ஆபேலின் மரணத்துக்குப் பிறகு காயினும் ஆபேலும் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் பாலைவனத்தினூடாக நடந்துகொண்டிருந்தபோது, இருவருமே நெடியவர்கள் என்பதால், தொலைவிலேயே ஒருவரையொருவர் இனம்கண்டு கொண்டனர்.
தரையில் இரண்டு சகோதரர்களும் அமர்ந்து நெருப்பை உண்டாக்கிச் சாப்பிட்டனர்.
அந்திசாயத் தொடங்கியபோது, களைப்புற்றவர்கள் எல்லாரும் செய்வதைப் போல், அவர்கள்
மௌனமாக அமர்ந்திருந்தனர். வானில் ஒரு நட்சத்திரம் சுடர்ந்தது, ஆனால் அதற்கு இன்னும்
ஒரு பெயர் வழங்கப்படவில்லை. காயின், ஆபெலின் நெற்றியில் கல்பதிந்த தடத்தை நெருப்பொளியில்
கண்டு, வாய்க்குக் கொண்டுபோகவிருந்த ரொட்டியைக் கீழே போட்டுவிட்டு, தனது சகோதரனிடம்
மன்னிப்பைக் கோரினான்.
“நீதான் என்னைக் கொன்றதா,
அல்லது நான் உன்னைக் கொன்றேனா?” ஆபேல் பதிலளித்தான். “எதுவும் எனக்கு ஞாபகத்தில் இல்லை;
இப்போது நாம் இங்கே சேர்ந்து அமர்ந்திருக்கிறோம், முன்பைப் போல.”
“நீ என்னை மெய்யாகவே
மன்னித்துவிட்டாயென்று இப்போது நான் தெரிந்துகொண்டேன்” காயின் கூறினான். “ஏனெனில் மறப்பதுதான்
மன்னிப்பதாகும். நானும் மறக்க முயற்சிப்பேன்.”
“ஆம்” என்றான் ஆபெல்
மெதுவாக. “உறுத்தல் நீடிக்கும்வரை, குற்றவுணர்வும் நீடிக்கும்.”
(ஆதாம், ஏவாள் பெற்ற
மகன்களில் மூன்று பேரின் பெயர்கள் மட்டுமே ஆதியாகமத்தில் குறிப்பிடப்படுகிறது.
அதில் காயின் மூத்தவர், ஆபேல் இளையவர். காயின் தம்பி ஆபேல் மேல் பொறாமை கொண்டு கொலைசெய்துவிடுகிறார்.
இந்த மண்ணில் நடைபெற்ற முதல் கொலை இது.)
Comments