ஆஹா சாகித் அலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெய்ஸ் அஹ்மது பெய்ஸ் கவிதை ஒன்றைத் தொடர்ந்து சமீபத்தில் பெய்ஸ் அஹ்மது பெய்ஸின் பத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை அனிச்சையாக மொழிபெயர்த்தேன். பெய்ஸ் அஹ்மது பெய்ஸ் கவிதைகளை நான் தொடர்ந்து மொழிபெயர்க்கக் காரணம் என்னவென்று என்னிடம் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் அவர் நவீன கவிதை என்று நான் நம்பும் ஒன்றின் உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவரது ஏக்கம் புராதன ஒன்றின் மீதானது – அது பழையதும் அல்ல. அந்தப் புராதனத்துடன் எனக்கென்ன தொடர்பு? அந்தக் கவிதைகளை நான் ஏன் செய்கிறேன்? அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் தெரிந்தவை போலத் தோன்றி தெரியாமல் ஏன் ஆகிவிடுகின்றன? என்பது போன்ற கேள்விகள் இன்னும் வலுவாக மேலெழும்பியது.
அவரை நான் தொடர்ந்து மொழிபெயர்த்ததற்குக் காரணம், அதில் ரீங்கரிக்கும் ஒரு சோகம், ஒரு புதிர்மை எனத்தோன்றியது. நேசத்துக்குரியவள், நேசத்துக்குரியது என்று சொல்வது எல்லாம் பரிச்சயமானது போலத் தெரிகிறது. ஆனால் கவிதையை முடிக்கும்போது அது பரிச்சயமானதல்ல என்றாகிவிடுகிறது.
மது, கோப்பை, சிறை, கைவிலங்குகள், நகரம், சுவர்கள் என நமக்குத் தெரிந்த வஸ்துகளையும், நிலைமைகளையும் சொல்லி அதை புரியாத வஸ்துகளாகவும் புரியாத நிலைமைகளாகவும் மாற்றிவிடுகிறார். அவைதான் கவிதையின் அநாதி நிலைமைகள், அநாதி வஸ்துக்கள் என்று தோன்றுகிறது. அந்த அநாதிப் பொருள்களுடன் ஆடும் விளையாட்டுக்காகவே, அந்தக் கிழக்கவியான பெய்ஸையும் நோக்கி நான் ஈர்க்கப்படுவதற்குக் காரணமென்று புரிந்துகொள்ள முயல்கிறேன்.
ஈழக்கவிதைகளில் வரும் கடல் என்ற உருவகம் பிரமிள் தொடங்கி றஷ்மி, நிலாந்தன், பா. அகிலன் வரை என்னென்ன வகைகளில் எல்லாம் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது? அது ஒரு அநாதிக்கடல். அவரவரின் காதல், ஏகாந்தம், துக்கம், பலி, கொடை, ரத்தம், குரூரம், யுத்தங்களின் நிண, உதிர, மலத்தையும் காலகாலமாக அந்தக் கடல் தன்னில் கரைத்துக்கொண்டு, இப்போதைய கடலாகவும் தொனித்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.
பா. அகிலன் 2000-வது ஆண்டில் எழுதிய ‘அநாதிப் புகையிரதம்’ ரயில் மொழியில் இப்படித்தான் சமைக்கப்படுகிறது.
‘பழைய திரவம்’ தான். ‘வேறு குவளையில்’ ‘எனது வலி’யாக நவீன கவிதையில் நிரம்பிக்கொண்டே இருக்கிறது.
