Skip to main content

வரலாற்றுக்கென்று தனி வாசகர் வட்டம் இல்லை – ஆ. இரா. வேங்கடாசலபதி


வ.உ சி., பாரதி, புதுமைப்பித்தன் வழியாக தமிழ் சமூகம் நவீனமடைந்த பின்னணிதான் ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதியின் களம். வ.உ.சி. வாழ்க்கைச் சரிதத்தை நிறைவுசெய்யும் பணியில் உள்ள ஆ.இரா. வேங்கடாசலபதியிடம் கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பிப் பெற்ற பதில்கள் இவை. வ.உ.சி., சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திய கதையைப் பெரும் ஆய்வுநூலாக இவர் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளதன் பின்னணியில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.

Swadeshi Steam என்ற பெயரில் பெரியதொரு நூலை வெளியிட்டு, வ.உ.சி.யின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதிமுடிக்கும் நிலையில் உள்ளீர்கள். 40 ஆண்டுகளை அதற்குச் செலவழித்துள்ள நிலையில் வ.உ.சி. உங்கள் மீது ஆளுமையாக என்னென்ன மாற்றங்களைச் செய்துள்ளார்?

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வ.உ.சி.யுடன் வாழ்ந்து வருகிறேன். 14 வயதுச் சிறுவனாகத் தொடங்கிய பயணம் நரைகூடும் வயதுவரை இன்னும் தொடர்கிறது. இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதை இந்தத் தேடலே தீர்மானித்துள்ளது. ஊர் ஊராகச் சுற்றியுள்ளேன். பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துள்ளேன். நான் பிறந்து வளர்ந்த பின்னணியில் சாத்தியப்படாத அனுபவங்கள் இவை. வ.உ.சி.யை அடியொற்றிச் சென்றிராவிட்டால் நான் வரலாற்றாய்வாளனாக ஆகியிருக்கமாட்டேன் என்பது நிச்சயம். வ.உ.சி.யையும் அவர் வாழ்ந்த காலத்தையும் புரிந்துகொள்ளும் முயற்சியே என்னுடைய அறிவுலக வாழ்க்கையைத் தீர்மானித்துள்ளது. அதன் விளைவாகப் பெற்ற அறிமுகங்களும் பழக்கங்களும் என்னை ஒரு சமூக மாந்தனாக மாற்றியுள்ளன என்று சொல்ல முடியும். வ.உ.சி. நூற்றாண்டு மலருக்காகப் புலவர் த.கோவேந்தனைத் தேடிச் சென்றிராவிட்டால் நான் என்னவாக ஆகியிருப்பேன் என்று சொல்லத் தெரியவில்லை.

வ.உ.சி.யைப் பற்றி இதுவரை எட்டு நூல்களை எழுதியும் பதிப்பித்துமுள்ளேன். Swadeshi Steam அவருடைய சுதேசிக் கப்பல் சாதனையை மையப்படுத்தியது. எஞ்சிய வரலாற்றை இன்னும் இரண்டு தொகுதிகளில் எழுத வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். பார்ப்போம்.

வ.உ.சி. கொடுஞ்சிறைத் தண்டனையிலிருந்து வெளியே வந்தபின்னர், அப்போதைய காங்கிரஸிலிருந்து அவர் அன்னியமாகிவிட்டார் என்பதை உங்கள் நூல் தெரிவிக்கிறது. பெரியாரின் மரியாதையைப் பெற்றவராக வ.உ.சி. இருந்துள்ளார். பெரியாரைப் பாதித்த 'ஞானசூரியன் நூலை மறுபதிப்பு செய்தபோது அதற்கு முன்னுரை எழுதுவதற்கு வ.உ.சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார், பெரியார். மேலும், வ.உ.சி.க்கு இருந்த தொடர்புகளைப் பார்க்கும்போது சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பகட்டத்தில் ஈடுபட்டவராகவும் தெரிகிறது. பெரியார் இயக்கம் அவர் மீது என்னவகையான தாக்கம் செலுத்தியது? வ.உ.சி. மீது பெரியார் செலுத்திய தாக்கம் என்ன?

