்களது கவிதைகள். சபரிநாதன், வே. நி. சூர்யா என அடுத்து ஒரு தலைமுறை வரும்போது, அவர்கள் பரிச்சயமான தத்துவ அறிவின் சாயல்களும் மூட்டமும் துலங்க, அ-தத்துவ வெளியாய் தங்கள் கவிதைகளைப் படைக்கின்றனர். இங்கே வஸ்துகளும் குணங்களும் சரிநிறை கொள்கின்றன. சில நேரங்களில் அவை உரையாடி, முயங்கி உறுமறைப்பையும் கொள்கின்றன. வே. நி. சூர்யாவின் கவிதையில் வரும் வாஷிங் மெஷினில், அதனால் தான் எண்ணங்களைப் போன்ற அழுக்குத் துணிகள் துவைக்கப் போடப்பட்டு வெளுப்பதற்காக அக்கறையின் வண்ணத்தில் இருக்கும் சோப்புப் பொடி கொட்டப்படுகிறது. ஒத்துவாழ்வதற்கு சரி சமமான தண்ணீர் குழாயோடும் அந்த சலவை எந்திரம் பூட்டப்படுகிறது. அதனால்தான் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் நெருப்பாக ‘நினைவு’, வஸ்துவின் தோற்றத்தை எடுக்கிறது. ஏகாந்தம், மானுடமற்ற கடலின் சப்தமாக ஆகிறது. இரவு, நரம்பு மண்டலத்தின் நீலப்புலரியாகத் தெரிகிறது.
எங்கள் காலத்தில் கவிதை சூடிய புனைவம்சத்தோடு, அமைதியையும் உட்கொண்ட நீள் கவிதையையும் சிறு காவிய வடிவங்களையும் சபரிநாதன், வே. நி. சூர்யா போன்ற இத்தலைமுறை கவிஞர்கள், அ-தத்துவ வெளியிலிருந்து உருவாக்கச் சாத்தியப்படுகிறது. அது எங்கள் தலைமுறைக்குச் சாத்தியமில்லாமல் இருந்தது. எங்களுக்கு முன்னர் அது ப்ரேம்-ரமேஷின் கிரணம் முயற்சியோடு நின்றிருந்தது.
000
இன்மை என்றால் என்னவென்று வே. நி. சூர்யாவுக்குத் தெரிகிறது. அது இருக்கிறதென்பதும் தெரிகிறது. இருப்பிலிருந்து இன்மைக்குச் செல்லும் பாதையும் வே நி சூர்யாவுக்குத் தெரிகிறது. இன்மைக்குள்ளிருந்தபடி இருப்பைப் பார்க்கும்போது, சகி ஒருத்தியின் பின்னங்கழுத்தின் நிழல் ஒரு மரமாகி நிற்பதைப் பார்க்கும் அனுபவம், புரிதல், கடத்தல் அபூர்வமானது. உலகமாக இருந்தாலும் சரி, பொருட்களாக இருந்தாலும் சரி அது மொழிவழியாகக் கடக்க வேண்டுமென்ற பிரக்ஞை எங்கள் காலத்தில் புகைமூட்டமாகவே தொழில்பட்டிருக்கிறது.
வே. நி. சூர்யாவின் கவிதைகளை மேய்ந்துவிட்டு, படுக்கையில் கால்நீட்டிப் படுக்கும்போது ஏதோ ஒன்றின் அணைப்புத் தேடி, காலின் கீழே மடிக்கப்பட்டு இருந்த போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டேன். இந்த உலகத்திலேயே சிறந்த அடைக்கலம் இந்தப் போர்வைதான் என்று தோன்றியது. இந்த உலகத்திலேயே இவ்வளவு எளிய, சிறிய அடைக்கலத்தில் நிறைவு காண்பதற்கு நான் பெருமைப்பட முடியுமா? இதைத்தான் நான் தேர்வு செய்யமுடியும் என்று என்மேல் கழிவிரக்கம் கொள்ளமுடியுமா?
ஆனால் மனத்துக்கு வெட்கம் கிடையாதில்லையா. அது தற்சமயம் போர்வையில் அடைக்கலம் கொண்டிருக்கிறது. அது போர்வையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. போர்வைக்காக, அது ஒரு பெரும்போரில் அடுத்தகணம் இறங்கிவிடக்கூடியது.
இந்தச் சம்பந்தத்தை எப்படி மனம் உருவாக்கிவிடுகிறது. போர்வையைத் தனது சுயத்தின் ஒரு பகுதியாக எப்படி நீட்டித்துவிட்டுகிறது க்ஷணத்தில். திருப்பிரதேசம் கவிதையில் வரும் "உன் கனவே என் மனம் மாதவி" ஒரு பெரிய கண்டுபிடிப்பு தான்; துயர அழகும்தான். இந்த மனத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற நகுலனின் கேள்விக்குத் துல்லிய பதிலாகவும் உள்ளது. என்னென்ன தொடர்புகள், என்னென்ன பிரதிபலிப்புகள், என்னென்ன நினைவுகள்.