தமிழ் நவீன கவிஞர்களிடம் இல்லாத ஒரு பொதுத் தொன்மத்தை, ஒரு கதைப்பாடலைப் போல- ஈழக்கவிதையும் ஈழக்கவிஞர்களும் பகிர்கின்றனர். சேரன், வ ஐ ச ஜெயபாலன், சு. வில்வரத்தினம் ஆகிய மூத்தக் கவிஞர்களோடு பகிர்ந்துகொள்பவர் பா. அகிலன். அதேசமயத்தில் வலுவான ஒரு அந்தரங்கக் குரலையும், தொனியையும், உலகத்தையும் உண்டாக்கிக் கொண்ட வலுவான கவிஞர் பா. அகிலன். அகிலனின் கவிதைகளில் இருக்கும் கூர்மை, உரையாடல் லயம், மொழிச் செம்மைக்குக் காரணமாக சுகுமாரனின் கவிதைகள் பெரிய செல்வாக்கைச் செலுத்தியிருப்பதை தனது பதுங்குகுழி நாட்கள் பின்னுரையில் தெரிவித்திருக்கிறார். ஈழக்கவிதை மரபில் தாய் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கவிதை ஆளுமை செல்வாக்கு செலுத்தியிருப்பது மிக அபூர்வமான, அழகிய விளைவை பா. அகிலனிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
000
பா. அகிலன் கவிதைகள் தோற்றுவிக்கும் உணர்வை நான் ‘நாடகம் பெருக்கும் நிசப்தம்’ என்று வரையறுக்க முயல்வேன்.
எங்கே வார்த்தைகள் அன்றாடத் தன்மையை இழந்து சூட்சுமத்தன்மையைக் கொள்கின்றன? எங்கே வார்த்தைகள், வஸ்துக்களுக்கு அப்பால் பொருளுடையவை ஆகின்றன? எங்கே வார்த்தைகள் கூர்மையை, வன்மையைத் துறந்து அன்பும் அருளும் மென்மையும் பெறுகின்றன? எங்கே வார்த்தைகள் ஜெபமாகவோ, மந்திரமாகவோ, பிரார்த்தனையாகவோ, ஒப்பாரியாகவோ, ஆறாட்டாகவோ மாறுகின்றன?
தனிமையில், மரணத்தில், காதலில், நோயில், தோல்வியில், சரிவில், பிறப்பில், அழிவில், பைத்தியத்தில் கவிதையும் முன்னிலை இல்லாத நாடகமும் நிகழ்கிறது.
வரலாறுகளின் விரிசலில், யுத்தங்களின் சிதிலங்களில், பண்பாடுகளின் இடிபாடுகளில், மீண்டும் மீண்டும் கவிதையும் முன்னிலை இல்லாத நாடகமும் பிறக்கிறது.
கல்லாலல்ல;
நீராலுமல்ல;
வளியாற் கட்டுகிறேன்
விடாது பின்தொடருமொரு ஒலியால்
அவர்களுக்கொரு நினைவிடம்.
என்று எழுதிச்செல்லும் பா. அகிலனின் உத்தேசத்தில் இருப்பதெல்லாம் ஒரு பெருமூச்சுதானே!
ஈழத்தமிழர் போராட்டம், கல்லில் தொடங்கி நந்திக்கடலின் நீரில் முடிந்ததுதானே. அதற்கப்பால் என்ன?
அழுக்கே
மலவாயே
தேகமொரு படகு
படகோட்டி பாக்கியவான்
நீர்கடந்து நீர்கடந்து
நீர் திறந்து
கரை திறந்து
அவனே வெளியேறிச் செல்கிறான்.
(சரமகவிகள்)
நீர் உரைப்பது என்ன? பிறப்பின்போது நீர்க்குடம் உடைந்து வெளியேவந்து உரைப்பதுதான் என்ன? சாவின்போது நீர்ப்பானை உடைப்பதன் தாத்பரியம்தான் என்ன?
உள்ளே வருவதும் வெளியே போவதும் யாரோ?
அதற்கப்பால் என்ன? அவர்தம் நினைவுகள்தானே? அவர்தம் நினைவுகள்தானே? பெருமூச்சுகள்தானே?