சிறையிலிருந்து வெளிவந்தபின் வ.உ.சி. அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார் என்பது ஒரு மாயை. வ.உ.சி.யின் புகழை முதற்கட்டத்தில் பரப்பிய ம.பொ.சி., தம் அரசியல் நிலைப்பாடு காரணமாகக் கட்டமைத்த பிம்பம் இது. சிறை வாழ்க்கையின் பின்னான கால்நூற்றாண்டு காலத்தில் வ.உ.சி. சோம்பி இருந்துவிடவில்லை. மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் அக்காலத்து அனைத்து இயக்கங்களிலும் அவர் பங்குகொண்டிருந்தார். தொழிலாளர் இயக்கம், சமூகச் சீர்திருத்தம், சைவச் சீர்திருத்தம், தமிழ் மறுமலர்ச்சி என அனைத்திலும் அவர் பங்காற்றினார். காங்கிரஸ் கட்சியோடு முரண்பாடு கொண்டிருந்தாலும் நாட்டு விடுதலை இயக்கத்தோடு அவர் தொடர்பு அற்றுப்போகவில்லை.

1916இல் பி.டி தியாகராயரும் டி.எம். நாயரும் பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிட்டு, நீதிக் கட்சியைத் தொடங்கிய பின்னர் தமிழக அரசியலில் கூர்மைப்பட்ட பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் முரண்பாடு வ.உ.சி.யிடமும் வெளிப்பட்டது. 1920களின் பிற்பகுதியில் அவர் செட்டிநாட்டில் ஆற்றிய உரைகள் முக்கியமானவை. 'ஞானசூரியன்' முன்னுரையை நீங்களே குறிப்பிட்டுவிட்டீர்கள். இரண்டொரு சுயமரியாதைத் திருமணங்களைக்கூட அவர் முன்னின்று நடத்தியிருக்கிறார். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதும் சைவர் உலகில் அது பெரும் கலக்கத்தை உண்டு பண்ணியது. அப்போது சைவரிடையே சுயமரியாதை இயக்கத்தின் குரலாக வ.உ.சி. விளங்கியதை எனது “திராவிட இயக்கமும் வேளாளரும்' என்ற நூலில் பல ஆதாரங்களோடு விளக்கி எழுதியுள்ளேன். இது உள்ளது, தரவுகளும் உள்ளன.

வ.உ.சி.யை காந்தி ஏமாற்றினாரா? என்ற உங்கள் கட்டுரை இரு ஆளுமைகளின் உயர்ந்த அம்சத்தை தெரிவிப்பவை. ஆனால், உங்கள் கட்டுரை காட்டும் சமநிலையையும் மீறி காந்தி இவ்வளவு கறாராக் இருந்திருக்க வேண்டாமே என்ற உணர்வுஎழுவதைத் தவிர்க்க இயலவில்லை ?

காட்டியிருக்கக் கூடாதுதான். ஆனால், அதை காந்தியிடம் யார் சொல்வது! பதிவதும் புரிந்துகொள்வதும் விளக்குவதுமே வரலாற்றாளனின் பணி. தீர்ப்பு கூறுவதல்ல.

வாஞ்சியால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷ் துரை சந்திப்பு பற்றிய கட்டுரை, தமிழ்க் கலைக்களஞ்சியம் தொடர்பிலான நூல், சுதேசிக் கப்பல் பற்றிய நூல் என எல்லாவற்றிலும் ஒரு கதைசொல்லும் நேர்த்தியைப் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் தமிழ், ஆங்கில மொழிக்கான தாக்கத்தைப் பெற்ற புனைவாசிரியர்கள் யார்?

இலக்கிய வாசிப்பின் வழியாகவே வரலாற்று நுழைந்தவன் நான். அபுனைவு எழுத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தாலும் புனைவெழுத்தையும் தொடர்ந்து வாசிக்கிறேன். புதுமைப்பித்தன் என் மனங்கவர்ந்த நாயகர். பத்தாம் வகுப்பு விடுமுறையில் படித்த அவருடைய கதைகள் என்னைப் புரட்டிப்போட்டன. விந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ம.இலெ. தங்கப்பா எனப் பல எழுத்தாளர்கள் என்னைப் பாதித்துள்ளனர். ஆங்கில வழியான உலக இலக்கிய வாசிப்பும் உதவியிருக்கிறது. டேவிட் லாட்ஜ் எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில நாவலாசிரியர். என் தலைமுறையில் மார்க்கேஸ், உம்பெர்தோ ஈக்கோ, ஜான் பெர்ஜர் ஆகியோரைப் படிக்காமல் இருந்திருக்க முடியாது. அபுனைவில் கட்டுரைகளும் வாழ்க்கை வரலாறுகளும் சுயசரிதைகளும் எனக்கு உவப்பானவை. பீட்டர் அக்ராய்டு, ஏ.என். வில்சன் எனக்கு விருப்பமான வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் . ஸ்டீபன் ஜே கோல்டு என்னை மலைக்க வைத்த கட்டுரையாளர். ஒரு வசதிக்காகப் பயண நூல்கள் என்று சொல்லப்படும் நார்மன் லூயிஸ், ரிச்சர்ட் கப்புசின்ஸ்கயினுடைய படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

