Skip to main content

மிஸ் ஜோன்ஸைச் சந்தித்திருக்கிறீர்களா? - சார்லஸ் சிமிக்

 


ஆம். ஒரு இறுதிச்சடங்கில்

மிஸ். ஜோன்ஸ்

தனது முட்டியை மூடுவதற்காக

பாவாடையை இழுத்துவிட்டுக்கொண்டே

காம்புகளின்

முனை தெரியும் அளவுக்கு

மார்பகப் பிளவை எங்களுக்கு

எதேச்சையாகக் காண்பித்துக்கொண்டிருந்தாள்.

 

முழுமையான அந்நியளாக

குதிகால் செருப்புகளில்

தடுமாறியபடி

அவளது பின்புறக் காட்சியில்

ஆர்வம்கொண்டு பார்க்கும்

துக்க வீட்டுக்காரர்களுக்கிடையே

புகுந்து புறப்பட்டு

வெளியேற வேண்டியிருந்தது.

 

நாம் இங்கே

அடிபணிந்து

உட்கார்ந்திருக்கும் வரை

அதிபராக வாய்ப்புள்ளவர்கள்

மக்களிடம் பொய்களைத் தொடரவே செய்வர்.

 

பருவநிலைகளைவிட வேகமாக

புதிய வெறுப்புகள்

பூமிப்பந்தைத் துடைத்தழிக்கும்.

நாம் இறந்தவருக்காக

பெருமூச்சு விடும்போது

சாக்கடை எலிகள்

தானியங்கிப் பண எந்திரங்களைச் சுற்றி

முகர்ந்து செல்லும்.

 

நீத்தார் சடங்கை அனுசரித்த

கருப்புடையணிந்த

சிடுசிடுப்பான கிழவர்கள்

அனைவரும்

மிஸ். ஜோன்ஸின்

மரியாதையற்ற நடத்தையை

தூற்றிவிட்டுப் போகட்டும்,

சிறைவாயில் மற்றும் சிலுவையேற்றம்.

மிஸ். ஜோன்ஸின் அழகு நீடித்து வாழும்.

 

செல்வி. ஜோன்ஸ்

உறக்கமின்மை நோயால் பீடிக்கப்பட்டவர்களுடன்

நீ பாதுகாப்பாக இருப்பாய்.

வெள்ளைத்துணியால் சுற்றப்பட்ட

ஒயின் பாட்டிலை சரித்து ஊற்றி

வறுத்த உருளைக்கிழங்குகளை

தொத்திறைச்சியுடன் சேர்த்துச் சாப்பிட்டபடி

கண்களில் ஈரம்படர

மரணத்தை மறுத்து

நீண்ட மதிய உறக்கத்தில்

சவமாகப் படுத்திருக்கும்

திறந்த பெட்டியை நீ நடந்து கடந்த ஒயிலை

அவர்கள் நினைவுகூர்வார்கள்.

ஷோக்கான குட்டி என்று

முதியவனொருவன் உரைக்கிறான்

ஆனால் அவள் யார்?

மிஸ் ஜோன்ஸ் என்று சொன்னது

விருந்தினர் புத்தகம்.

Comments