காலம் தாழ்த்தி
தெருவோரம் நாய் முகரக் கிடந்த
உன் மரணம் செவிப்பட்டது நண்ப,
துக்கமாய் சிரிக்கும் உன்முகம் நினைவில்வர
தொண்டை கட்டிப்போயிற்று…
எல்லாவற்றின் பொருட்டாயும் நெடுமூச்சே
‘விதி’ என்றாகிவிட்ட சுதந்திரத்துடன்
மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம்.
000
கம்பீரமாக நிற்கும் கட்டிடங்களை அல்ல, சற்றே தாழ ஆரம்பித்து, விரிசலில் புல் முளைத்திருக்க, ஒவ்வொரு நாளும் தரையை நோக்கி மெதுவாகக் கவிழும் சுவர்களைப் போய் ஆர்வத்துடன் முகரும் எனது நாய்க்குட்டியைப் போல வரலாற்றில், வரலாற்றின் இடிபாடுகளில் கவிதை எப்போதும் வசீகரம் கொண்டிருக்கிறது .
பிறக்கமுன் பெய்த அடைமழையும்
இறந்தபின் முளைக்கவிருந்த முதலாவது புல்லும்
அநாதிகளைத் தொடுகிறது புகையிரதம்.
பா. அகிலனின் ஆரம்பகட்ட கவிதைத்தொகுதியான பதுங்குகுழி நாட்களில் உள்ள இந்தக் கவிதையில் நகரங்களை இணைக்கும் பண்பாட்டு வாகனமாய் ஒரு பெருங்காட்சியாக ரயில் வந்துவிடுகிறது. பா. அகிலன், 2009-க்குப் பிறகு எழுதிய சரமகவிகள் தொகுதியில் உணரும் அழுத்தப்பட்ட விம்மலும், வெறிச்சென்றிருக்கும் பிணவறையின் நிசப்தமும் அல்ல.
‘வரலாற்றின் பெரும் மௌனத்துக்கு முன்னால் கடல் கொள்ளவில்லை ஒரு யுகத்தை’ அப்போது.
ரயிலும் ரயில் செல்லும் நிலமும் வீடுகளும் கட்டுக்கதைகளை விளம்பும் தேநீர்க் கடைகளும் அநாதிப் புகையிரதம் கவிதையில் பெரும் ஓவியமாக, காட்சியாக எனக்கு மாறுகிறது. 1980-களில் ஈழப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து துயரங்கள் உக்கிரம் பெற்றுவிட்ட வேளையிலும், 2000-ல் எழுதப்பட்ட இக்கவிதையில் ஏகாந்த அம்சம் இன்னும் மிச்சமுள்ளது.
இரவின் மூலையில்
நாடோடி எருதுகளுடன் ஒரு பாதி நிலா
தண்டவாளங்களின் பின்னால்
எனது வீடு கூடுபோல
காட்டுப்பாடல் ஒரு புகையிரதம்
கட்டுக்கதைகளின் இரவு தேநீர்க்கடைகளில்
புகையிரதக் கூவலின் முடிவற்ற தெருக்களில்
ஒட்டுப்பீடியுடன்
கடவுளின் எதுவுமறியாத மந்தகாசம்
பழைய திரவம்
வேறு குவளையில்
எனது வலி
பிறக்கமுன் பெய்த அடைமழையும்
இறந்தபின் முளைக்கவிருந்த முதலாவது புல்லும்
அநாதிகளைத் தொடுக்கிறது புகையிரதம்.
பிறக்குமுன் பெய்த அடைமழை போல 2000-ல் எழுதப்பட்ட தொகுப்பான பதுங்குகுழி நாட்களைப் பார்க்கிறேன். இறந்தபின் முளைக்கவிருந்த முதலாவது புல்லுக்கான எத்தனமாக சரமகவிகளை வாசிக்கிறேன்.
சரமகவிகள் கவிதைகளிலோ, ரத்தமும் மலமும் வேறு உடல் திரவங்களும் சேறாக கைகளில் படும் உலராத உடல்களின் மரண முனகல்களாகிவிடுகிறது.