'லண்டன் ரிவ்யு ஆப் புக்ஸ்' இதழில் வரும் நீண்ட மதிப்புரைக் கட்டுரைகளைப் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். இ.பி. தாம்சன், எரிக்ஹாப்ஸ்பாம், யூஜின் ஜெனோவீஸ், ஃபெர்டிணாண்ட் பிராடல் போன்ற சிறந்த வரலாற்றாசிரியர்கள் அனைவருமே தேர்ந்த எழுத்தாளர்கள்தான்.

மேலைநாட்டில் உள்ளது போல் வரலாற்றுக்கென்று தனித்த வாசகர் வட்டமும் சந்தையும் தமிழ்ப் பதிப்புலகில் இல்லாததால் வாசகர்களுக்காக நான் இலக்கிய எழுத்தாளர்களுடன் போட்டிபோட வேண்டியுள்ளது. சுவையாக எழுத வேண்டிய கட்டாயம் இதனாலும் ஏற்படுகிறது. வரலாற்றுப் புரிதல் என்ற ஒளி தென்பட்டதும் அந்தப் பரவசத்தை என் வாசகர்களுக்குக் கடத்த முற்படுகிறேன். வரலாற்றைப் போன்றதொரு சுவாரசியமான விஷயத்தை எப்படி வரட்டுத்தனமாக எழுதமுடியும் என்பதும் எனக்குப் புலப்பட்டதில்லை.

தமிழில் செம்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை சரிதங்கள் மிகவும் சொற்பம். புதுமைப்பித்தனுக்கு தொ.மு.சி. ரகுநாதன் எழுதியது, பாலசரஸ்வதிக்கு அவரது மருமகனே எழுதியது என்று சில ஆக்கங்களே ஞாபகத்துக்கு வருகின்றன? பெரியாருக்குக் கூட ஒரு சிறந்த வாழ்க்கை சரிதம் இல்லையே. ஏன்?

உ.வே.சா. எழுதிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வித்துவான் செட்டியார் வரலாறுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 

இவற்றோடு மனித வாழ்வே அநித்யம்; புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் மறுபிறவிகள் உண்டென்று நம்புகிற ஒரு பண்பாட்டில் ஈன 'மனிதப் பிறவிக்கு என்ன பெறுமதி இருக்க முடியும்; அதன் வரலாற்றை எழுதுவானேன் ? ராமச்சந்திர குஹா கொடுத்த இந்த விளக்கம் தத்துவம் சார்ந்தது.

ஆனால், வாழ்க்கை வரலாறுகள் பெருகுவதற்கான தடைகள் பெரிதும் நடைமுறை சார்ந்தவை. வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கு நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும். நூலகம், ஆவணக்காப்பகம் என்று அலைய வேண்டும். நேர்காணல், களப்பணி என்று பயணம் செய்ய வேண்டும். இதற்கு நிறைய செலவு பிடிக்கும். மேலும் வரலாற்று நாயகர்களின் நாட்குறிப்புகள், கடிதங்கள் ஆகியவற்றைப் பேணும் வழக்கம் நம்மிடம் இல்லை. வாழ்க்கை வரலாறு எழுதுவது சுலபம் என்றும் பலர் நினைக்கிறார்கள். பிறந்தான், வாழ்ந்தான், செத்தான் என்று வரிசைக்கிரமமாக எழுதிச் செல்வது வாழ்க்கை வரலாறு அல்ல. அது மிகவும் சவாலான ஓர் இலக்கிய வகைமை. இருபது அண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சனைக் கொண்டு தி. ஜானகிராமன் வாழ்க்கையை எழுதுவிக்க முயன்றோம். ஆனால், எங்கள் எண்ணம் ஈடேறவில்லை.

