Skip to main content

சிறுமியாக இருந்த எனது பாட்டிக்கு ஜிப்சி சொன்ன குறி - சார்லஸ் சிமிக்

 


போர், நோய் மற்றும் பஞ்சம்

உன்னை

தங்களின்

செல்லப் பேத்தியாக்கும்.

நீ ஒரு ஊமைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்

குருடியைப் போலிருப்பாய்.

வெங்காயத்தையும்

இதயத்தையும்

துண்டுகளாக வெட்டி

கொதிக்கும் இரும்புச்சட்டியில் போடுவாய்.

கயிற்றால் கட்டப்பட்ட சூட்கேசில்

உன் குழந்தைகள் உறங்குவார்கள்.

உனது கணவர் 

தினசரி இரவு

உன் மார்பகங்களை

இரண்டு இடுகுழிக் கற்களென

முத்தமிடுவார்.

ஏற்கெனவே

காகங்கள் உனக்காகவும் உனது

மக்களுக்காகவும்

தங்களைச் சீர்படுத்திக் கொள்கின்றன.

 

உதடுகளில் ஈக்கள் உட்கார்ந்திருக்க

சிரிக்காமலோ

கையைக்கூடத் தூக்காமலோ

உனது மூத்த மகன்

விழுந்து கிடப்பான்.

உனது வாழ்க்கையில் நீ பார்க்கும்

ஒவ்வொரு எறும்பைப் பார்த்தும்

நீ பொறாமை கொள்வாய்

சாலையோரக் குற்றுச்செடியையும்

பார்த்து.

 

உனது உடலும் ஆன்மாவும்

வேறு வேறு

நுழைவாயில் படிக்கட்டுகளில்

அமர்ந்து

ஒரே துண்டு சுவிங்கத்தை

மென்றுகொண்டிருக்கும்.

 

குட்டித் தங்கமே?

நீ விற்பனைக்கா?

சைத்தான் கேட்கும்.

உனது பேரனுக்கு

இடுகாட்டில் குழிவெட்டுபவன்

பொம்மை ஒன்று வாங்கித் தருவான்.

உன் மரணப்படுக்கையில்கூட

உன் மனம் ஒரு குளவிக்கூடாகவே

இருக்கும்.

நீ தேவனை வழிபடுவாய்

ஆனால்

தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது

என்றெழுதி

தேவன் ஒரு அட்டையைத்

தொங்கவிடுவார்.

இதற்கு மேல் கேள்வி வேண்டாம்

அது மட்டுமே நான் அறிந்தது.

Comments