ஒரு பண்பாட்டு ரயில் நின்றபிறகு, அதன் நிலையங்களும் புல்முளைத்த நினைவுகளாகிவிட்ட பிறகு நிலையம் இருந்தும் இல்லாமல் இருக்கும் நினைவின் அழியாச் சித்திரமாக ‘அநாதிப் புகையிரதம்’ ஆகிவிடுகிறது.
இப்படித்தான் ஈழக்கவிதைக்கு, அதன் மொழிக்கு யுத்தமும் மரணங்களும் பாரிய வன்முறைகளும் அதன் நினைவுகளும் ஒரு பிரமாண்ட நாடகச்சீலையை, ஒரு அநாதிப் பாடலைப் பரிசளித்துள்ளன – சாதத் ஹசன் மண்டோவுக்கு சிலுவையாகப் பிரிவினை பரிசளிக்கப்பட்டதுபோல்.
000
ஈழப்போராட்டம் ஆயுதப்போராட்டமாகத் தீவிரமடைவதற்கு முன்பே ‘வீடு’ நோக்கிய தேடல் பிரமிளிடம் ஆரம்பம் கொண்டுவிட்டது. தமிழ் நவீன கவிதைக்கு பிரம்மராஜனுக்கு முன்னர் ‘கடல்’ என்ற உருவகத்தைச் செழுமைப்படுத்தியவர் பிரமிள்.
‘துருப்பிடித்த
இரும்புக்கோடுகளினோடே
சிதறும்
பயனற்ற
உப்புநீர்ப் பாறைகள்’
என ‘அற்புதம்’ கவிதையை ஆரம்பிக்கும் பிரமிளின் கவிதை, சென்னை துறைமுகத்தின் அருகே உள்ள மண்ணடி சாலைகளைப் பற்றிப் பேசுகிறதா. கொழும்பின் துறைமுகத்தைப் பேசுகிறதா என்று எனக்குத் தோன்றியிருக்கிறது.
கவிதையில் ஒரு அகதியின் நிர்க்கதித்தன்மையும், ஒரு மெய்யான வீட்டை நோக்கிய ஏக்கமும் பிரமிளிடமிருந்தே தொடங்குகிறது…
சுவர்கள்
மனசின் இருண்ட அனுஷ்டானங்கள் என்னை வீடுதிரும்ப
விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன.
இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச் சந்தையில் அலைகிறது.
வீடுதிரும்பும் வழி தெரியவில்லை.
என்று ஆரம்பிக்கிறார் பிரமிள்.
ஒரு மெய்வீட்டுக்கான தேடலை துயரகரமாக ‘பதுங்குகுழி நாட்கள்’ தொகுதியின் வழியாக முடித்துவைக்கிறார் அகிலன்.
‘அறியீர்கள் நீங்கள்
வரலாற்றின் மூத்த வேர்களில்
எனக்கொரு வீடு இருந்ததை
கவர்ந்து,
எனது தெருக்கள் தூக்கிலிடப்பட்டதை
புனைவுகளின் பெயரால்
முடிவற்று, சீவியெடுக்கும் குருதியின் வலியை’
(புனைவுகளின் பெயரால், பதுங்குகுழி நாட்கள் தொகுப்பு)
குழந்தைகளும் வாசிக்க இயலக்கூடிய மொழியில் கவி பிரமிள் எழுதிய சுவாமி அப்பாத்துரை குறித்த ‘தியானதாரா’ நூலில் அவருக்கு தீட்சை அளித்த கடையிற்சுவாமிகள், பா. அகிலனின் ‘முந்தைப் பெருநகர்’ கவிதையில் யாழ்ப்பாணக் கடைத்தெருவில் சுற்றித்திரிந்த கதாபாத்திரமாக வருகிறார்.
