கனவில்
ஒரு பறவை
உயரமான மரமொன்றிலிருந்து
என்னை அழைக்கிறது.
பகல் வெளிச்சத்தின்
இளஞ்சிவப்பு
சிறுகிளையிலிருந்து
ஒவ்வொரு இரவும்
என் இதயத்தை
அங்குலம் அங்குலமாக
நெருங்கும்
நெடிய நிழலிலிருந்து
உலகத்தின் விளிம்பு
முனையிலிருந்து
என்னை ஒரு பறவை
அழைக்கிறது.
நான் அதற்கு
எனது கனவைத் தருகிறேன்,
செஞ்சாயத்தைப் பூசி வர்ணம் தீட்டுகிறது பறவை.
நான் அதற்கு
எனது மூச்சைத் தருகிறேன்,
சரசரக்கும்
இலைகளாக்கிவிடுகிறது
பறவை.
பறவை
என்னை உச்சியிலிருக்கும்
மேகத்திலிருந்து
அழைக்கிறது.
தற்போதுதான் புதைத்துமூடிய
சடலமிருக்கும்
குழியில்
ஒரு
தீக்குச்சி பற்றுவதுபோலிருக்கிறது
அதன் கீச்சொலி.
•
கொட்டாவி விடும்
வாயின்
வடிவத்தில்
பறவை.
பச்சிளம் சிசுவை
ஞானஸ்தானம்
செய்விக்க
அவர்கள் குளிப்பிக்கும்
நீரைப்போல
விடிகாலையில்
வானம்
நிர்மலமாக
சுடர்கிறது,
நான் உன்னை
நோக்கி ஏறிவந்தேன்.
கீழே
பூமி சிறிதாகிறது
ஊளையிடும் வெறுமை
எனது பாதத்தைச்
சில்லிடச் செய்தது
பின்னர்
எனது இதயத்தையும்.
•
பிறகு
நான் வனத்தின்
நடுவிலுள்ள
சிறிய திட்டில்
ஒரு காதலிக்காக
மூடுபனியால் கூடமைத்து
குட்டித்தூக்கம்
இட்டேன்.
அப்போது ஒரு
கனவு கண்டேன்:
அந்தப் பறவையின்
கூர்ந்த கண்
நான் தூங்குவதை
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.
Comments