Skip to main content

சாம்ராஜ்யங்கள் - சார்லஸ் சிமிக்


முட்டாள்களே,

உங்கள் சாம்ராஜ்யங்களின்

முடிவை

தீர்க்கதரிசனமாய் உரைத்தாள்

என் பாட்டி.

அவள்

வீட்டில் இஸ்திரி செய்துகொண்டிருந்தாள்.

வானொலி இயங்கிக்கொண்டிருந்தது.

எங்கள் பாதங்களுக்குக் கீழே

பூமி நடுங்கிக்கொண்டிருந்தது.

அவர்களின் நாயகர்களில் ஒருவர்

வானொலியில்

உரையாற்றிக் கொண்டிருந்தார்.

பாட்டியோ

“அசுரன்”

என்று உரையாற்றியவரை ஏசினார்.

கரகோஷங்களும்

துப்பாக்கி வணக்கங்களும்

அந்த அசுரனுக்குக் கிடைத்தன.

“எனது கரங்களாலேயே அவனை நான் கொல்வேன்”

என்றாள் என்னிடம் பாட்டி.

அதற்குத் தேவையே எழவில்லை.

அவர்கள் என்றைக்காவது 

சைத்தானிடம் போய்ச் சேர்பவர்கள்தான்.

“இதை வெளியே போய் உளறிக்கொண்டிருக்காதே”

என்னை எச்சரித்தாள் பாட்டி.

என் காதைத் திருகி

அதை நிச்சயப்படுத்தியும் கொண்டாள். 

Comments