பழைய மகத்துவ நகரமும், இடிபாட்டில் சிதைந்த நகரமும் சந்திப்பதைப் போல பிரமிளும் பா. அகிலனும் இந்த இடத்தில் சந்திக்கின்றனர். ழான் ழெனேவுக்கு சித்தர் பரிமாணம் ஒன்றையும் தந்துள்ளார் பா. அகிலன்.
பிரமிளிடம் எல்லாமே உலகளாவிய பொதுத்தன்மை கொள்கிறது. பா. அகிலனின் மொழியில் பிரெஞ்சு தத்துவவாதி உட்பட எல்லாமுமே பண்பாட்டு சுயத்தன்மை கொண்டுவிடுகிறது.
000
பதுங்குகுழி நாட்களையும் அதற்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு, முள்ளிவாய்க்காலையடுத்து எழுதப்பட்ட சரமகவிகள் கவிதைகளையும் ஒன்றுக்கொன்று எதிரொலிப்பதாகவும் ஒன்றையொன்று நிரப்புவதாகவும் நான் படித்தேன்.
போர் உக்கிரம் கொண்ட பதுங்குகுழி நாட்களில் இயேசு ஒருமாதிரி வெளிப்படுகிறார். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பிறகு அவரைப் பெற்ற மரியாள் வேறுவிதமாக வெளிப்படுகிறாள்.
ஒட்டுமொத்த ஈழவரலாற்றையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் திரைச்சீலையாய், ஓவியக்கித்தானாக ஆகிவிடுகிறது மரியின் சீலை. நிலாந்தனில் தனிப்பெரும் தமிப் படிமமாக ஆகிய பெண்களின் சீலை பா. அகிலனில் மரியாளின் பேராடையாக மாறுகிறது.
மூன்றாவது வெள்ளி நள்ளிராவைக் கடக்கையில்
திரும்பினாள் மரியை
யாருக்காவது தெரியுமா?
பட்டினங்களுக்கிடையில்
நெட்டுயிர்த்து நீண்டது அவளாடை.
சீடர்களில்லை, அயலாரில்லை
உற்றாரில்லை, பகையாருமில்லை
காற்றுறைந்த கரிய புற்களை
தகட்டுநீரில் செத்துச் சிதம்பிய நிலாவை
அவள் கடந்த பின்னாலெழுந்தது
யுகங்களை நடுவாய்ப் பிளக்குமொறு பிலாக்கணம்.
(சரமகவிகள், பக்கம் 28)
000
எங்கேயென்று சொல்
இல்லை என்பதையாவது சொல்!
என்ற குரல்தானே இன்றைய பாலஸ்தீனம் வரை தொடரும் நமது மனித நாடகம்.
இல்லை, தெரியாது என்ற விதிவசப்பட்ட, ஒப்புக்கொடுக்கும் வெளிப்பாட்டை, சொற்களை பா. அகிலனின் கவிதைகளில் அதிகம் பார்க்கமுடிகிறது. ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை என்று இன்மையை நாம் தொடர்ந்து மீட்டிக்கொண்டேயிருக்கிறோம்.
இருப்பின் அநிச்சயத்திலிருந்து இன்மையை நோக்கி சுபாவமாய் அல்ல, துயர அழுத்தத்துடன், அதேவேளையில் ஆடம்பரமாக அல்ல, சிக்கனத்துடன் நகரும் மொழி பா. அகிலனுடையது.
பதுங்குகுழி நாட்களில் இப்படித் துவங்குகிறது இன்மையை நோக்கிய அவரது தப்படிகள்.
யாரோ ஏதோ
சில நட்சத்திரங்கள்
துயர நிலவு
யாரோ மட்டும் வருகிறேன்.