அதிருக்கட்டும். இவ்வளவு முயற்சிக்குப் பிறகு எழுதும் நூலுக்குச் சந்தை உண்டா? நிறுவன ஆதரவோடு சுந்தா எழுதிய 'பொன்னியின் புதல்வர்' விற்காமல் பல காலம் தேங்கியிருந்ததை நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். வானதி பதிப்பகம் வெளியிட்ட கல்கி வரலாற்றுக்கே இதுதான் கதி! பழ. அதியமான் கடுமையாக உழைத்து, டாக்டர் வரதராசுலு நாயுடுவின் வரலாற்றை சுவாரசியமாக எழுதினார். “பெரியாரின் நண்பர்' என்று சுண்டியிழுக்கும் தலைப்பையும் வைத்தார். எவ்வளவு பிரதி விற்றது?

மேலும், நம் நாயகர்களின் தனி வாழ்க்கையைப் பற்றிக் கிசுகிசு பேசுவதற்குத் தயாராக உள்ள சமூகம், முழு உண்மைகளை வெளிப்படையாகப் படிக்கத் தயாராக இல்லை. இந்நிலையில் நல்ல வாழ்க்கை வரலாறுகள் தமிழில் இல்லை என்று புலம்புவதில் என்ன அர்த்தம் ? நமக்குத் திருத்தொண்டர் புராணமே போதும்!

ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்றாசிரியர்கள் ஆளும் பாஜக அரசின் கடும் விமர்சகர்களாகவும் ஆகியுள்ளனர். உங்களது அரசியல் சார்பு நிலையைவெளிப்படுத்த உங்களது ஆக்கங்களே போதும் என்றுமுடிவுடன் உள்ளீர்களா? சமகால அரசியலைப் பற்றி நீங்கள் எழுதுவதில்லையே ?

இது அறியாதார் கூற்று. அரசியல் சார்ந்த என் எழுத்துகளைப் பெரிதும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். தமிழ் வாசகர்கள் இதனை அறியமாட்டார்கள் போலும். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு அறியாமை மட்டுமே காரணம் என்று நான் நம்பவில்லை. “இந்து', 'இந்தியா டுடே”, “டெலிகிராஃப்', “டைம்ஸ் ஆப் இந்தியா”, “அவுட்லுக், “மிண்ட், “தி வையர்', “ஸ்கிரோல்' என்று ஏராளமான முன்னணி இதழ்களில் அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளேன்; நேர்காணல்களில் அவதானிப்புகளைச் செய்துள்ளேன். பிரணாய் ராய், ராஜ்தீப் சர்தேசாய், சாகரிகா கோஷ், யோகேந்திர யாதவ் ஆகியோரோடு தேர்தல் நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றியுள்ளேன். தமிழக அரசியல் ஆளுமைகள், நிகழ்வுகள் பற்றிய கூர்மையான விமரிசனங்களை Tamil Characters என்ற என் நூலில் காணலாம்.

பெருமாள்முருகன் சர்ச்சையின்போது தமிழ் ஊடகங்களிடம் கண்ணன் பேசுவதென்றும், அனைத்துலக ஊடகங்களிடம் நான் உரையாடுவதென்றும் வேலைப் பிரிவினை செய்துகொண்டோம். பேசிப் பேசித் தொண்டையே வற்றிவிட்டது.

1988 தொடங்கி எண்ணிலடங்காக் கூட்டறிக்கைகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். ராஜிவ் காந்திக்கு சல்மான் ருஷ்டி எழுதிய பகிரங்கக் கடிதத்தை 1988இலேயே தமிழாக்கி வெளியிட்டவன் நான். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது “இந்து”வில் நடுப்பக்கக் கட்டுரை எழுதியிருக்கிறேன்.

எகானமிஸ்ட், நியூயார்க்டைம்ஸ், ஃபினான்சியல் டைம்ஸ் போன்ற சர்வதேச இதழ்களில் மேற்கோள் காட்டப்பட்ட எத்தனை தமிழ் எழுத்தாளர்களை உங்களுக்குத் தெரியும்?

தமிழகத்துக்கு வெளியே தமிழ்சார்ந்த குரல்களுக்கு இடம் இல்லாத சமயத்தில் நான் அந்த வேலையைக் கொஞ்சம் செய்துள்ளேன்.