வியட்நாமைச் சேர்ந்த நவீன பௌத்த குரு திக் நாட் ஹான், நாம் எழுதும் தாளில் ஒரு மேகம் மிதந்துகொண்டிருப்பதைப் பார்க்கமுடியும் என்று சொல்கிறார். மேகம் இல்லாவிட்டால் மழை இல்லை. மழையில்லையெனில் மரங்கள் வளரமுடியாது. மரம் இல்லாவிட்டால் காகிதம் சாத்தியமில்லை. ஒரு காகிதம் இருக்க வேண்டுமானால் மேகம் அவசியமானதாகிவிடுகிறது. மேகமும் காகிதமும் ஒன்றுக்கொன்றில் இருக்கின்றன.
சுயம், சுயமில்லாத எத்தனையோ பொருட்களால் உணர்வுகளால் நினைவுகளால் நிறைந்திருக்கின்றன.
வே. நி. சூர்யாவின் கவிதைகளைப் படித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், ஞானக்கூத்தன் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ‘பெயர்கள் ஏன் பொருட்களை மேய்த்துச் செல்கின்றன’ என்ற வரியைப் படிக்கும் போது ஞானக்கூத்தன் தனது பிரத்யேகத்துடன் சிரித்திருப்பார். ஞானக்கூத்தனின் சிரிப்பு என்னிடம் இன்னொரு வகையாகச் சேர்ந்து பிரதிபலிக்கிறதுதானே. அது கவிஞர் இசையிடம் அடுத்து பிரவாகமாய் எதிரொலிக்கிறதுதானே.
வஸ்துகளும் குணங்களும் சேர்ந்து குணம்கொள்ளும் கவிதைகள் வே நி சூர்யாவுடையவை. புதிய வஸ்துக்களை பழைய குணங்களுடன் இயல்பாக உரையாட, இயங்க, அசைய வைக்கிறார். நகுலன், ஆத்மாநாம், தேவதச்சன் உலகங்களின் பிரதிபலிப்பை கரப்பானியத்தில் பார்க்க முடிகிறது. கோணங்கியின் மொழித் தாக்கத்தை கரப்பானியத்தை அடுத்து எழுதிய கவிதைகளில் கச்சிதமாகத் துறந்திருக்கிறார் சூர்யா. அதுவே மிக நல்லது.
வே. நி. சூர்யாவின் ‘கரப்பானியம்’ தொகுதியில் வரும் துவக்கக் கவிதைகளில் வரும் சிறுவன், என் உலகத்தையும் சபரிநாதனின் களம் காலம் ஆட்டம் உலகத்தையும் பிரதிபலிக்கிறான்.
மருத்துவமனையில் கவிதையில், ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் சிறுவன் எனக்குள் இருப்பவன். அப்பாவின் நாள் கவிதையில் வரும் சிறுவன் கிட்டத்தட்ட நான் என்று படிக்கும்போது சத்தம்போட்டே விட்டேன். என் அப்பா நீலப்படத்தை நகரத்துக்கு வெளியே சென்று பார்த்துவந்தார். ஆனால், இந்தக் கவிதையில் வரும் சிறுவன் அப்பாவின் மீது மேலதிக இரக்கம் உள்ளவன். குடித்து ரோட்டில் சரிந்துகிடக்கும் தந்தையை நாய் குதறி இறந்துவிடக்கூடாதென்று எண்ணி வீட்டுக்கிழுத்து வருகிறவன். அவனுக்கும் அப்பாவுக்கும் இடையே, அம்மாவை அழவைக்கக் கூடிய, துடித்துக் கொண்டேயிருக்கக் கூடிய கத்தியை எனக்குத் தெரியும்.
வே. நி. சூர்யாவில் நான் பார்க்கும் சிறுவன் அப்பாவைச் செயலற்று துயரத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவன்.
அந்தக் கவிதையை நான் எழுதியிருக்கக் கூடிய பின்னணி வேறு. நான் என் அப்பா ரோட்டில் சரிந்து கிடக்கும் நிலையில், ஒரு வெறிநாயை மறைவிலிருந்தபடி ஏவும் சிறுவனை படைப்பவன். அப்பாவைக் கொல்ல இன்னும் ஒரு சிறுகத்தியை எனது கவிதையில் மறைத்து வைத்து அலைபவன்.
வே. நி. சூர்யாவுக்கு அப்பாவைக் கொல்வதற்கான மூர்க்கம் ஏதும் இல்லை.