கையில் பற்றியிருந்த கொண்டல் மலர்களும்
காற்றில் அலைவுற்ற கூந்தலுமாய்
குரூர வெளியில்
உன்னையும் பறிகொடுத்தாயிற்று…
“எங்கே போகிறாய்” காற்றில் யாரோ ஒலிக்கவும்
“தெரியாது…”
வாழ்வைச் சுற்றிச் சத்தம் இருக்கிறது. அதனால்தான் செத்தவீட்டுக்குப் போனேன், செத்தவீடாகவே தெரியவில்லை என்று எழுதுகிறார் நகுலன். மரணத்தைச் சுற்றி நிசப்தம்தான் இருக்கிறது. அந்த நிசப்தத்தை, நிசப்தத்தின் கார்வையை தனது கவிதையை வாசகனுக்குக் கடத்திய பிறகும் உண்டாக்க வல்லவர் பா. அகிலன்.
‘இதயவானில் உதய நிலவே, எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்’ என்ற ஏ. எம். ராஜா, பி. சுசீலாவின் பாடல் அந்தக் காற்றில் ஒலித்திருக்குமென்றால் இந்தக் கவிதைக்கு கூடுதல் அழுத்தமும் நினைவுகுழம்பும் அபத்தமும் வந்துவிடுகிறது.
அகிலன் தனது கவிதையில் உண்டாக்கும் இன்மை அனுபவம், சரமகவிகள் தொகுதியில் ‘தாயுரை’ வரிசைக்கவிதைகளில் உச்சம்பெற்றுவிடுகிறது.
தாயுரை 02
வெறிச்சோடின ஒரு நூறாயிரம் ஆண்டுகள்
இனிக் காரணமில்லை
காத்திருக்க எவருமில்லை என்றபோதும்
பின்னும் கிடந்து அழுந்தின நாட்கள்
தாய் வெந்து முதுமை கிடந்த இடத்தில்
அவனில்லை
அவரில்லை
எவருமில்லை
பாழ்.
000
அழிந்த பண்பாட்டின் நினைவு ஒரு அறிவுத்தோற்றவியலின் நினைவும்கூட. அழிந்த நகரம் ஒரு அறிவுசேகரத்தின் அந்தமும்கூட.
அந்தவகையில் பா. அகிலன் ‘பதுங்குகுழி நாட்கள்’ தொகுதியில் படைத்த ‘முந்தைப் பெருநகர்’ கவிதையையும், 2009-க்குப் பிறகு சரமகவிகள்-ல் எழுதியிருக்கும் ‘இரண்டு தலைநகரங்கள்’, ‘பேராடை’ கவிதைகளையும் தமிழ் அறிவு சாத்தியங்களின் கொடைகள் என்றே கூற இயலும்.
அகிலன் தீட்டியிருக்கும் அழிந்த நகரங்களின் சாயல்கள் ஹம்பியைப் போல உலகின் அழிந்த நகரங்கள் பலவற்றின் தோற்றத்தைக் கொள்கிறது.
அந்தகனாக இருந்த ஒரு யாழ்பாடிக்கு பரிசாக முன்னொரு காலத்தில் வழங்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் கதையிலிருந்து ‘முந்தைப் பெருநகர்’ ஆக ‘பதுங்குகுழி நாட்கள்’ தொகுதியில் நகரங்களின் கதையை, அறிவுசேகரங்களின் கதையை எழுதத் தொடங்கிய பா. அகிலன், சரமகவிகளில் ‘இரண்டு தலைநகரங்கள்’, ‘பேராடை’, பெருநிலம்: மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம் – ஆக கதையை முடிக்கிறார்.
சரமகவிகள் தொகுதியில் உள்ள நகரை, துயரங்களும் பீரங்கிகளும் தாக்குகின்றன. ரத்தம் பெருக்கெடுக்கும் தெருக்களாய் இருக்கிறது அந்நகரம்.
பேராடை கவிதையில் பல அடுக்களிலான நினைவின் பேராடையாக அந்த நகரம் ஆகிறது. உடலே பெருநகரமாய், பெரும் கலாசாரத் தொகுதியாய் ஆகிவிடுகிறது.
