Skip to main content

உள்ளேயுள்ள மனிதன் – சார்லஸ் சிமிக்


அது உடல் அல்ல

அது ஒரு அன்னியன்.

வேறு எதுவோ ஒன்று.

 

உலகத்தில்

நாம் அதே

அழுக்குக் குவளையைத்தான்

குத்தித் தள்ளுகிறோம்.

 

நான் சொறியும்போது

அவனும் சொறிகிறான்.

 

அவனைப் பிடியில் வைத்திருப்பதாக

கூறும் பெண்கள் உண்டு.

ஒரு நாய் என்னைத் தொடர்கிறது.

அது அவனுடையதாக இருக்கலாம்.

 

நான் பேசாமல் இருக்கும்போது

அவனும் பேசாமல் இருக்கிறான்.

அதனால் நான் அவனை

மறந்துவிடுகிறேன்.

இருப்பினும்

நான் ஷூ நாடாவை

கட்டுவதற்காக

குனியும்போது,

அவன் நிமிர்ந்து எழுகிறான்.

 

எங்களுக்கு ஒரே நிழல்தான்.

யார் நிழல்?

நான் இப்படிச் சொல்ல விரும்புகிறேன்:

அவன் துவங்கும்போது இருந்தான்

அத்துடன்

முடிவிலும் இருப்பான்”

ஆனால் அதையும்

நிச்சயமாகச் சொல்ல இயலாது.

 

இரவில்

அமைதியின்

சீட்டுக்கட்டை

நான் உட்கார்ந்து

கலைத்துக்கொண்டிருக்கும்போது

அவனிடம் சொல்கிறேன்:

“எனது சொற்கள் ஒவ்வொன்றையும்

நீ உச்சரித்தாலும்,

நீ ஒரு அன்னியன்.

நீ பேசவேண்டிய வேளை இது.”

Comments