Skip to main content

பக்தி - சார்லஸ் சிமிக்


நூறு வயதுள்ள வீட்டுப்பணியாளர்கள்

வெள்ளிப் பாத்திரங்களைத் துடைத்து

மெருகூட்டுகின்றனர்.

சிறுமியைப்போல உடையணிந்த

குட்டி எஜமான்

படுக்கையறை சிறுநீர் கலத்தில்

சிறுநீர் கழித்ததை நினைவுகூர்ந்தனர்.

 

தற்போது குட்டி எஜமான்

மேடத்துடன் சேர்ந்து

வேட்டைக்குப் போயிருக்கிறார்.

இன்று மதியம்

வீட்டுக்கு வருகைதந்த

அருள்திரு ரெவரெண்ட்

கனிவாக அவர்களை விசாரித்தார்.

அவரது இளஞ்சிவப்பு விரல்கள்

நெளியும் பன்றிக்குட்டிகளைப் போன்றிருந்தன.

 

மழைபெய்யும் நாட்களில்

கணப்பில்

தீ எரிந்துகொண்டிருக்க

சயாமீஸ் பூனைகள் கூட

ஆசுவாசமாய் அமர்ந்து

மெழுகுபூசிய மீசை முனைகளுடன்

சிடுசிடுப்பான முகத்துடன்

கனத்த படச்சட்டகத்திலிருக்கும்

தாத்தாவை

வெறித்துக்கொண்டிருக்கவே விரும்புகின்றன.

 

மரியாதையை

அவர்கள் வேகமாகக் கற்றுக்கொண்டனர்

அதுவே அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது.

பண்ணைச் சிறுவர்களாகவும்

பண்ணைச் சிறுமிகளாகவும் இருந்தவர்கள்

பெரிதாகவும் சிறிதாகவும்

வெள்ளிக்கரண்டிகளில்

தாங்கள் தெரிவதை

ரகசியமாய் நோட்டமிடுகின்றனர். 

Comments