Skip to main content

கனவுகளின் பேரரசு - சார்லஸ் சிமிக்


எனது கனவுப்புத்தகத்தின் முதல்பக்கத்தில்

எப்போதும் சாயங்காலம்.

ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில்.

 ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னர்.

தலைநகரிலிருந்து தூரத்திலிருக்கும்

ஒரு சிறிய நகரம்.

இருளடர்ந்த வீடுகள்.

சூறையாடப்பட்ட கடைகள்.

 

நான் நிற்கக்கூடாத

தெருமுனையில்

நிற்கிறேன்

தனியாக.

 

மேல்கோட் இல்லாமல்

எனது சீழ்க்கையொலிக்கு

ஓடிவரும்

ஒரு கருப்புநாயைத் தேடி

அங்கே வந்திருக்கிறேன்.

நான் அணிவதற்கு அச்சப்படும்

ஹாலோவீன் முகமூடி

என்னிடம் உண்டு.


(ஹாலோவீன் தினம் – பேய்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக விதவிதமாக முகமூடிகள் அணியும் தினம்) 

Comments