இருமொழிகளில் எழுத்து, பதிப்பு; நண்பர்களின் எழுத்துப் பணிக்கு உதவுதல் என்பதற்கு இடையில் இதையும் விட்டுவைக்கவில்லை. இப்போது தமிழர்கள் பலர் என்னைவிட மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதி வருகிறார்கள். ஆகவே அண்மைக்காலத்தில் இதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டுள்ளேன். அவ்வளவே.

தமிழில் பல முக்கிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்களின் படைப்புகள் வெளியுலகம் அறிந்துகொண்டதில் என் பங்கு உண்டு.

தமிழகச் சூழல் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் அயல் மாநிலத்தவருக்கும் அயல்நாட்டினருக்கும் செய்திகளையும் பார்வைகளையும் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவம் முகநூல் வீரர்களுக்குத் தெரியாது. கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கும் சூழலில் பெரியார் ஆய்வாளன் என்று அறியப்படுவதன் விளைவுகளையும் அவர்கள் அறியமாட்டார்கள் !


அச்சுப் பண்பாடு வழியாக தமிழ் நவீனமடைந்த வரலாறுதான் உங்களது ஆய்வுப் பரப்பு. 1980, 90களில் மாறிக்கொண்டி ருந்த தமிழ் அச்சுத் தொழில்நுட்பத்தையும் நெருக்கமாக அவதானித்திருக்கிறீர்கள். அதைப் பற்றி ஒரு நூலை எழுதும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா ?

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின்முற்பகுதியிலும் தமிழும் தமிழகமும்  நவீனமானதையொட்டித் தமிழ் பதிப்புலகில் நிகழ்ந்த மாற்றங்களை என்னுடைய நூல்கள் பலவற்றில் பதியவும் பகுப்பாய்வு செய்யவும் முயன்றுள்ளேன். அண்மைக் காலங்களில் தொழிநுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டபோது ஏற்பட்டதைவிட மிகப் பெரியதொரு அறிவுத்தோற்றவியல் புரட்சி நம் கண்முன் அரங்கேறி வருகிறது. அறிவைத் தேடுவது, திரட்டுவது, பகுப்பாய்வது என அனைத்து நிலைகளிலும் பாரதூரமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இவற்றைச் சீர்தூக்கி மதிப்பிட மேலும் காலம்வேண்டும்; வேறு அறிவுத் துறைகளில் பயிற்சியும் வேண்டும். அவை எனக்கில்லை. இருந்தாலும், அச்சுத் தொழில்நுட்பத்தின் வரலாற்றை விரிவாகப் பரிச்சயப்படுத்தி கொண்டவன் என்ற முறையில் என் அவதானிப்புகள் பலவற்றை எழுதியுள்ளேன்; சில நேர்காணல்களில் பகிரவும் செய்துள்ளேன். இவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன.

தமிழில் நூல்கள் வெளிவருவது சுலபமாகவும் ஜனநாயகப்படுத்தப்பட்டும் உள்ள காலம் இது. ஆனால், உள்ளடக்கம்,தரம்,அழகியலில் செம்மை அதிகரித்துள்ளதாக நினைக்கிறீர்களா?

முன்பு இருந்தது பொற்காலம் அல்ல என்பதை முதலில் நினைவூட்டிக்கொண்டு இந்தக் கேள்வியை எதிர்கொள்ள விரும்புகிறேன். அறிவு ஜனநாயகப்பட்டே ஆக வேண்டும். அதேவேளையில் அளவு மாற்றம் பண்பு மாற்றமாகவும் ஆக வேண்டும். அதற்குச் சமூகத்தில் மாற்றம் நிகழ வேண்டும். தமிழ் பயிற்றுமொழியாக இல்லாத ஒரு சமூகத்தில் நிகழக்கூடிய மாற்றங்களுக்கு ஒரு எல்லை உண்டுதானே. கல்வியின் தரமும் ஆசிரியர்களின் தகுதியும் குறைந்துகொண்டே வருகின்றன. இருப்பினும் பல இளையோர் எழுத்துத் துறைக்குள் தாமாகக் நுழைந்துசாதித்து வருகின்றனர். பெண்களும் விளிம்பு நிலைச் சமூத்தினரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். இது ஒரு பெரிய வளம். அடுத்த கட்டத்திற்கு இதை நகர்த்த வேண்டும். 

(அம்ருதா, ஜூலை இதழ்)

Comments