சென்ற தலைமுறைக் கவிஞர்கள் விதவிதமான விலங்குகளை கவிதைகளில் நடமாட விட்டார்களெனில், வே. நி. சூர்யா தனது கவிதைகளின் உலகத்துக்குள் பூச்சிகளை நடமாடவிட்டுள்ளார். பூரானை அவரது அடையாளம் சொல்லும் உயிராக மாற்றியுள்ளார்.
திருப்பிரதேசம் கவிதை தொடங்கும்போது, வே. நி. சூர்யாவிடம் நான் அடையாளம் கண்ட சிறுவன் காணாமல் போய்விடுகிறான். எனக்குப் பரிச்சயமற்ற படபடப்பும் அச்சமும் வாதைகளும் மரணங்களும் கொண்ட உலகில் என் மன உடல் எந்திரம் நடுநடுங்க நுழைகிறேன். ஏன் ஒருவனுக்கு இத்தனை கனம், ஏன் இவனது வெளியீட்டில் இத்தனை மொழி அடுக்குகளைக் கொண்ட சுமை என்று எனக்குத் தோன்றாமல் இல்லை.
ஒரு பாலம் உடைந்து சட்டென்று சரிவதுபோல, இந்தக் கவிதையில் தென்படும் அறிவும் புரிதலும் துயரத்தை நோக்கி, மரணத்தை நோக்கி அழிவை நோக்கிச் சரியும் சித்திரங்களாக இவரது கவிதைகள் உள்ளன. நிலையாமை குறித்து விரைவிலேயே ஏற்பட்டுவிடும் பரிச்சயமும் கரப்பானியம் தொகுதி முழுக்க ஏறியிருக்கும் சாவின் சாயலும் ஒருவிதத்தில் வே. நி. சூர்யா குறித்த பிரமிப்பையும், அடக்க இயலாத விம்மலையும் தரும் அதேவேளையில் துயரத்தையும் அடைந்தேன். ‘உன் கனவே என் மனம்’ என்று அமைதியாக ஒரு இடத்தில் சொல்பவர், துயர உக்கிரம் என்று சொல்லக்கூடிய மொழியின் உன்மத்தத்தை ‘நினைவுநாள்’ வரிசை கவிதையில் அடைகிறார் .
இவ்விரவின் சிற்பம் தள்ளாட
எதிரொலிக்கிறது உன் வளையோசை
உன் மாயையை எதிர்கொள்ள இயலுமோ
இன்னது இன்னதென விதிக்கும்
உன் உள்மனதை அறியமுடியுமோ
இந்நாளில் இப்படி
வந்துநிற்கும் உன்னை
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பாப்லோ நெரூதாவின் தீயவளே கவிதையை ஞாபகப்படுத்தும் கவிதை இது.
வே. நி. சூர்யா கரப்பானியம் தொகுதிக்குப் பின்னர் எழுதிய கவிதைகளை வாசித்த பின்னர்தான், கரப்பானியம் தொகுதிக் கவிதைகளை வாசித்தது என்னைப் பொறுத்தவரை நம்பிக்கையானது.
மனம் என்னும் கண் காணாத காயத்துக்கு குணம்தேடிக் கவிதையில் புறப்பட்ட மரபில் வருபவர் வே. நி. சூர்யா. தாயுமானவர், வள்ளலார், பாரதி, அபி, நகுலன், தேவதச்சன், ஆனந்த், ஆத்மாநாம் வரிசையில் வருபவர் வே. நி. சூர்யா என்று கருதுகிறேன். தாயுமானவர் இந்த உலகை மாயாஜால நிகர் என்கிறார். வையகமே மறக்க இயலாத வண்ணநினைவுதான் இவ்வளவு காலமும் என்று சூர்யா தொடங்குகிறார்.
ஒரு ஞாபகத்தின் வேடம்தரித்து நடித்துதான் காட்டியிருக்கிறோமா என்று கேட்கும்போது நான் பார்த்த சிறுவனுக்கு வயோதிகம் வந்துவிடுகிறது.
புரிதலின் வடுதான் புலிக்கு வரிகள் ஆகிறது போலும். புரிதலின் வடுக்கள்தான் நம்மை வயோதிகர்களாகவும் ஆக்குகிறது போலும்.
நண்பர் வே. பாபுவின் நினைவை முன்னிட்டு பரிசைப் பெறும் வே. நி. சூர்யாவுக்கு எனது வாழ்த்துகள்.
உங்கள் வாழ்க்கையும் கவிதையும் மேலும் நிறைகொள்ள நீங்களும் கவிதைகளும் குணம்கொள்ள எனது இரைதல் சூர்யா.
Comments