பெருநிலம் :மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம் கவிதையில் தொல்லியலாளனாகவும் மாறிய கவிஞன் தோண்டித் தோண்டி அடியடுக்களுக்குள் போகிறான்
அங்கே உள்ள நகரம் வேறு…
சாம்பரால் ஆன வெம்மை அடங்கா ஒரு புயற்பரப்பு
நீங்கி
மேலும் நடந்து கீழிறங்கினால்
அழுகையும் கதறலும் பரவியொட்டிய ஒலியடுக்கு
அதற்கும் கீழே
முடிவயடையாத குருதியால் ஒரு திரவப்படுக்கை
அதற்கும் கீழே
கெட்டிப்பட்டு முள்ளடர்ந்து மண்டிய நினைவடுக்கு
அதற்குக் கீழே
கெட்டிப்பட்டு முள்ளடர்ந்து மண்டிய நினைவடுக்கு
அதற்குக் கீழே
மரங்களின் வேர்களும் முட்டாதவொரு மௌனப்பரப்பு
நீங்கி இன்னும் மேல் நடந்து கீழிறங்கினால்
ஒரு முதியபெண்
காலங்களை விரித்தெறிந்த தோலாசனத்தின் மீதொரு
துறவிப்பெண்.
000
“அகிலனது கவிதைகளில் அனுபவங்களின் கொடூரம் புதிய மொழியை, புதிய சொல்முறையைச் சிருஷ்டித்துள்ளதைக் காணலாம். பழகிய அனுபவங்கள் புதிய அர்த்தங்களைக் கொள்கின்றன” என்று மறைந்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் வழியாக குருத்து பதிப்பகத்தின் உரிமையாளன் மற்றும் எனது நண்பனான சண்முக சுந்தரம் வெளியிட்ட அழகிய பதிப்பான ‘பதுங்குகுழி நாட்கள்’ வழியாக தமிழ்நாட்டில் சிறுபத்திரிகை வாசகர்களுக்கு அறிமுகமான ஈழக்கவிஞர் பா. அகிலன்.
ஓவியம், நாடக அரங்கில் ஈடுபாடு கொண்ட பா. அகிலன், “கவிதைகளை ஒலிநிலைப்படுத்துவதால் பெறப்படும் நாடகீய அனுபவம் தனது கவிதைகளுள் செரிக்கப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்” என்கிறார். உள்நகரும் ஒலிலயமும் ஆற்றுதலுக்கான சந்தர்ப்பங்களும் இதன்வழி இக்கவிதைகளில் தொழிற்படுகின்றன என்கிறார். இவரது கவிதைகளினுடாக சனாதனின் ஓவியத்தை அந்நூலின் அட்டையில் பார்த்தது எனக்கு இன்னும் தனித்தவொரு அனுபவமாக இருக்கிறது.
துயரம் மற்றும் புகைமூட்டத்தின் தனிநபர் சித்திரங்களாக ‘பதுங்குகுழி நாட்கள்’ தொகுதியின் வழியாக வலுப்பட்ட பா. அகிலனின் கவிதைப்பயணம் சைவம், கிறிஸ்தவம், சித்தர் மரபு, மகாபாரதம், தாலாட்டு, இரங்கல் பாடல்களின் கனம்பெற்று சரமகவிகளாக, பொதுக்குரலாக மாறுகிறது.
12-ம் நூற்றாண்டுப் படைப்பான கலிங்கத்துப் பரணியில் ‘இழிமை’ மற்றும் ‘அருவருப்பு’ பண்பு எப்படி கவிதைப்பண்பாக மாறியதோ அதை நவீன கவிதையில் பா. அகிலன், சரமகவிகள் வழியாக சாதித்துள்ளதாக அவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கீதா சுகுமாரன் கூறுகிறார்.
000
Comments